Published : 03 Apr 2019 01:50 PM
Last Updated : 03 Apr 2019 01:50 PM

நகராட்சி அதிகாரியை தாக்கிய திமுக ஒப்பந்ததாரருக்கு வலை

செங்கல்பட்டை சேர்ந்த இளையராஜா திமுக பிரமுகர். இவர், செங்கல்பட்டு நகராட்சியில் தனது தந்தை பெயரில் ஒப்பந்ததாரராக பதிவுசெய்து, நகராட்சியின் பல்வேறு பணிகளை செய்துவருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், இளையராஜாவிடம் தொழில் வரி செலுத்துமாறு மேலாளர் முனுசாமி அறிவுறுத்தினார். அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த இளையராஜா மேலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நகராட்சி ஆணையரிடம் மேலாளர் புகார் தெரிவித்தார். தொடர்ந்து இருதரப்பினரிடமும் ஆணையர் விசாரணை நடத்தினார். அவர் முன்னிலையிலேயே மேலாளர் முனுசாமியை இளையராஜா 2 முறை கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் தட்சணாமூர்த்தி அளித்த புகாரின்பேரில், செங்கல்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து, இளையராஜாவை தேடி வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி ஆணையர் தட்சணாமூர்த்தி கூறியதாவது:இளையராஜா என்பவர் அவரது தந்தை வீரபாண்டியன் பெயரில் ஒப்பந்ததாரராக பதிவு செய்துள்ளார். ஒப்பந்ததாரர் என்பதால் ஆண்டுதோறும் தொழில் வரி செலுத்த வேண்டும். அவர் தொழில் வரி செலுத்த தாமதம் ஆனதால், மேலாளர் முனுசாமி உடனடியாக வரியை செலுத்த உத்தரவிட்டார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக இருவரும் என்னிடம் கடந்த 29-ம் தேதி புகார் தெரிவித்தனர்.

போலீஸாரிடம் புகார்

அன்று மாலை இருவரையும் அழைத்து விசாரணை செய்து கொண்டிருந்தபோது என் முன்பே முனுசாமியை 2 முறை, இளையராஜா கன்னத்தில் அறைந்தார். பின்னர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து வெளியேறினார். இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். செங்கை மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குநருக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை குற்றவாளி கைது செய்யப் படவில்லை என்றார்.

டெபாசிட் தரவில்லைஇது தொடர்பாக ஒப்பந்ததாரர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:இளையராஜாவுக்கும் மேலாளருக்கும் ஏற்கெனவே கருத்துவேறுபாடு இருந்துள்ளது. அவரின் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பணி செய்த ஆவணங்களை மேலாளர் தொலைத்துவிட்டார். பணி செய்த பின்பு டெபாசிட் தொகையை திருப்பித் தர வேண்டும், ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக நகராட்சியில் உள்ள எந்த ஒப்பந்ததாரருக்கும் டெபாட் தொகை திருப்பித் தரவில்லை. இளையராஜா கடந்த ஆண்டு தொழில் வரி செலுத்தியுள்ளார். அதற்கு இன்னும் பில் வழங்கவில்லை. எதற்கு எடுத்தாலும் பணம் கேட்டு அதிகாரிகள் நச்சரிக்கின்றனர். இருந்தாலும் அதிகாரியை தாக்கியது தவறுதான். நகராட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக பலமுறை ஆணையரிடமும், நகராட்சி இயக்குநரிடமும் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடந்திருக்காது என்றார்.

கண்டன ஆர்ப்பாட்டம்

இதுகுறித்து தமிழ்நாடு நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் மு.தாமோதரன் கூறியதாவது:தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய 2 இடங்களில் ஒப்பந்ததாரர்களால் மேலாளர் மற்றும் பணி ஆய்வாளர் தாக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கோவில்பட்டி நகராட்சியில் குடிநீர் நிலுவை தொகை வசூல் செய்த பணியாளர் தாக்கப்பட்டுள்ளார். இதனை அலுவலர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இது தொடர்பாக தமிழகம் முழுவதும் 124 நகராட்சிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாக்குதல் தொடர்பாக போலீஸில் உடனடியாக புகார் அளிக்கப்பட்டது.

ஆனால், போலீஸார் தேர்தலை காரணம் காட்டி குற்றவாளியை கைது செய்யாமல் காலம் தாழ்த்துகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவரை உடனடியாக போலீஸார் கைது செய்ய வேண்டும். போதிய நடவடிக்கை இல்லை எனில், உயர்நிலை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் சங்கம் இணைந்து போராட்டத்தில் ஈடுபட நேரிடும். மேலும் நகராட்சி அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மிரட்டுவது வாடிக்கை

இளையராஜா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே நகராட்சி பணி ஆய்வாளரை தாக்கியுள்ளார். இவருக்கு சாதகமாக அதிகாரிகள், ஊழியர்கள் நடந்துகொள்ளவில்லை எனில் அவர்களை தாக்குவது, உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்புவது, ஆட்களை வைத்து மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x