Published : 16 Apr 2019 12:40 PM
Last Updated : 16 Apr 2019 12:40 PM
2011-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி திருவாரூரில் போட்டியிட்டார். சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இரண்டாம் முறையாக 2016-ம் ஆண்டிலும் திருவாரூரில் கருணாநிதியே களம் கண்டார். 68 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று, அந்தத் தேர்தலில் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர் என்ற பெருமையைப் பெற்றார்.
மக்களவைத் தேர்தலுடன் தற்போது இத்தொகுதியின் இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. திமுக சார்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளரான பூண்டி கே. கலைவாணன், அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஆர். ஜீவானந்தம், அமமுக வேட்பாளராக அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். காமராஜ், மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக இயற்கை விவசாயி அருண் கே. சிதம்பரம் உள்பட 15 பேர் களத்தில் உள்ளனர்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி போட்டியிட்டு, வென்ற இத்தொகுதியில், அவரது குடும்பத்தினர் அல்லது பெரும் தலைவர்கள் யாராவது போட்டியிக்கூடும் எனக் கருதப்பட்டது. எனினும் திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கே. கலைவாணன் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
திருவாரூரைப் பொறுத்தவரை, மற்ற பல சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலை விடவும் இந்தத் தொகுதி திமுகவுக்கு முக்கியம். கருணாநிதி மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதியில் அதேபோன்ற அதிக வாக்கு வித்தியாசத்துடன் வெல்ல வேண்டும் என திமுக எண்ணுகிறது. அதற்கு ஏற்ப, கருணாநிதி மீது திருவாரூர் மக்களின் பற்று, திமுக, இடதுசாரிக் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு இங்கு வலிமையான ஆதரவுத் தளம் உண்டு. இவை தவிர, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற பிரச்சினைகளால் எதிரான மக்களின் மனநிலையும் திமுகவுக்குக் கைகொடுக்கிறது.
2016 சட்டப்பேரவைத் தேர்தல் நிலவரம்
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | சதவீதம் |
மு.கருணாநிதி | திமுக | 121473 | 61.73 |
பன்னீர்செல்வம் | அதிமுக | 53107 | 26.99 |
மாசிலாமணி | சிபிஐ | 13158 | 6.69 |
சிவகுமார் | பாமக | 1787 | 0.91 |
சந்திரசேகர் தென்றல் | நாம் தமிழர் | 1427 | 0.73 |
ரெங்கதாஸ் | பாஜக | 1254 | 0.64 |
திருவாரூர் தொகுதியின் அதிமுக வேட்பாளராக களம் காணும் முன்னாள் அமைச்சர் ஆர். ஜீவானந்தம், தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர். இத்தொகுதியில் அவர் சார்ந்த சோழிய வெள்ளாளர் சமூகத்தினர் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதும் அவருக்கு கூடுதல் பலம். அமைச்சர் ஆர்.காமராஜ் பிரச்சாரக் களத்தில் இருப்பதும் அதிமுகவுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.
அமமுக வேட்பாளராக அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ் போட்டியிடுகிறார். ஏற்கெனவே, அதிமுக மாவட்டச் செயலாளராக இருந்தவர் என்ற வகையில், மக்களிடையே சற்று பரிச்சயம் மிக்கவர் என்பதால், இவருக்கும் ஆதரவு உள்ளது. இவர் அதிமுகவின் அதிருப்தி வாக்குகளைப் பிரிப்பது திமுகவுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் இயற்கை விவசாயி கே. அருண் சிதம்பரம் இளைஞர்களையும், புதிய வாக்காளர்களையும் குறிவைத்துப் பணியாற்றுகிறார். குறிப்பாக புதிய வாக்காளர்கள் இவரது பக்கம் திரும்ப வாய்ப்புண்டு. இதுவும் திமுகவின் வாக்குகளைப் பிரிக்கும் சூழலை ஏற்படுத்துகிறது. இதனால் திமுக எளிதாக வெற்றி பெற்ற தேர்தல் களம், தற்போது கடினப் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT