Published : 30 Apr 2019 12:00 AM
Last Updated : 30 Apr 2019 12:00 AM
பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 3 கல்வி மாவட்டங்களை பின்னுக்குத் தள்ளி, எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்டம் முன்னேற்றம் கண்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், கோவை மாவட்டத்தில் 96.44 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் கோவை, பேரூர், எஸ்எஸ் குளம், பொள்ளாச்சி ஆகிய 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விவரம்: கோவை கல்வி மாவட்டத்தில் 7,281 மாணவர்களும், 7,473 மாணவிகளும் என மொத்தம் 14,754 பேர் பொதுத்தேர்வு எழுதினர். இதில் 6,882 மாணவர்களும், 7,338 மாணவிகளும் என மொத்தம் 14,220 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 96.38 சதவீதம். இது கடந்த ஆண்டை விட 0.41 சதவீதம் அதிகம். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 2,804 மாணவர்களும், 2,963 மாணவிகளும் என மொத்தம் 5,787 பேர் பொதுத்தேர்வு எழுதினர். அதில் 2,610 மாணவர்களும், 2904 மாணவிகளும் என மொத்தம் 5,514 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 95.61 சதவீதம். கடந்த ஆண்டை விட 0.27 சதவீதம் அதிகம். இந்த ஆண்டு உதயமான புதிய கல்வி மாவட்டங்களான பேரூர் கல்வி மாவட்டத்தில் 4,843 மாணவர்களும், 4,568 மாணவிகளும் என மொத்தம் 9,411 பேர் பொதுத்தேர்வு எழுதியதில், 4,547 மாணவர்களும், 4,497 மாணவிகளும் என மொத்தம் 9,044 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 96.10 சதவீதம்.
எஸ்எஸ் குளம் கல்வி மாவட்டத்தில் 5,121 மாணவர்களும், 5,140 மாணவிகளும் என மொத்தம் 10,261 பேர் பொதுத்தேர்வு எழுதினர். அதில் 4,920 மாணவர்களும், 5,064 மாணவிகளும் என மொத்தம் 9,984 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 98.52 சதவீதம் ஆகும். புதிய கல்வி மாவட்டமாக உதயமான முதலாவது ஆண்டிலேயே 3 கல்வி மாவட்டங்களை பின்னுக்கு தள்ளி, முதலிடத்துக்கு முந்தியுள்ளது, இக்கல்வி மாவட்டம். இது குறித்து எஸ்எஸ் குளம் கல்வி மாவட்ட அலுவலர் ஆர்.கீதா கூறியதாவது: எஸ்எஸ் குளம் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பாடவாரியாக ஆசிரியர்களை அழைத்து கூட்டங்கள் நடத்தி தொடர்ந்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. சுமாராக படிக்கும் மாணவர்கள், சராசரியாக படிக்கும் மாணவர்கள், நன்றாக படிக்கும் மாணவர்கள் என மூவகை மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு ஏற்ப, ஆசிரியர்களைக் கொண்டு மாதிரி வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு, மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. 100 சதவீதம் தேர்ச்சி பெற செய்த ஆசிரியர்கள், தேர்ச்சி சராசரியில் முதலிடம் பெற்ற ஆசிரியர்களுக்கு வரும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டதும், எஸ்எஸ் குளம் கல்வி மாவட்டம் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்க உள்ளோம். வரும் கல்வியாண்டில் தேர்ச்சி விகிதத்தை மேலும் அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT