Last Updated : 05 Apr, 2019 11:32 AM

 

Published : 05 Apr 2019 11:32 AM
Last Updated : 05 Apr 2019 11:32 AM

கிரண்பேடியை குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்ட பேத்தி - பதிவை நீக்க யூடியூபுக்கு கடிதம்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை குற்றம்சாட்டி அவரது பேத்தி விடியோவை வெளியிட்டுள்ளார். இவ்வீடியோ பதிவை நீக்க யூடியூப்புக்கு கிரண்பேடி தரப்பில் வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் பேத்தி யூடியூப்பில் வெளியிட்டுள்ள வீடியோ, புதுச்சேரி எங்கும் பரவி வருகிறது.

மொபைல் போனில் அவரே பேசி பதிவு செய்த அந்த வீடியோவில், "நான் கிரண்பேடியின் ஒரே பேத்தி. அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இடையில் எவ்வளவோ பிரச்சினைகள் வந்திருக்கின்றன.

அப்போது உங்கள் பிரச்சினைகளுக்கு இடையில் வரமாட்டேன் என்று கூறினீர்களே பாட்டி. இப்போது மட்டும் ஏன் பாட்டி வருகிறீர்கள்? போலீஸை வைத்து அப்பாவை ஏன் கஷ்டப்படுத்துகிரீர்கள்? என்னை யாரும் கடத்தவில்லை. நான் அப்பாவுடன் சந்தோஷமாக இருக்கிறேன்" என்று குறிப்பிட்டு தனது தந்தையை காட்டுகிறார்.

அதைத்தொடர்ந்து மீண்டும் அறைக்குள் வந்த கிரண்பேடி பேத்தி, "எனது அம்மாவை நினைத்தும், பாட்டியை நினைத்தும் வெட்கப்படுகிறேன். என் அப்பாவுக்கு ஆதரவு தர விரும்புவோர் கருத்து பதிவிடுங்கள்" என்று குறிப்பிட்டு வீடியோவை நிறைவு செய்கிறார்.

இவ்வீடியோ புதுச்சேரியிலும், சமூக வலைதளங்களிலும் அதிகளவில் பரவி வருகிறது.

இதுதொடர்பாக ஆளுநர் கிரண்பேடியிடம் கேட்டதற்கு, "இது முடிந்து போன விவகாரம். நீதிமன்றம் அளித்த நோட்டீஸை வழக்கறிஞர் மூலம் யூடியூப்பில் அளித்து விட்டோம். குழந்தை இப்போது விளையாட்டுத்தனமாக பேசுகிறது. குழந்தையின் தலையீட்டால் இது மிகவும் உணர்ச்சிகரமாக மாறியிருக்கிறது. இதுகுறித்து கருத்துகள் கூறுவதோ, எழுதுவதோ பொருத்தமாக இருக்காது" என்று கூறினார்.

அதே நேரத்தில் இவ்வீடியோவின் கீழ் கிரண்பேடி பதிவிட்டுள்ள கருத்தின் விவரம்:

"என் பேத்தி கூறியதை பெரிதாக எடுத்துக்கொண்டு இதற்கு பதிலளிக்க நான் விரும்பவில்லை. அவள் எப்போதும் என் பேத்தி தான். கணவனின் மாந்திரீக செயல்களிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளும் முழு உரிமை என் மகளுக்கு இருக்கிறது. என் மகளை நான் எப்படி ஆதரிக்கிறேனோ அதே ஆதரவு அவளது மகளுக்கும் தேவை. இது தொடர்பான வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் இருப்பதால் தீர்ப்புக்காக நம்பிக்கையோடு காத்துக்கொண்டிருக்கிறேன். நீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவல்துறையினர் இதுகுறித்து விசாரிப்பதோடு, ஆய்வும் செய்யலாம்.

வீடியோ பதிவை பற்றி ஒன்றும் தெரியாததைப் போல பேத்தியின் முன்பு அவரது அப்பா அமர்ந்துள்ளார். அவர் தனது மாந்திரீக செயல்களை நிறுத்த வேண்டும். (இதற்கான ஆவணங்கள் அதிகளவில் இருக்கின்றன. அதனால் இதுபற்றி தெரிவிக்கும் முழு பொறுப்பில் உள்ளேன்)" என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x