Last Updated : 27 Apr, 2019 12:00 AM

 

Published : 27 Apr 2019 12:00 AM
Last Updated : 27 Apr 2019 12:00 AM

புதுப்புது ரகங்களால் புற்றீசலான நோய்கள்; பாரம்பரிய நெல் ரக சாகுபடியை நோக்கி விவசாயிகள்

புல் வகையைச் சேர்ந்த நெல்லினம் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே மனிதனின் உணவாக இருந்து வருகிறது. உலகில் 2 லட்சத்துக்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்துள்ளன. சுதந்திரம் அடைந்தபோது நம் நாட்டில் 500-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள் இருந்தன.

உணவுப் பஞ்சம் காரணமாக முதலாம் பசுமைப் புரட்சியில் உயர் ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தொடர்ந்து புதுப்புது ரகங்களை அறிமுகப்படுத்தியதால் பாரம்பரிய ரகங்கள் படிப்படியாக மறையத் தொடங்கின. பட்டை தீட்டிய புதியரகங்களை உண்பதால் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய் அதிகரிக்கிறது. இதனால், பாரம்பரிய ரகத்தைப் பாதுகாக்கும் விழிப்புணர்வு விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது.

மறைந்த நெல் ஜெயராமன்,2006-ல் இருந்து ஆண்டுதோறும் நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்கத்தில் நெல் திருவிழாவை நடத்தினார். அவர் 18 ஆயிரம் விவசாயிகளுக்குப் பாரம்பரிய ரகங்களை உற்பத்தி செய்யக் கொடுத்துள்ளார்.

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் அந்தந்த பகுதிக்கேற்ற பாரம்பரிய ரகங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டம் நரிசுவைச் சேர்ந்த விவசாயி நட்பவர் சாரங்கி 500-க்கும் அதிகமான பாரம்பரிய ரகங்களைப் பாதுகாத்து வருகிறார். உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரமம் 100 கிராமங்களைச் சேர்ந்த 1,500 விவசாயிகளுக்கு 200 பாரம்பரிய ரகங்களை விநியோகித்துள்ளது.

புதுக்கோட்டை இயற்கை விவசாய சங்கம் 24 வகையான பாரம்பரிய நெல் விதைகளைப் பாதுகாக்கிறது. தஞ்சாவூரில் கோயில் சித்தர் என்பவர் ஒடிசாவில் இருந்து பாரம்பரிய ரகங்களைத் தருவித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார்.

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி அருகே பாதரக்குடி குமார் என்பவர் சிவப்பு கவுனி, கருப்பு கவுனி, மாப்பிள்ளைச் சம்பா, சீரகச் சம்பா, குள்ளகார் ஆகிய 5 ரகங்களை சாகுபடி செய்கிறார். அரளிக்கோட்டை சீதாலட்சுமிமாப்பிள்ளை சம்பா, சீரகச் சம்பா,சிவப்பு கவுனி, கருப்பு கவுனி ஆகிய 4 ரகங்களைப் பயிரிடுகிறார்.

உலகம்பட்டி சிவராமன் என்பவர் கருப்பு கவுனி, சிவப்பு கவுனி,பூங்கார், அறுபதாம் குறுவை, சேலம் சம்பா, தூயமல்லி, கிச்சலிசம்பா, செம்புழுதி சம்பா, மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா ஆகிய 10 ரகங்களைப் பாதுகாக்கிறார். அவர்களுக்குத் தேவையான தொழில்நுட்பங்களையும், ஆலோசனைகளையும் குன்றக்குடி வேளாண் அறிவியல் மையம் வழங்கி வருகிறது.

இது பற்றி குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத் தலைவர் பேராசிரியர் செந்தூர்குமரன் கூறியதாவது: இக்கால கட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை, குறுகிய நாட்களில் லாபம் போன்ற காரணங்களால் விவசாயிகள் குறுகியகால ரகங்களையே விரும்புகின்றனர். பாரம்பரிய ரகங்கள் நீண்டகாலப் பயிர்கள் என்பதால் அவற்றை சாகுபடி செய்ய தயக்கம் காட்டி வந்தனர்.

ஆனால், புதிய ரகங்களால் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய்கள் அதிகரித்தன. இதனால் பலர் மீண்டும் பாரம்பரியத்தை நாடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் குமார், சீதாலட்சுமி, சிவராமன் ஆகிய மூவரும் 17.5 ஏக்கரில் பாரம்பரிய ரகங்களை சாகுபடி செய்கின்றனர். அவர்களுக்குத் தேவையான தொழில்நுட்பங்களை வழங்குகிறோம்.

சாதாரணமாக ஒரு ஏக்கரில் பயிரிட 16 கிலோ விதை தேவைப்படும். திருந்திய ஒற்றை நெல்சாகுபடி முறையில் 3 கிலோ இருந்தால்போதும். பயிர் இடைவெளியும் சரியாக இருக்கும்போது மகசூல் அதிகரிக்கிறது.

நோய் பாதிப்பு குறைவுபூச்சி தாக்கினால் இயற்கை பூச்சி விரட்டி, மூலிகை பூச்சி விரட்டி கரைசல், இஞ்சிபூண்டு கரைசல், வேப்பங்கொட்டை சாறு ஆகியவற்றை பயன்படுத்தலாம். வளர்ச்சி ஊக்கியாக அமிர்த கரைசல், பஞ்சகாவ்யம், மீன்அமினோ அமிலத்தை பயன்படுத்தலாம்.

அடி உரமாக ஏக்கருக்கு 10 டன் மக்கிய சாணம், தொடர்ந்து 500 முதல் 750 கிலோ மண்புழு உரம் பயன்படுத்த வேண்டும். அவற்றை விவசாயிகளே தயாரித்துக் கொள்ளலாம் என்றார்.

அரளிக்கோட்டை விவசாயி சீதாலட்சுமி கூறியதாவது: பாரம்பரிய ரகங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். இதனால் அவற்றைப் பாதுகாத்து வருங்கால சந்ததியினர் நலமுடன் வாழ முயற்சிக்கிறோம். அறுவடைக்குக் குறைந்தது 135 முதல் 180 நாட்கள் தேவை. குறுகிய ரகத்துக்கு 90 நாட்களே போதுமானது. இதனால் பாரம்பரிய ரகத்துக்கு மாறப் பயப்படுகின்றனர்.

ஆனால் பாரம்பரிய அரிசிக்கு தற்போது நல்ல கிராக்கி உள்ளது. ஏக்கருக்கு 40 மூட்டை கிடைக்கும். 66 கிலோ கொண்ட நெல் மூட்டைக்கு 40 கிலோ அரிசி கிடைக்கும். ஒரு கிலோ ரூ.100-க்குவிற்கலாம். இதனால் மூட்டைக்கு ரூ.4 ஆயிரம் கிடைக்கும். ஆனால் குறுகிய கால நெல் மூட்டையை விற்றால் ஆயிரம் ரூபாய் கிடைப்பதே பெரிது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x