Last Updated : 14 Apr, 2019 12:00 AM

 

Published : 14 Apr 2019 12:00 AM
Last Updated : 14 Apr 2019 12:00 AM

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து குறித்து அரசியல் கட்சிகள் தெளிவுபடுத்துமா?- சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து அரசியல் கட்சிகள் தெளிவான முறையில் விளக்கமளிக்க வேண்டும் என்ற சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத் தில் துணை நிலை ஆளுநர்- முதல்வர் இடையே அதிகாரப் போட்டி நிகழ்ந்து வரும் சூழலில், பிரதேசத்தின் வளர்ச்சியும், மக்கள் நலத்திட்டங்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்களும், பொதுமக்களும் கருதுகின்றனர். மாநில உரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும் என்ற குரல்களும் அண்மைக் காலமாக எழுப்பப்பட்டு வருகின்றன.

தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறப்படும் என்ற வாக்குறுதியை காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் முன் வைத்துள்ளன. ஆனால், எந்த வகையில் மாநில அந்தஸ்து பெறப்படும் என்பது குறித்து கட்சிகள் தெளிவாக விளக்கமளிக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் என 4 தனித்தனி பிராந்தியங்களை உள்ளடக்கிய புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறப்பட்டால், மற்ற 3 பிராந்தியங்களும் தாமாகவே தனித்தனி யூனியன் பிரதேசங்களாகிவிடும் என்பதுதான் சட்ட ரீதியான நடைமுறை என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்த கருத்து தற்போது தேவையற்றது என்று ஒரு சாரார் குறிப்பிடுகின்றனர். 4 பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையிலேயே மாநில அந்தஸ்து பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என ஏற்கெனவே முதல்வர் வி.நாராயணசாமி கூறியிருந்தார்.

இதுகுறித்து காரைக்கால் போராட்டக்குழு அமைப்பாள ரும், மூத்த வழக்கறிஞருமான எஸ்.பி.செல்வசண்முகம் கூறியது: யூனியன் பிரதேசங்களை பொறுத்தவரை டெல்லி, புதுச்சேரி, கோவா ஆகியவை மட்டுமே சட்டப்பேரவைகளை கொண்டவை. இதில் டெல்லிக்கு அரசியலமைப்பு சட்டத்திலேயே தனி விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் உள்ள சட்டப்பேரவை, அரசியலமைப்பு சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டது அல்ல. இதனால், முழுமையான அதிகாரம் கிடையாது. இதே போன்ற சட்டப்பேரவை கோவாவிலும் உருவாக்கப்பட்டது. பின்னர் கோவாவில் முதல்வர்- ஆளுநரிடையே பிரச்சினை எழுந்த நிலையில், 1987-ல் மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது. அப்போது கோவாவுடன் இருந்த டையூ, டாமன் தனித்தனி யூனியன் பிரதேசங்களாகி விட்டன.

நிலப்பரப்பு தொடர்ச்சியாக இருந்தால் மட்டுமே மாநில அந்தஸ்து பெற முடியும் என்பதால் புதுச்சேரிக்கு மட்டுமே அந்த அந்தஸ்தை பெற இயலும். அப்போது தானாகவே மற்ற 3 பிராந்தியங்களும் டையூ, டாமன் போல தனித்தனி யூனியன் பிரதேசங்களாகிவிடும். எல்லா பிரதேசங்களையும் சேர்த்து சட்டப்படி மாநில அந்தஸ்து வழங்க இயலாது. இதுகுறித்து சில அரசியல் கட்சிகள் தெளிவான புரிதல் இல்லாமலும், வெளிப்படையாக சொல்லாமலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறப்படும் என்பதை பொத்தாம் பொதுவாக சொல்லி வருகின்றன. புதுச் சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று, காரைக்கால் யூனியன் பிரதேசமாக்கப்பட வேண்டும். அப்போதுதான் காரைக்கால் பிராந்தியம் வளர்ச்சியடையும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x