Published : 01 Apr 2019 06:27 AM
Last Updated : 01 Apr 2019 06:27 AM

காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய காலத்தில் பழகியவர்களுடன் உறவை புதுப்பிக்கும் வடசென்னை வேட்பாளர் மவுரியா

வடசென்னையில், தான் காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய காலத்தில் பழகியவர்களை சந்தித்து உறவை புதுப்பிக்கும் பணியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வடசென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஏ.ஜி.மவுரியா ஈடுபட்டு வருகிறார்.

வட சென்னை மக்களவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடுபவர் ஏ.ஜி.மவுரியா. ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான இவருக்கும் வடசென்னைக்கும் நீண்டகால உறவு உண்டு. இவரது பெரும்பான்மையான காவல்துறை பணி காலத்தை வட சென்னையில் கழித்துள்ளார். இவர் நேற்று ராயபுரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அவரை அடையாளம் கண்டு கொண்ட அப்பகுதியைச் சேர்ந்த டீக்கடைக்காரர் எம்.சீனிவாசன் தன்னை அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். சீனிவாசனிடம் சில நிமிடங்கள் பேசியபின், மவுரியா பிரச்சாரத்தைத் தொடர்ந்தார்.

ரவுடிகளை ஒழிக்க நடவடிக்கை

பிரச்சாரத்துக்கு நடுவே அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நான் 1990-ம் ஆண்டு எண்ணூரில் துணை காவல் கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்தேன். அப்போது ஆந்திர கொள்ளைக் கும்பலை ஒடுக்குவதில் சிறப்பாகப் பணியாற்றினேன். அதைத் தொடர்ந்து, 1992-ம் ஆண்டு சென்னையில் ரவுடிகளை ஒழிக்க அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, திறமையான அதிகாரிகளை சென்னையில் நியமித்தார். அப்போது வண்ணாரப்பேட்டை உதவி ஆணையராக நியமிக்கப்பட்டேன். அதன் பின்னர் அடையாறுக்கு மாற்றலாகி, மீண்டும் வண்ணாரப்பேட்டைக்கு வந்தேன். துணை ஆணையராக பதவி உயர்வுபெற்று, வண்ணாரப்பேட்டை காவல் சரகத்திலேயே பணியாற்றினேன்.

அந்தக் காலகட்டத்தில் ரவுடிகளை ஒழிப்பதற்காக ‘சிறார்கள் எப்படி ரவுடிகளாக மாறுகிறார்கள்’ என்பது குறித்து ஆய்வு செய்து, சிறார்கள் உணவுக்காகவும், பணத்துக்காகவும் ரவுடிகளிடம் தஞ்சமடைவதைத் தடுத்திருக்கிறேன். பலருக்கு வேலைஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறேன்.

குடிநீர் பிரச்சனை

வட சென்னையில் ரவுடிகளும், குற்றங்களும் குறைந்திருப்பதற்கு நானும் ஒரு காரணம். ஆனால் அன்றிருந்த குடிநீரில் கழிவுநீர் கலப்பு போன்ற பிரச்சினைகள் இன்றும் வட சென்னையில் தொடர்கிறது. அதற்கெல்லாம் தீர்வு காண்பதற்காகவே, புதிய அவதாரம் எடுத்து வட சென்னை தொகுதியில் போட்டியிடுகிறேன்.

நான் தற்போது வாக்கு சேகரித்து வரும் பகுதிகளில், எனது பணி காலத்தில் உடன் பழகியவர்கள், என்னைச் சந்தித்து அறிமுகப்படுத்திக் கொண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நானும், எனக்கு நினைவில் உள்ள பலரை தேடிச் சென்று அவர்களுடனான உறவை புதுப்பித்து வருகிறேன். இது எனக்கு பலமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x