Published : 11 Apr 2019 07:21 AM
Last Updated : 11 Apr 2019 07:21 AM
தமிழகம், புதுச்சேரியில் பரபரப்பாக சுற்றுப்பயணம் முடித்த நிலையில், பிரதமர் மோடி பங்கேற்கும் தேனி பொதுக்கூட்டம், மகன் ப.ரவீந்திரநாத்குமாருக்கு ஆதரவாகப் பிரச்சார ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். பல்வேறு கேள்விகளுக்குப் பெரியகுளத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபடியே ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அவர் பிரத்யேக பேட்டி அளித்தார்.
ஜெயலலிதா இல்லாததால்தான் உங்கள் மகனை தேர்தலில் நிறுத்தியுள்ளதாக விமர்சனம் செய்யப்படுகிறதே..?
2008-ம் ஆண்டிலேயே ஜெயலலிதா எனது மகன் ரவீந்திரநாத் குமாரை மாவட்ட இளைஞர்- இளம்பெண்கள் பாசறைச் செயலாளராக நியமித்தார். உடனே அப்போது மாநிலச் செயலாளராக இருந்த வெங்கடேஷிடம் மகனுக்குப் பதவி வேண்டாம், இதனால் வாரிசு அரசியல் குற்றச்சாட்டு வரும் எனக்கூறி மறுத்தேன். இதுபற்றி ஜெயலலிதாவை நேரில் சந்தித்துக் கேட்டேன். அப்போது பிஹெச்.பாண்டியன் மகன் மனோஜ் பாண்டியன் அரசியலில் இல்லையா, ரவீந்திரநாத்குமார் கட்சிப்பணியைப் பார்க்கட்டும் எனக் கூறிவிட்டார். பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைக்கிறார். அரசியலில் ஈடுபாடு இல்லாமல் என் மகனை அதிமுக தேர்தலில் நிறுத்தவில்லை.
அமமுக வாக்குகளைப் பிரிக்கும். இதனால் அதிமுக தோற்கும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளதே..?
அரசின் திட்டங்கள் மக்களிடம் நேரடியாகச் சென்றடைந்துள்ளன. மத்திய, மாநில அரசுகள் மீது மக்களிடம் பெருவாரியான ஆதரவே உள்ளது. இரட்டை இலைக்கு வாக்களித்தவர்கள் மாற்றுச்சின்னத்துக்கு மாறமாட்டார்கள். அந்த வகையில் அமமுகவினால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. நாங்கள் வெற்றி பெறுவது உறுதி.
பாஜக கூட்டணியால் சிறுபான்மையினரின் வாக்குகள் ஒட்டுமொத்தமாக திமுக அணிக்குக்குச் சென்றுவிடாதா?
அதிமுக எப்போதும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு அரணாகவே இருக்கும். அதிமுக ஆட்சியில் சாதி, மதக்கலவரங்கள் நடந்ததில்லை. மேலும் சிறுபான்மை மக்களுக்குப் பல்வேறு சமூக நலத்திட்டங்களை அதிமுக அரசு தொடர்ந்து நிறைவேற்றித் தந்துள்ளது.
திமுக கூட்டணி வேட்பாளர்களிடம் மட்டுமே வருமானவரித்துறை சோதனை செய்கிறது. தேர்தல் ஆணையம் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனவே?
வருமானவரித்துறைக்குக் கிடைக்கும் தகவலின் அடிப்படையில்தான் சோதனை நடத்துகிறது. எனது வாகனத்தைக்கூட நேற்று நிறுத்திச் சோதனை செய்தனர்.
ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்துள்ள ஸ்டாலின், மோடியை கடுமையாக விமர்சிக்கிறார். மோடியை பிரதமராகப் பிரச்சாரம் செய்யும் நீங்கள் ராகுல்காந்தியின் பெயரைக்கூட உச்சரிக்காதது ஏன்?
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருக்கக்கூடிய தகுதியும் திறமையும் ராகுல் காந்திக்கு இருப்பதாகவே நாங்கள் கருதவில்லை. காவிரி நதி நீர் பிரச்சினையில் மத்தியில் ஆண்ட திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆர்வம் காட்டவில்லை. அப்போதெல்லாம் ராகுல்காந்தி போன்றோர் எங்கே போனார்கள். திமுகவால் தடை ஏற்படுத்தப்பட்ட ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்த மோடி உதவி செய்தார். மதுரையில் எய்ம்ஸ் உள்ளிட்ட முக்கியத் திட்டங்களைப் பிரதமர் மோடிதான் தந்துள்ளார். அவரைப் புகழாமல், ராகுலைப் பற்றி எப்படிப் பேச முடியும்?
தேர்தலுக்கு முன்பாக அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் வந்து இணைவது ஏன் சாத்தியப்படவில்லை?
தொண்டர்கள் அனைவரும் அதிமுகவில்தான் உள்ளனர். பொறுப்பில் இல்லாத சிலர் தினகரன் பக்கம் சென்றிருக்கலாம். அவர்களிடம் ஒரு சதவீதம்கூட உண்மையான தொண்டர்கள் இல்லை. செயற்கையான கூட்டத்தைக் கூட்டுகிறார்.
உங்களுக்கும் மோடிக்கும் உள்ள நட்பால்தான் தேனியைத் தேடி பிரதமர் பிரச்சாரத்துக்கு வருகிறாரா?
(பலமாக சிரிக்கிறார்) தமிழகத்தில் பல இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் பங்கேற்கிறார். சுற்றுப்புறத்தில் உள்ள தொகுதிகளிலும் பிரச்சாரத்தை கொண்டுசெல்லும் வகையிலேதான் தேனி கூட்டத்துக்கு வருகிறார். எனக்கென்று தனியாக இக்கூட்டம் நடக்கவில்லை.
பல தொகுதிகளில் ஜெயலலிதா இருந்தபோது நடந்த தேர்தல் பணிகள் தற்போது நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறதே?
எப்போது தேர்தல் வந்தாலும் எதையும் எதிர்பார்க்காத வலுவான தொண்டர்களைக் கொண்ட இயக்கம் அதிமுக. உணர்வுப்பூர்வமாகப் எப்போதும் தொண்டர்கள் பணியாற்றுவார்கள். தற்போதும் அப்படியே நடக்கிறது.
அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் எழுச்சியைப் பார்க்க முடியவில்லையே, ஏன்?
ஜெயலலிதாவிடம் 22 ஆண்டுகள் உடன் இருந்து அனைத்து தேர்தல்களிலும் பணியாற்றி உள்ளேன். ஜெயலலிதா இருந்தபோது எவ்வளவு ஆதரவு இருந்ததோ அதே அளவிற்கு கூட்டமும், மக்கள் எழுச்சியும் தற்போதும் காணப்படுகிறது. புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில்மக்கள் ஆதரவலை எங்கள் கூட்டணிநோக்கி இருப்பதை கண்கூடாகப் பார்க்கிறேன்.
கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலும் திமுக அணிதான் அதிக இடங்களில் வெல்லும் என்று கூறப்படுகிறதே..?
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது லயோலா கல்லூரி பெயரில் நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்றது. ஆனால் என்ன நடந்தது. பத்திரிகை, தொலைக்காட்சிகள் நடுநிலையோடு கருத்துகளை வெளியிட வேண்டும். தனிப்பட்ட இயக்கத்துக்கும், அவர்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறும் மாறிவிடக் கூடாது.
தங்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்கவிடாமல் சதி செய்துவிட்டதாக அதிமுக மீது தினகரன் குற்றச்சாட்டு வைக்கிறாரே?
சின்னங்களை ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் சட்ட விதிமுறைகளின்படியே நடந்து கொள்கிறது. இதில் எங்களது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்கு இடமில்லை.
கட்சிக்கு ஓபிஎஸ், ஆட்சிக்கு இபிஎஸ் என்ற அளவில் அதிமுகவினருக்குள் புரிதல் ஏற்பட்டிருக்கிறதா அல்லது உங்கள் இருவரின் ஆதரவாளர்கள் மத்தியில் இருவரின் அதிகார எல்லைகள் குறித்து குழப்பமும், அதிருப்தியும் நீடிக்கிறதா?
ஆட்சி தொடர்பாக எடுக்க வேண்டிய செயல் திட்டங்கள் குறித்து முதல்வர் என்னிடத்திலும், கட்சி தொடர்பான முடிவுகளை நான் முதல்வரிடத்திலும் பரஸ்பரம் கலந்து பேசியே செயல்படுகிறோம். இதில் விருப்பு, வெறுப்புக்கு இடமில்லை. இருவர் ஆதிக்கமும் இல்லை. இதில் எந்தக்குழப்பமும் இல்லை.
தேர்தலில் அதிமுக, பாஜக-வுக்கு சாதகமான முடிவுகள் வந்தால், மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுமா?
எதிர்வரும் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப, ஒரு நல்ல முடிவு நாட்டு மக்களின் நலன்கருதி எடுக்கப்படும்.
அதிமுக அரசையும் உங்களையும் மிக மோசமாக விமர்சித்த பாமகவுடன் கூட்டணி அமைத்ததற்கான நோக்கம் என்ன?
இந்திரா காந்தியை மதுரையில் வைத்து திமுக தாக்குதல் நடத்தியது. அன்றைக்கு நெடுமாறன் இல்லாவிட்டால் இந்திரா காந்தியின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும். அவர்களே இப்போது கூட்டணியில் ஒன்று சேர்ந்துள்ளனர். ஆகையால் இதெல்லாம் பெரிய விஷயமில்லை. கடந்த முறை கிடைத்த தோல்வியால், கூடா நட்பு கேடாய் முடியும் என்று கருணாநிதி வருத்தப்பட்டுக் கூறினார். தனது தந்தையின் சொல்லையே கேட்காத மகனாக ஸ்டாலின் மீண்டும் காங்கிரஸுடன் இணைந்திருக்கிறார். தேர்தல் நேரத்தில் பொதுநலன், மக்கள் நலன்கருதி கூட்டணி அமைப்பது கட்சிகள் வழக்கம். அந்த அடிப்படையில் அதிமுக - பாமக கூட்டணி அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT