Published : 29 Apr 2019 12:00 AM
Last Updated : 29 Apr 2019 12:00 AM
ரஸ்தாலி, நாளிப்பூவன், கற்பூரவல்லி வாழைப் பழங்களுக்கு கிடைக்கும் வரவேற்பால் பச்சை வாழைப் பழங்களின் விற்பனை வெகுவாகச் சரிந்துள்ளது. விலை கிடைக்காததால், தேனி மாவட்டத்தில் விளையும் பழங்கள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
தேனி மாவட்டத்தில் கம்பம், சின்னமனூர், ஓடைப்பட்டி, பெரியகுளம், தேவதானப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளிலும் வாழை விவசாயம் நடைபெறுகிறது. கன்று நட்டு ஒரு ஆண்டில் பலன் தரும். தற்போது விலை இன்மை, பலத்த காற்று உள்ளிட்ட பிரச்சினைகளால் வாழை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, பச்சைப் பழங்களை தற்போது பலரும் விரும்பாததால் இப்பழத்தை கேரளாவுக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முன்பு கிலோ ரூ.25 வரை கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது ரூ.12 ஆக குறைந்து விட்டது.
பச்சைப் பழம் முன்பு பலராலும் விரும்பி உண்ணப்பட்டது. ஆனால், இப்பழம் அதிகம் குளிர்ச்சி கொண்டதால் ஆஸ்துமா, வாதம், பித்த நோய் உள்ளவர்கள் இதனை அவ்வளவாக உண்பதில்லை. மேலும் கனிந்த பழமே சுவையாக இருக்கும். கனிந்த சில நாட்களிலேயே இப்பழம் அழுகிவிடும் தன்மையுள்ளதால் அதிகநாள் இருப்பும் வைக்க முடியாது. மேலும் நாளிப்பூவன், ரஸ்தாலி, மலைப்பழம், செவ்வாழை, கற்பூர வல்லி உள்ளிட்ட பல சுவையான வாழைப்பழங்கள் சந்தைப்படுத்தப் பட்டதால் பச்சைப்பழ கொள்முதல் குறையத் தொடங்கியது. இதனால் கேரளாவுக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து உப்புக்கோட்டை அருகே பாலார்பட்டியைச் சேர்ந்த குணசேகரன் கூறியதாவது:
இப்பகுதியில் பச்சை வாழைப்பழம் அமோகமாக விளைகிறது. ஆனால், அதற்கான விலை கிடைப்பதில்லை. தமிழகத்தில் இதை விரும்பி உண்பதில்லை. இதனால் திரு வனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட கேரள பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன. உரம், மருந்து, களையெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு செலவினம் சேர்த்து ஒரு வாழைக்கு ரூ.150 வரை செலவாகிறது. மேலும் தார் குலை தள்ளியதும் முட்டுக்கொடுக்க சவுக்கு கம்பு செலவும் ஆகிறது. ஆனால் அதற்கேற்ப விலை கிடைப்பதில்லை. இந்தப் பழம் விரைவில் அழுகிவிடும். எனவே குளிர்ப்பதனக் கிட்டங்கி வசதி செய்து தந்தால், வாழை விவசாயிகளுக்கு உதவிகரமாக இருக்கும். மேலும் வாழைப்பழங்களை மதிப்பூட்டும் பொருளாக மாற்றும் தொழில்நுட்பத்தையும் இங்கு நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் வாழை விவசாயிகளை சிரமத்தில் இருந்து மீட்டெடுக்க முடியும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT