Last Updated : 26 Apr, 2019 10:08 AM

 

Published : 26 Apr 2019 10:08 AM
Last Updated : 26 Apr 2019 10:08 AM

‘ஊசூ’ கலையில் சாதிக்கும் கால் டாக்ஸி ஓட்டுநர் மகன்

ஊசூ  என்ற தற்காப்புக்கலை போட்டியில் தொடர்ந்து பதக்கங்கள் வென்று சாதித்து வருகிறார் கோவையைச் சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுநரின் மகன் ஜி.பி.அஜித்(17). கோவை சித்ரா அருகில் உள்ள கோல்டுவின்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜி.பழனிநாதன். கால் டாக்ஸி ஓட்டுநர்.  இவரது மனைவி ப.வசந்தி. பனியன் ஆலை மேற்பார்வையாளர். இவர்களது மகன் ஜி.பி.அஜித், கோவை மணி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 (கணினி அறிவியல்)  முடித்துள்ள இவர், ‘ஊசூ’ தற்காப்புக் கலையில் சாதித்து வருகிறார்.

இந்திய பள்ளிகள் விளை யாட்டுக் குழுமம், டெல்லியில் கடந்த ஜனவரி மாதம் 64-வது தேசிய விளை யாட்டுப் போட்டியை  நடத்தியது. இதில் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. ஊசூ போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொண்டு, வெண்கலப் பதக்கம் வென்றார்  அஜித்.

2018-ல் மத்திய அரசு சார்பில்,  ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற, பள்ளி மாணவர்களுக்கு இடையிலான ‘கேலோ இந்தியா’  என்றழைக்கப்படும் தேசிய  விளையாட்டில் பங்கேற்ற இவர், ஊசூ தற்காப்புக்கலை போட்டியில் ‘சான்சூ’ எனப்படும் சண்டைப் பிரிவு இறுதிச் சுற்றில், டெல்லி வீரரைத் தோற்கடித்து தங்கம் வென்றார்.

இந்திய ஊசூ சம்மேளனம் சார்பில், 2016 டிசம்பரில், கோவை சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான ஊசூ தற்காப்புக் கலை போட்டியில் ‘சான்சூ’ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மாணவர் ஒலிம்பிக் சங்கம் அமைப்பு சார்பில்,  2016-ல் மாணவர் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி  புதுச்சேரியில் நடைபெற்றது. இதில் தங்கப் பதக்கம் வென்றார். கடந்த 5 ஆண்டுகளாக கோவையில் நடைபெற்ற, 5 மாவட்ட அளவிலான ஊசூ தற்காப்புக் கலை போட்டிகளில் 5 தங்கப் பதக்கம், கோவை மற்றும் பிற மாவட்டங்களில் நடைபெற்ற 5 மாநில அளவிலான ஊசூ தற்காப்புக் கலை போட்டிகளில், 4 தங்கப் பதக்கம் வென்றுள்ளார் ஜி.பி.அஜித். இவரை சந்தித்தோம்.

“சிறு வயதில் இருந்து விளையாட்டு, ஓவியம் தீட்டுதல், கட்டுரை எழுதுதல் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தேன். பள்ளி அளவிலும், உள்ளூர் அமைப்புகள் சார்பிலும் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்று, பல பரிசுகளை வென்றேன்.

அன்னூர் அருகேயுள்ள கணேசபுரம் புனித அந்தோணியார் மெட்ரிக் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும்போது, பயிற்சியாளர் பி.ஜான்சன் ‘ஊசூ’  தற்காப்புக் கலையை மாணவர்களுக்கு பயிற்றுவிக்க முன்வந்தார்.

அது எனக்கு புதிதாகவும், முழுமையாக கற்றுக் கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. வாரத்துக்கு ஓர் வகுப்பு ஊசூ தற்காப்புக் கலை பயிற்றுவிக்கப்பட்டது.

இந்தக் கலையை நன்றாக கற்றுக்கொண்டு,  போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று எனக்கு விருப்பம் ஏற்பட்டது. இதை பயிற்சியாளரிடம் தெரிவித்தேன். அவரும்  பயிற்சி அளிக்க முன்வந்தார்.  சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிவானந்தா காலனியில் அவரிடம் பயிற்சி பெறத் தொடங்கினேன். என்னுடைய பலம், பலவீனங்களை நன்றாக அறிந்து கொண்டு, சிறப்பாக பயிற்சி அளித்ததுடன், பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கி ஊக்குவித்தார். அது என்னை முழு விளையாட்டு வீரனாக மாற்றியது.

ஏழாம் வகுப்பு படிக்கும் போது நடைபெற்ற, மாவட்ட அளவிலான ஊசூ போட்டியில் தங்கம் வென்றது நான் பெற்ற முதல் பதக்கம் ஆகும். அது என் வாழ்வில் மறக்க முடியாத தருணமாகவும், மகிழ்ச்சிகரமான நிகழ்வாகவும் அமைந்தது.

என் பெற்றோர், பயிற்சியாளருக்கு பெருமை பெற்றுத் தந்ததாகக் கருதினேன். தொடர்ந்து பல போட்டிகளில் வெற்றி பெற்றேன்.பெற்றோர் என்னை தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றனர்.  எங்கள் குடும்பம் ஏழ்மையானது என்றாலும், எனது தேவைகளைஅவர்கள் பூர்த்தி செய்து வருகின்றனர். 2018-ல் பாட்டியாலாவில் சர்வதேச ஊசூ தற்காப்புக் கலை போட்டிக்கான வீரர்கள் தேர்வு முகாம் நடைபெற்றது. போதிய பண வசதி இல்லாததால், என்னால் அதில் பங்கேற்க முடியவில்லை.

இதனால், சர்வதேச போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தது எனக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. ஒருமுறையாவது இந்திய அணிக்காக சர்வதேச போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பதே  என்னுடைய லட்சியம். ஒருநாள் இது பலிக்கும் என்று நம்புகிறேன்” என்றார் தன்னம்பிக்கையுடன் ஜி.பி.அஜித். 

சீன போர்க்கலை ‘ஊசூ’...

ஊசூ தற்காப்புக்கலை குறித்து தமிழ்நாடு ஊசூ சங்க பொதுச் செயலர் மற்றும் பயிற்சியாளர் பி.ஜான்சன் கூறும்போது, “ஊசூ சீனாவின் போர்க்கலையாகும். ‘ஊ’ என்றால் ராணுவம். ‘சூ’ என்றால் பயிற்சி. அதாவது ராணுவத்தில் அளிக்கப்படும் பயிற்சி என்று இதற்கு பொருள் கொள்ளலாம். கராத்தே, குத்துச்சண்டை, குங்பூ போன்ற தற்காப்புக் கலைகளின் ஒட்டுமொத்த கலவை தான் ஊசூ.

‘ஊசூ’ வீரர்களின் தாக்குதலை எதிரிகளால் எளிதாக தாக்குப்பிடிக்க முடியாது. ஆக்ரோஷம் மிகுந்த கலை. இதற்கான பயிற்சிகளும் மிகவும் கடினமானவை. தற்காப்பு ஆயுதங்களை ஊசூ வீரர்கள் கையாளுவதைப்போல, மற்ற வீரர்களால் எளிதாக கையாண்டுவிட முடியாது. உலக நாடுகள் முழுவதும் பரவிய இந்தக் கலை, தற்காப்புக் கலையாகப் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. முதலில் சீனா இக்கலையை வளர்த்தெடுத்து உலகம் முழுவதும் பரப்பியது. அதன் பின்னர், வியட்நாம், ஆப்கானிஸ்தான், தாய்லாந்து, இலங்கை, இந்தியா உள்ளிட்ட 200 நாடுகளில் இக்கலை கற்பிக்கப்பட்டு, பின்னர் விளையாட்டுப் போட்டிகளில் சேர்க்கப்பட்டது. தமிழகத்தில் 2001-ல் இந்தக் கலை அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், அனைத்து மாவட்டங்களிலும் சங்கங்கள் அமைக்கப்பட்டு, மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு, வீரர்கள் உருவாக்கப்பட்டு வருகின்றனர். ஆசியா, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளிலும் இக்கலை இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் மணிப்பூர், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், டெல்லி, ஹரியானா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் அதிகளவில் இக்கலை பயிற்றுவிக்கப்படுகிறது. இதில் சாதித்து வரும் வீரர், வீராங்கனைகள், விளையாட்டு இட ஒதுக்கீட்டில் உயர் கல்வி கற்று வருகின்றனர். இதேபோல, வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை பெற்று வருகின்றனர். தற்காப்புக்கலை மட்டுமல்லாது, சிறந்த எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் இக்கலையைக் கற்றுக்கொள்ள இளைஞர்கள் முன்வர வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x