Published : 15 Apr 2019 11:33 AM
Last Updated : 15 Apr 2019 11:33 AM
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுடன், சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதியையும் உள்ளடக்கியது தருமபுரி மக்களவைத் தொகுதி. தருமபுரி மாவட்டத்தில் 11 லட்சத்து 96 ஆயிரத்து 406 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 6 லட்சத்து 90 ஆயிரத்து 68 பேர் ஆண் வாக்காளர்கள். 5 லட்சத்து 87 ஆயிரத்து 224 பேர் பெண் வாக்காளர்கள். மூன்றாம் பாலின வாக்காளர்கள் 114 பேர். இதுதவிர, சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 2 லட்சத்து 71 ஆயிரத்து 498 வாக்காளர்கள் உள்ளனர். தருமபுரி மக்களவைத் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 67 ஆயிரத்து 904.
இந்த தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ். இவர், பாமக-வின் இளைஞரணி செயலாளர் மட்டுமின்றி, கட்சி நிறுவனர் ராமதாஸின் மகனும் ஆவார். மத்திய சுகாதாரத் துறை அமைச்சராகவும் 5 ஆண்டுகள் இருந்துள்ளார். தருமபுரி மக்களவைத் தொகுதி யில் கடந்த முறை வென்று தற் போது எம்.பி-யாக இருப்பவரும் அவரே.
தருமபுரி மக்களவைத் தொகுதியில் திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடந்த காலங்களில் தலா 2 முறை வெற்றி கண்டுள்ளன. ஆனால், பாமக இந்த தொகுதியில் 4 முறை வெற்றி பெற்றுள்ளது.
பாமக-வுக்கு வலுவான வாக்காளர் பலம் உள்ள தொகுதியாகவும் தருமபுரி தொகுதி கருதப்படுகிறது. அதனாலேயே இந்த முறையும் அன்புமணி தருமபுரியிலேயே போட்டியிடுகிறார். மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுகிற கட்சிகள் அடங்கிய கூட்டணியில் இடம்பெற்றுள்ளது பாமக. பொதுவாகவே வாக்காளர்களுக்கு ஆளும் அரசுகள் மீது கோபமும், எதிர்ப்பும் நிலவும். அதையெல்லாம் கடந்து வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையோடு களத்தில் உள்ளார் அன்புமணி.
கூடுதல் பலம்
கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாமக உடன் பாஜக, தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே கூட்டணியில் இருந்தன. அப்போது அன்புமணி 4.68 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் 3.91 லட்சம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். தற்போது இரு கட்சிகளும் கூட்டணியாக இருப்பதால் பாமகவுக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது.
கடந்த முறை எம்.பி ஆன அன்புமணி, மக்கள் அதிகம் கூடும் சில இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையங்களை திறந்துள்ளார். இதுதவிர, இண்டூர், நல்லம்பள்ளி, ஏரியூர் உள்ளிட்ட இடங்களில் எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கூரையுடன் கூடிய பேருந்து நிலையம் அமைத்துக் கொடுத்துள்ளார். மொரப்பூர்-தருமபுரி இடையிலான 36 கிலோ மீட்டர் நீள இணைப்பு ரயில் பாதை திட்டத்துக்கு சமீபத்தில் மத்திய ரயில்வே அமைச்சகம் தருமபுரியில் அடிக்கல் நாட்டு விழா நடத்தியது. இதுதவிர, தொகுதியில் உள்ள பல்வேறு நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வந்துள்ளார். இவைகளையும், மத்திய, மாநில அரசுகளின் தேர்தல் வாக்குறுதிகளையும் முன்வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் அன்புமணி.
தருமபுரி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றால் தொகுதியிலேயே வீடு எடுத்து தங்கி மக்களுக்காக பணியாற்றுவேன் என்று கடந்த முறை பிரச்சாரத்தின் போது பேசி வந்தார் அன்புமணி. அதை நிறைவேற்றினாரா அன்புமணி என எதிர்க்கட்சிகள் தற்போது கேள்வி எழுப்புகின்றன.
உள்ளூர் வேட்பாளர்
இதற்கிடையே, உள்ளூர் வேட்பாளராக இருந்தால் கோரிக்கை, நல்லது, கெட்டது என எதற்கும் எம்.பி-யை சந்திப்பது எளிதாக இருக்கும் என்ற பேச்சுகளையும் கேட்க முடிகிறது. அந்த வகையில் திமுக வேட்பாளர் செந்தில்குமார் உள்ளூர்க்காரர் என்ற அடையாளத்துடன் வாக்காளர்களை நெருங்குகிறார். அவருக்கு விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்கள், மதிமுக, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பலம் வலுவாக உள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வந்தது திமுக அரசுதான் என்பது உள்ளிட்ட சாதனைகளையும், காங்கிரஸ், திமுக தேர்தல் அறிக்கைகளையும் சுட்டிக்காட்டி வாக்கு சேகரிக்கிறார் செந்தில்குமார். 8 வழிச் சாலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மீதான கோபம் விவசாயிகளிடம் இன்னும் குறையவில்லை. இது வரும் தேர்தலில் எதிரொலிக்கும் என திமுகவினர் பிரச்சாரத்தின்போது கூறுகின்றனர்.
இவர்களுக்கு இடையில், முன்னாள் அமைச்சரும், அமமுக-வின் தலைமை நிலையச் செயலாளருமான பழனியப்பன் அக்கட்சி சார்பில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். ‘வெற்றி சாத்தியமா என்று சொல்லிவிட முடியாது, ஆனால் அதிமுக கூட்டணிக்கு வெற்றிக்கு வாய்ப்பே தர மாட்டோம்’ என்ற சங்கல்பத்துடன் தொகுதி முழுக்க சுற்றிக் கொண்டிருக்கிறார் பழனியப்பன். இவர்களைத் தவிர, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ருக்மணிதேவி, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜசேகர் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.
தருமபுரி தொகுதியில் ஆங்காங்கே சிறு சிறு அணைகள் உள்ளன. இருப்பினும் எளிதில் வறட்சிக்கு இலக்காகும் பகுதியாக இது உள்ளது.
எனவே, காவிரி, தென்பெண்ணை ஆறுகளில் இருந்து நீர்ப்பாசன திட்டங்களை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது இங்குள்ள விவசாயிகளின் கோரிக்கை. அதேபோல, வேலை தேடி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் இளையோர் எண்ணிக்கை இந்த மாவட்டத்தில் அதிகம். அவர்களுக்கு மாவட்டத்திலேயே வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில் சிப்காட் வளாகத்தை விரைந்து அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.
இதுதவிர, அந்தந்த பகுதி மக்களின் உள்ளூர் கோரிக்கைகளும் உள்ளன. இவை எல்லாவற்றையும் நிறைவேற்றுவதாகக் கூறி அனைத்து வேட்பாளர்களுமே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT