Published : 14 Apr 2019 12:00 AM
Last Updated : 14 Apr 2019 12:00 AM
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாள் நெருங்கியுள்ள நிலையில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கட்சி தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர் கள், மாநில பேச்சாளர்கள் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது பிரச்சார நிகழ்ச்சிக்கு கூட்டத்தை சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள், இடைத்தரகர்கள் மூலம் கிராமங்களில் இருந்து ஆண்களையும், பெண்களையும் அழைத்து வருகிறார்கள்.
முன்பெல்லாம் தலைவர்கள் பிரச்சாரத்தை கேட்க தன்னெழுச்சியாக மக்கள் கூட்டம் அலைபாயும். அவ்வாறு தங்கள் சொந்தக்காசை செலவிட்டு தலைவர்கள் பேசுவதை கேட்க தொண்டர்கள் திரண்ட காலம் மலையேறிவிட்டது. தற்போது வெயில் 100 டிகிரியைத் தாண்டி சுட்டெரிக்கிறது. இதனால், தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்கள் பெரும்பாலும் வருவதில்லை.
இச்சூழ்நிலையில் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள், அந்தந்த பகுதிகளில் பிரச்சாரங்களுக்கு வரும்போது கொடி பிடிக்கவும், கைதட்டி ஆரவாரம் செய்யவும் தொண்டர்கள் மட்டுமின்றி, கட்சி சாராதவர்களையும் அழைத்து வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதிலும் தேசிய, மாநிலத் தலைவர்கள் பிரச்சாரத்துக்கு வரும்போதெல்லாம் அதிக கூட்டத்தை காட்டியாக வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு இருக்கிறது. இதனால், இடைத்தரகர்கள் மூலம் கிராமப்புற பெண்களை, குறிப்பாக முதியவர்களை பிரச்சார கூட்டங்களுக்கு முக்கிய கட்சிகள் அழைத்து வருகின்றன.
நபருக்கு இவ்வளவு என்று இடைத்தரகர்களிடம் ஒரு தொகையை பேசி, கிராமங்களில் வேலையில்லாமல் இருப்பவர்களையும், வீடுகளில் இருக்கும் பெண்களையும் வாகனங்களில் அழைத்து வருகிறார்கள். திருநெல்வேலியில் முக்கிய தலைவர்களின் பிரச்சாரங்களுக்கெல்லாம் இவ்வாறுதான் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. வீட்டில் சும்மாவே இருப்பதற்கு தேர்தல் பிரச்சாரங்களுக்கு சென்றால் நாள்தோறும் ரூ. 200 முதல் ரூ. 300 வரை கிடைக்கும் என்ற ஆசையைத் தூண்டி இடைத்தரகர்கள் ஆள் பிடிக்கிறார்கள்.
இதுதவிர, வேட்பாளர்களுடன் தெருத்தெருவாக காலை 7 மணி முதல் 10 மணிவரையும், மாலையில் 5 மணி முதல் இரவு 10 மணி வரையும் கிராம மக்களை பிரச்சாரத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். இவர்களுக்கு தலா ரூ.250 முதல் ரூ.350 வரையிலும் சாப்பாடும் வழங்கப்படுகிறது.
சில பிரச்சார நிகழ்ச்சிகளில் பெண்கள், ஆண்களுடன், சிறுவர்களும்கூட கொடிபிடித்துக் கொண்டு நிற்கிறார்கள். குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பில் அக்கறை செலுத்தும் அரசுத்துறைகள் இதையெல்லாம் கவனிக்கத் தவறிவிட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT