Published : 30 Apr 2019 09:32 AM
Last Updated : 30 Apr 2019 09:32 AM
''முட்டாள்தனமான கேள்வியை திரும்பத் திரும்பக் கேக்கறீங்க?’’ என்று மதுரையில் செய்தியாளர்களிடம் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டென்ஷனுடன் தெரிவித்தார்.
அமமுகவின் தங்க தமிழ்ச்செல்வன் நேற்று, ’’ஓ.பன்னீர்செல்வம் பாஜகவுடன் ரகசியக் கூட்டு வைத்திருந்தால்தான், அவரைப் பதவியில் இருந்து விலகச் சொல்லி நடவடிக்கை எடுத்தோம். இப்போது, வருகிற மே 23ம் தேதிக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம், பாஜகவில் இணையப் போகிறார்’ என்று தெரிவித்தார்.
இந்நிலையில், மதுரைக்கு வந்த துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவருடன் அமைச்சர் செல்லூர் ராஜூ, கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்டோர் இருந்தனர்.
‘நீங்கள் பாஜகவில் சேரப்போகிறீர்கள் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியிருக்கிறாரே?’ என்று நிருபர்கள் கேட்டனர். இதைக் கேட்டு கே.பி.முனுசாமி, ‘இப்படியொரு கேள்வியை கேட்கலாமா? ஓ.பன்னீர்செல்வம் ஒரு கட்சியின் தலைவர். அவரைப் போய் இன்னொரு கட்சியில் சேரப்போகிறீர்கள் என்று கேட்கிறீர்களே. உங்களை இப்படி யார் கேட்கச் சொன்னார்கள்? பத்திரிகைகளுக்கு என நாகரீகம் இருக்கிறது. இப்படியெல்லாம் கேள்வி கேட்டு, உங்கள் மதிப்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள்’ என்று தெரிவித்தார்.
இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம், ‘தர்மயுத்தம் தொடங்கிய காலத்தில் இருந்து தங்க தமிழ்செல்வனின் கேள்விக்கெல்லாம் நான் பதிலே சொல்லுவதில்லை. இப்படி தரம் தாழ்ந்தும் நாங்கள் பேசமாட்டோம். பாஜகவில் சேருவேனா என்று எப்படிக் கேட்கலாம். இது, முட்டாள்தனமான கேள்வி. அடிமுட்டாள்தனமான கேள்வி. இதையே திரும்பத்திரும்பக் கேட்கிறீர்கள். வேறு கேள்விகள் இருந்தால் கேளுங்கள்’ என்று தெரிவித்தார்.
இதையடுத்து, ‘துரைமுருகன் விரைவில் இந்த ஆட்சி கவிழும்’ என்று சொல்லியிருக்கிறாரே என்று கேட்கப்பட்டது. ‘துரைமுருகன், எப்போதும் கனவுலகிலேயே சஞ்சரித்துக் கொண்டிருப்பவர். அவருடைய கருத்துகள், காலத்துக்கு ஒத்துவராத கருத்துகள்’ என்றார்.
’உள்ளாட்சி தேர்தல் சட்டப்படி நடைபெறும். அப்போது கலந்து பேசி, கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்’ என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT