Published : 12 Apr 2019 12:00 AM
Last Updated : 12 Apr 2019 12:00 AM
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி, பரமக்குடி சட்டப்பேரவை தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் நகர் பகுதிகளில் மட்டும் பெயரளவுக்கு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் நிலைதான் உள்ளது. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளராக சென்னையைச் சேர்ந்த சூரிய ஒளி மின்திட்ட தொழிலதிபர் ஜெ. விஜயபாஸ்கர், பரமக்குடி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பரமக்குடியைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் சங்கர் ஆகியோர் நிறுத் தப்பட்டுள்ளனர்.
இதையடுத்து விஜயபாஸ்கர் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்தபோது, ராமநாதபுரம் மாவட்ட கட்சி நிர்வாகிகளையே அவருக்குத் தெரியவில்லை. அதே நிலைதான் இன்று வரையும் நீடிக்கிறது. அவருடன் பிரச்சாரம் செய்யவும், கட்சி நிர்வாகிகள் அதிகளவில் செல்லவில்லை. அதனால், அவர் ராமநாத புரத்திலேயே முடங்கிக் கிடப்பதாக கட்சியினர் கூறுகின்றனர். பெயருக்கு இரண்டு, மூன்று வாகனங்களில் பதிவு செய்யப்பட்ட ஆடியோ பிரச்சாரம் ராமநாதபுரம் நகர்ப் பகுதியில் நடக்கிறது. மற்றபடி, வேட்பாளர் மக்களைத் தேடி பிரச்சாரம் செய்வதைக் காண முடியவில்லை. பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ உக்கிரபாண்டியன் நிறுத்தப்படுவதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவருக்கு பதிலாக பிசியோதெரபிஸ்ட்டான சங்கர் நிறுத்தப்பட்டார். இவரும் பரமக்குடி நகரில் மட்டும் அவ்வப்போது துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பதோடு பிரச்சாரத்தை முடித்துக் கொள்கிறார்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 3000-க்கும் மேற்பட்ட கிராமங்களும், பரமக்குடி தொகுதியில் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களும் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு கட்சித் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் சென்று கிராமசபைக் கூட்டங்களை நடத்தினார். ஆனால், மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் கிராமங்கள் பக்கமே தலைகாட்டவில்லை. கிராமங்களிலும் அந்தக் கட்சி வேட்பாளர்கள் யார் என்று தெரியவில்லை. இதனால் தொகுதியில் எங்களுக்குப் போட்டியாக யாருமே கிடையாது என அதிமுகவினரும், திமுகவினரும் கூறி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT