Published : 05 Sep 2014 09:30 AM
Last Updated : 05 Sep 2014 09:30 AM
செட்டிநாடு குழுமங்களின் இயக்குநர் மற்றும் தலைவர் பதவி யிலிருந்து கடந்த வாரம் திடீரென நீக்கப்பட்டார் தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார். இதையடுத்து, அவரது வளர்ப்பு மகன் ஐயப்பன் என்ற முத்தையா செட்டிநாடு குழும தலைவராக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்.
செட்டிநாட்டு அரசர் குடும்பத்தில் நடக்கும் இந்த அதிரடிகளும் எம்.ஏ.எம்-க்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளும் செட்டியார் சமூகத்து மக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை உண்டாக்கி இருக்கிறது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக செட்டிநாட்டு அரண்மனையில் எம்.ஏ.எம். எதிர் கொண்டு வரும் சங்கடங்கள் குறித்து அவருக்கு நெருக்கமான வட்டத்தினர் ‘தி இந்து’விடம் மேலும் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள்.
இரண்டாக பிரிக்கப்பட்ட அரண்மனை
“சென்னையில் உள்ள செட்டி நாட்டு அரண்மனையையே இப்போது கிழக்கு வாசல், மேற்கு வாசல் என பிரித்து விட்டார்கள். இதில் மேற்கு வாசல் பக்கம் எம்.ஏ.எம். இருக்கிறார். கிழக்கு வாசலில் முத்தையா இருக்கிறார். அரண்மனையின் கிழக்குப் பகுதிக்கு எம்.ஏ.எம். செல்லவே முடியாத அளவுக்கு வழிகள் அடைக்கப்பட்டுவிட்டன.
வீட்டுக்கு அனுப்பப்பட்ட எம்.ஏ.எம். விசுவாசிகள்
செட்டிநாட்டில் உள்ள அரண்மனை, சென்னை அரண் மனை. மும்பை, பெங்களூர், ஹைதரா பாத், டெல்லி உள்ளிட்ட இடங்களில் உள்ள விருந்தினர் மாளிகைகள் இவை அனைத்திலும் பணியில் இருந்த எம்.ஏ.எம். விசுவாசிகள் அனை வரையும் வீட்டுக்கு அனுப்பி விட்டு புதியவர்களை பணியில் அமர்த்தி உள்ளனர். விருந் தினர் மாளிகைகளை பூட்டி வைத்திருக்கின்றனர். அண்மை யில் டெல்லி சென்ற எம்.ஏ.எம். அங்குள்ள விருந்தினர் மாளிகை பூட்டிக் கிடந்ததால் அங்கு தங்க முடியாமல் திரும்பி இருக் கிறார். இப்போது சென்னை அரண்மனையில் தனக்கு பணி செய்வதற்காக தனக்கு விசுவாச மானவர்களை தனது பொறுப்பில் சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்திருக்கிறார்.
மருத்துவமனைக்கு பணம் கொடுக்க மறுப்பு
சென்னையில் உள்ள ரெட் ஹில்ஸ் ஏரியாவில் எம்.ஏ.எம்-மிற்கு சொந்தமான சுமார் நூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட குதிரைப் பண்ணையின் ஒரு பகுதியில் விவசாயம் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, எம்.ஏ.எம். சென்னையில் கண் புரை அறுவைச் சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார். இதற் கான செலவு நாற்பதாயிரம் ரூபாய். இந்த ‘பில்’லை செட்டிநாடு குழுமம் சார்ந்த ஒரு நிறுவனத்துக்கு அனுப்பி இருக்கிறது மருத்துவமனை நிர்வாகம். ஆனால், அந்தத் தொகையை தரமுடியாது என அந்த நிறுவனத்திலிருந்து பதில் சொல்லி உள்ளனர்.
வருத்தப்பட்ட எம்.ஏ.எம்.
இதை எல்லாம் தனக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து கொண்ட எம்.ஏ.எம்., ’நீட்டிய இடத் தில் எல்லாம் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறேன். இன்னும் எதைக் கேட்டாலும் எழுதிக் கொடுக்க நான் தயார். கடைசி காலத்தில் என்னை நிம்மதி யாக இருக்க விட்டால் போதும். எனக்குப் பின்னால் இந்தச் சொத்துக்கள் எல்லாம் யாருக்குப் போகப் போகிறது? எதற்காக இவர்கள் இப்படி எல் லாம் செய்கிறார்கள்?’ என்று வருத்தப்பட்டிருக்கிறார்’’ என்று சொன்னார்கள் எம்.ஏ.எம்-மிற்கு நெருக்கமான வட்டத்தினர்.
முத்தையா வசம் 70 சதவீத பங்குகள்
இதனிடையே, செட்டிநாட்டு அரசர் குடும்பத்தில் நடக்கும் இந்தக் குழப்பங்களுக்கு தீர்வு காணும் முயற்சியில் செட்டியார் சமூகத்து வி.ஐ.பி-க்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் சிலரிடம் பேசியபோது, “செட்டி நாடு குழுமத்தில் ஏற்கெனவே இருந்த நிறுவனங்கள் மூடப் பட்டு புதிய நிறுவனங்களை ஆரம் பித்திருக்கின்றனர். செட்டிநாடு சிமெண்ட் நிறுவன பங்குகளில் 30 சதவீதம்தான் எம்.ஏ.எம். வசம் இருக்கிறது. எஞ்சியவை முத்தையாவின் கையில். எம்.ஏ.எம். மனைவி வசம் இருந்த பங்குகளும் முத்தையா தரப்புக்கு மாற்றப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதை எப்போது, எப்படி மாற்றினார்கள் என்ற விவரத்தைப் பார்க்க வேண்டும்.
ஒரு மாதம் முன்பே சி.பி.ஐ-க்கு தகவல்
செட்டிநாடு குழும தலைவர் பதவியிலிருந்து தன்னை நீக்க முயற்சி நடப்பது தெரிந்துதான் கம்பெனிகளுக்கான பதிவாளர் மனுநீதிச் சோழனை எம்.ஏ.எம். அணுகி இருக்கிறார். இதை தெரிந்து கொண்டவர்கள் ஒரு மாதத்திற்கு முன்பே சி.பி.ஐ-யில் தகவல் கொடுத்திருக்கிறார்கள். அதை வைத்துத்தான் மனுநீதிச் சோழனை மடக்கி இருக்கிறது சி.பி.ஐ. அவரது காரில் பணத்தை வைத்ததில் கூட உள்குத்து சதி நடந்திருப் பதாகச் சொல்கிறார்கள்.
சுவீகாரத்தை ரத்து செய்யமுடியும்
செட்டிநாடு குழுமத்தின் தலைவராக முத்தையா வந்து விட்டாலும் எம்.ஏ.எம்-மின் விசுவாசி தான் குழுமத்தின் செயலா ளராக இருக்கிறார். எஞ்சிய பொறுப் பாளர்களில் பெரும் பகுதியினர் எம்.ஏ.எம். விசுவாசிகளாகவே இருப்பதால் அவர் நினைத்தால் மீண்டும் பொறுப்புக்கு வர முடியும். இன்னொரு பையனை சுவீகாரம் எடுப்பதற்கு சட்டத்தில் இடமில்லை. தேவைப்பட்டால் ஒரு பெண்ணை வேண்டுமானால் மகளாக தத்து எடுக்கலாம்.
ஏற்கெனவே சுவீகாரம் எடுத்த பிள்ளை ஒத்துவரவில்லை என்றால் அதற்கான இழப்பீட்டைக் கொடுத்து முறிவு எழுதி சுவீகாரத்தை ரத்து செய்யும் வழக்கம் எங்கள் செட்டியார் குலமுறை வழக்கத்தில் நடைமுறையில் உள்ளது. அப்படி ரத்து செய்தால் மட்டுமே இன்னொரு பையனை சுவீகாரம் எடுக்க முடியும். ஆனால், இதற்கு எம்.ஏ.எம். சம்மதிப்பாரா என்று தெரியவில்லை.
செட்டிநாடு குழுமம் சார்ந்த பல அறக்கட்டளைகளுக்கு ஏராளமான சொத்துக்கள் இருக்கின்றன. இந்த அறக்கட்டளைகளை ஒருங் கிணைத்து தர்ம அறக்கட்டளையாக உருவாக்கி மக்களுக்கு பயன்படும் விதமாக மாற்ற வேண்டும். செட்டிநாட்டு அரசர் குடும்பத்தின் நற்பெயரைக் காப்பாற்ற இதுதான் சிறந்த வழி’’ என்று சொல்கின்றனர் அவர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT