Published : 28 Apr 2019 12:00 AM
Last Updated : 28 Apr 2019 12:00 AM

ஆட்சியர் மாற்றம் வரை பிரச்சினை பெரிதானது எப்படி? - அரசு ஊழியர்கள் பரபரப்பு தகவல்

மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் வட்டாட்சியர் நுழைந்த விவகாரத்தில், வேட்பாளர்களின் சந்தேகத்தை தீர்க்கும் வகையில், ஆட்சியர் விரைவாக, வெளிப்படையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் எந்தச் சிக்கலும் ஏற்பட்டிருக்காது என அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரி வித்துள்ளனர்.

மதுரையில் மக்களவைத் தொகுதி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், மதுரை மருத்துவக் கல்லூரி யில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு ஏப்.20-ம் தேதி ‘சீல்' வைக்கப்பட்டது.

உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி சில ஆவணங்களை எடுத்துவர வட்டாட்சியர் செல்வி சம்பூர்ணம் அன்று மாலை அங்கு சென்றார். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த திடீர்நகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மங்கையர் திலகம், சம்பூரணத்திடம் எதற்காக வந்தீர்கள் எனக் கேள்வி எழுப்பினார்.

அவர் விளக்கம் அளித்தும் சந்தேகம் தீராமல் உயர் அதிகாரிகளிடம் பேசி உறுதி செய்தபிறகு வட்டாட்சியரை அனுப்பி வைத்தார். வட்டாட்சியரிடம் 2 மணி நேரம் காவல் ஆய்வாளர் விசாரணை நடத்திய விவரம் வெளியே கசிந்தது.

இதை அறிந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் மருத்துவக் கல்லூரிக்கு விரைந்தார். அங்கும் அவருக்கு உரிய தகவல்கள் கிடைக்கவில்லை. ஆட்சியரை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. இதுவே சந்தேகத்தை அதிகரித்தது. அதன்பிறகு அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரையும் அங்கு வந்தார். பல்வேறு கட்சியினர் அங்கு திரண்டதால் பிரச்சினை பெரிதானது.

இது குறித்து அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் நீதிராஜா மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் ஆட்சியரின் நடவடிக்கைகளை விமர்சித்து பேட்டி அளித்தனர். ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

இதுகுறித்து அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

கட்சி வேட்பாளர்கள் மருத்துவக் கல்லூரி வளாகத்துக்கு வந்த தகவல் ஆட்சியருக்கு தெரிந்ததும், அவர் உடனே அங்கு சென்று, நடந்ததை வெளிப்படையாகத் தெரிவித்திருக்க வேண்டும். வட்டாட்சியர் சம்பூரணம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்த அறையின் சீலை உடைத்து உள்ளே சென்று வந்ததாகக் கட்சியினர் சந்தேகப்பட்டனர். அந்த அறை பாதுகாப்பாக இருப்பதையும், தங்களுக்குத் தேவையான வேறு ஆவணங்கள் எடுக்க மட்டுமே அவர் அங்கு சென்றதாகவும், இதற்கு அவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் ஆட்சியர் தெளிவுபடுத்தி இருக்க வேண்டும்.

மேலும், ஆட்சியரைச் சந்திக்க வேட்பாளர்கள் அலுவலகம் சென்றனர். அங்கிருந்து தொலைபேசியில் பேச முயன்றும் ஆட்சியர் பேசவில்லை. பின்னர் ஆட்சியரை நேரில் சந்தித்தபோதும், சம்பூர்ணம் உள்ளே சென்றது குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என ஆட்சியர் சமாளித்துள்ளார்.

இது வேட்பாளர்களின் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது. ஆவணங்கள் இருந்த சில அறைகள் சீல் வைக்கப்பட்டிருந்த நிலையில், மதுரை மத்தி, மேற்குத் தொகுதி அறைகள் மட்டும் ஏன் சீல் வைக்கப்படவில்லை என வேட்பாளர்கள் கேள்வி எழுப்பினர்.

மத்திய தொகுதி திமுகவுக்குச் சாதகமாக இருப்பதும், மேற்குத் தொகுதி அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் சொந்த தொகுதி என்பதாலும் சந்தேகம் வலுப்பட்டது. தபால் வாக்குகளை எடுக்க சம்பூர்ணம் சென்றதாக சந்தேகப்பட்டனர்.

தபால் வாக்குப் பெட்டி அந்தந்த உதவி தேர்தல் நடந்தும் அலுவலர் அறையில் உள்ளது என்பதையும், தபால் வாக்குளை சீல் வைத்த அறைக்குள் வைக்க முடியாது என்பதையும், மே 23-ம் தேதி காலை 8 மணி வரை தபால் வாக்குகளை அளிக்கலாம் என்பதையும் ஆட்சியர் விளக்கி இருக்க வேண்டும். வாக்குப்பதிவு குறித்த ஆய்வுக்கான ஆவணங்கள் மட்டுமே எடுக்கப்பட்டன. இது வழக்கமான ஒன்றுதான் என சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க வேண்டிய கடமை ஆட்சியருடையது. அதை அவர் சரியாகவும், விரைவாகவும் செய்யவில்லை. இதனாலேயே கட்சியி னருக்கு சந்தேகம் அதிகரித்து ஆட்சியருக்கு எதிராகத் திரும்பியது. சம்பவத்துக்கு மறுநாள், வட்டாட்சியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவரது நேர்மையான பணிப் பின்னணியை அறிந்த அரசு ஊழியர்களிடையே ஆட்சியரின் நடவடிக்கை கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

வேட்பாளர் வெங்கடேசனின் போராட்டத்தால்தான் பணியிடை நீக்கம் நடந்தது எனக்கருதிய வருவாய்த் துறையினர், அரசு ஊழியர் சங்கத்தினர் மீது அதிருப்தி அடைந்தனர். முதல் நாளில் வேகமாக செயல்படாத ஆட்சியர் பணியிட நீக்கத்துக்கு மட்டும் அவசரம் காட்டியதால் இந்த விவகாரத்தில் வட்டாட்சியர் பலிகடா ஆக்கப்பட்டதாக மாநிலம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் கருதினர். மேலும் அவர் காப்பாற்றப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தனர்.

அரசு ஊழியர்களிடையே சம்பூர்ணத் துக்கு ஆதரவு அதிகரிக்க, அது சு.வெங்க டேசனுக்கு வேறு மாதிரியான நெருக்கடியை உண்டாக்கியது. இதனால் ஆட்சியரை மாற்ற வேண்டும் என வெளிப்படையாகப் பேட்டி அளித்தார். கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி எம்.பாலாஜி மதுரையில் நேரடியாக விசாரணை நடத்தி தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை அளித்து 2 நாட்களாகியும் நடவடிக்கை இல்லை.

இந்நிலையில், ஊழியர்களிடம் இருந்து வந்த நெருக்கடி, ஏற்கெனவே ஆட்சியர் மீதிருந்த அதிருப்தியால் சு.வெங்கடேசன் உயர் நீதிமன்றம் சென்றார்.

இதைத் தொடர்ந்தே தற்போது ஆட்சியர் உள்ளிட்ட 3 அதிகாரிகள் மாற்றம் வரை பிரச்சினை பூதாகரமாகிவிட்டது. வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுத்தார் ஆட்சியர். இது அவருக்கு எதிராகவே திரும்பிவிட்டது என்றனர். எனினும், வட்டாட்சியர் பணியிடை நீக்க உத்தரவை திரும்பப் பெறும் முயற்சிக்கு முடிவு கிடைக்கவில்லை.

இவ்வாறு அரசு ஊழியர் சங்க நிர்வாகி கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x