Published : 17 Apr 2019 05:00 PM
Last Updated : 17 Apr 2019 05:00 PM
கரூர் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், கரூர் மாவட்ட ஆட்சியருமான த.அன்பழகன் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக இந்திய மற்றும் தமிழக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் இறுதிக்கட்டப் பிரச்சாரம் செய்வதற்கான இடம், நேரம் ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப்படுவதாக திமுக மாவட்டப் பொறுப்பாளர் வி.செந்தில் பாலாஜி, காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி உள்ளிட்டோர் கடந்த 14-ம் தேதி கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே 16-ம் தேதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை பிரச்சாரம் செய்ய அனுமதி பெற்றனர்.
இந்நிலையில், மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த 15-ம் தேதி மாலை மாவட்ட ஆட்சியர் த.அன்பழகனைச் சந்தித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம், ''16-ம் தேதி மதியம் 2 மணிக்கு வெங்கமேடு அண்ணா சிலையில் தொடங்கி கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே மாலை 5 மணிக்கு அதிமுக வேட்பாளரின் பிரச்சாரம் முடிக்கப்படும்'' என்றார்.
கிருஷ்ணராயபுரம் கடைவீதியில் நேற்று முன்தினம் பிரச்சாரத்தைத் தொடங்கிய காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தேர்தலை நிறுத்த மாவட்ட ஆட்சியர் சதி செய்வதாக தனது பிரச்சாரத்தின் அனைத்து இடங்களிலும் குற்றம் சாட்டினார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில், ''திமுக மாவட்டப் பொறுப்பாளர் வி.செந்தில் பாலாஜி உத்தரவின் பேரில், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி அறிவுறுத்தலின்பேரில் வழக்கறிஞர் செந்தில் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கடந்த 15-ம் தேதி இரவு 11.45 மணிக்கு தனது வீட்டுக்கு முன் குவிந்திருந்தனர். மேலும் வீட்டுக்குள் நுழைய முயன்றனர்.
இதனால் தனக்கும், தனது குடும்பத்தாருக்கும் அச்சுறுத்தல், உயிருக்குப் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டது காவல் கண்காணிப்பாளர் வந்து தன்னை மீட்டதாகவும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம் ஆட்களை அனுப்பி மிரட்ட வேண்டும் எனக்கூறி தனது எதிர்ப்பையும், மறுப்பையும் தெரிவித்ததாகவும், இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்தி உள்ளோம்'' என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவில் பிரச்சாரம் செய்வது தொடர்பாக அதிமுக, திமுக உயர் நீதிமன்றத்தை அணுகிய நிலையில் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் இரு கட்சிகளும் பிரச்சாரம் செய்ய தேர்தல் நடத்தும் அலுவலர் தடை விதித்தார்.
பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் துணை ராணுவப் படை, போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அதிமுக கோவை சாலையில் உள்ள தேர்தல் பணிமனை பகுதியிலும், திமுக தாந்தோணிமலையிலும் பிரச்சாரத்தை முடித்தனர்.
பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் தேர்தல் பணிமனை வந்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, முதல் நாளிரவு மாவட்ட ஆட்சியருடன் அவர் பேசிய ஆடியோவை வெளியிட்டார்.
அதில் ஆட்சியர், "இரவு நேரத்தில் என் வீட்டு முன் சட்டவிரோதமாக அச்சுறுத்தும் வகையில் ஆட்கள் கூடியுள்ளனர். இதுகுறித்து புகார் அளிக்கப் போகிறேன். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து இதுபோல செயல்பட்டால் தேர்தலை ரத்து செய்யப் பரிந்துரை செய்வேன்" என்கிறார்.
அதற்கு பதிலளித்த ஜோதிமணி, "தேர்தலை நிறுத்துவது சாதாரண விஷயமல்ல. பிரச்சாரத்தில் 13.5 லட்சம் மக்களைச் சந்தித்துள்ளோம். நீங்கள் நடுநிலையாகச் செயல்பட மறுக்கிறீர்கள். ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறீர்கள். தேர்தலை நிறுத்துவதுதான் உங்கள் நோக்கம் என்பது தெளிவாகிவிட்டது" என்கிறார்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடமும், தமிழக தேர்தல் ஆணையத்திடமும் திமுக சார்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் மாவட்ட ஆட்சியர் ஆடியோ இணைத்து, கரூர் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான த.அன்பழகன் தொடர்ந்து ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறார். எனவே கரூரில் தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT