Last Updated : 15 Apr, 2019 12:00 AM

 

Published : 15 Apr 2019 12:00 AM
Last Updated : 15 Apr 2019 12:00 AM

தேனியில் வீசும் அரசியல் காற்று யாருக்கு சாதகம்?- கடும் போராட்டத்தில் அதிமுக, காங்., அமமுக

குறைவான வாக்குகளே வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் என்பதால் தேனி தொகுதியில் அதிமுக, காங்கிரஸ், அமமுக வேட்பாளர்களின் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது.

தேனி தொகுதியில் 30 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரதமர் மோடி, ஜிகே.வாசன், ஜான்பாண்டியன், பிரேமலதா, அமைச்சர் உதயகுமார், பார்த்திபன் எம்.பி. உள்ளிட்டோரும் கார்த்திக், சிங்கம் புலி, நிர்மலா பெரியசாமி போன்ற திரை யுலகப் பிரபலங்கள் என ஏராளமானோரும் பிரச்சாரம் செய்துள்ளனர்.

ரவீந்திரநாத்குமார் பிரச்சாரங்களில் பேசும்போது, "இம்மண்ணின் மைந்தன் நான். உங்களின் பிரச்சினைகள், தேவைகள் எனக்கு நன்கு தெரியும். மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைப்பேன், முல்லை பெரி யாறு அணை நீர்மட்டத்தை உயர்த்துவேன்" என்று பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.

காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக மாநில செய்தித் தொடர்பாளர் திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ்.அழகிரி ஆகியோர் பிரச்சாரம் செய்துள்ளனர்.

இளங்கோவன், "திண்டுக்கல்-குமுளி அகல ரயில் பாதை, திராட்சை, மாம்பழக் குளிர்சாதனக் கிடங்குகள், நெசவாளர் பூங்கா ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்படும். வைகை, சோத்துப்பாறை அணைகள் தூர் வாரப்படும்" என வாக்குறுதிகள் அளித்து வருகிறார்.

அமமுக வேட்பாளர் தங்கதமிழ்ச் செல்வனுக்காக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் பிரச்சாரம் செய்துள்ளார். தங்கதமிழ்ச்செல்வன், "பேரவையில் ஆட்சிக்கு எதிராக ஓட்டளித்த ஓ.பன்னீர்செல்வம் இன்றைக்கு துணை முதல்வராக இருக்கிறார். ஆனால் எந்தத் தவறும் செய்யாத எங்களை தகுதி நீக்கம் செய்துவிட்டனர். இதனால் தொகுதி வளர்ச்சிப் பணி வெகுவாய் பாதிக்கப்பட்டுள்ளது. தேவையற்ற இடைத்தேர்தல் இவர்களால் வந்துள்ளது" என்று பேசி வருகிறார்.

கடும் போட்டி காரணமாக தேனி மக்களவைத் தொகுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படும் நிலை உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதனால், வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்ற நோக்கத்திலும், முடிந்தமட்டிலும் கட்சி சாராத வாக்குகளை கவர்ந்துவிட வேண்டும் என்ற ஆர்வத்திலும் இந்த 3 கட்சிகளின் வேட்பாளர்கள் கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x