Published : 05 Apr 2019 06:38 PM
Last Updated : 05 Apr 2019 06:38 PM
திரைத்துறையில் ரஜினி சூப்பர் ஸ்டார். ஆனால் அரசியலில் நானே சூப்பர் ஃபாஸ்ட் என்பதை மெய்ப்பிப்பதுபோல் 2018 பிப்ரவரியில் தொடங்கப்பட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 2019 ஏப்ரலில் தேர்தல் அரசியலில் ஈடுபட்டுள்ளது. கமலின் கட்சி காணும் முதல் தேர்தல் இதுவென்பதால் கட்சியினரின் எதிர்பார்ப்பும் அரசியல் நோக்கர்களின் பார்வையும் மநீம மேல் குவிந்திருக்கிறது.
மக்கள் நீதி மய்யம் சார்பில் மத்திய சென்னை, பொள்ளாச்சி என இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதிக்கும் பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
கமலின் அரசியல், மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் வீச்சு, மக்கள் வரவேற்பு என்பன குறித்து பெண் வேட்பாளர்களிடம் பேசினோம்.
மக்கள் நீதி மய்ய மத்திய சென்னை வேட்பாளர் கமீலா நாசர்:
''நீங்கள் புதுக்கட்சியா? நீங்களாவது சொன்னதை செய்வீர்களா? என்ற விரக்தியின் வெளிப்பாடாகவே வருகின்றன மத்திய சென்னை மக்களின் வாய்களில் இருந்து வரும் வார்த்தைகள். இதுவரை இருந்த கட்சிகள் எல்லாம் வாக்குறுதிகள் அளித்தனவே தவிர எதுவும் செய்யவில்லை என்ற அதிருப்தியில் இருக்கிறார்கள் மக்கள். நடுத்தர வர்க்கத்தினரிடம் எங்களின் கட்சி நன்றாகவே சென்று சேர்ந்திருக்கிறது. சில இடங்களில் மக்கள் எங்களைப் பார்த்து கையசைக்கிறார்கள். சில இடங்களில் அன்பான பார்வை மட்டும் கிடைக்கிறது. சில இடங்களில் வெற்றிச் சின்னம் காட்டுகிறார்கள். உணர்வுகளை வெவ்வேறு வடிவங்களில் காட்டுகிறார்கள். மொத்தத்தில் எங்கள் டார்ச் லைட்டின் ஒளி பிரகாசமாகிக் கொண்டே இருக்கிறது.
எங்களுக்குக் கூடும் கூட்டம் எல்லாம் பணத்துக்காகவும், பிரியாணிக்காகவும் கூடும் கூட்டம் அல்ல. மாறாக கமலை ரசிக்கும், கமல் மீது மரியாதை கொண்ட கூட்டம்'' என்று மநீம பற்றி ஒரு சிறு முன்னுரையைக் கொடுத்தார் கமீலா நாசர்.
தொடர்ந்து பேசிய அவர், ''கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யக் கட்சியைத் தேர்வு செய்ய இரண்டே காரணங்கள்தான் இருந்தன. இரண்டுமே தலைவர் கமல்ஹாசனின் தனித்தன்மை சார்ந்தவை. ஒன்று அவருடைய வெளிப்படைத்தன்மை, மற்றொரு அவர் காட்டும் நேர்த்தி. இந்த இரண்டும் ஓர் அரசியல்வாதியின் அத்தியாவசிய குணநலன்களாக நான் பார்க்கிறேன்.
வெளிப்படையான அரசியல்வாதியால்தான் நேர்மையான அரசையும், எதையும் நேர்த்தியாகச் செய்யும் தலைவரால்தான் நேர்த்தியான திட்டங்களையும் வகுக்க முடியும். இவைதான் என்னை மநீம-வில் இணைய உந்தியது. ஒரு தலைவரின் பண்புதான் தொண்டர்களுக்குச் சென்று சேரும். மநீமவில் இணைந்த பிறகு சிறு சிறு விஷயங்களில்கூட நான் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறேன்.
தொகுதியில் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் 10 பெண்கள் தண்ணீர் குடத்துடன் அங்குமிங்கும் செல்வதைப் பார்த்த பிறகு தண்ணீர் சிக்கனத்தை வீட்டில் அமல்படுத்தியிருக்கிறேன். நாங்கள் கொள்கையின்படி வாழ முயல்கிறோம். அதுதான் மநீம எங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கும் பாடம். மாற்றம் வர வேண்டும் என்றால் நாங்கள் மாற வேண்டுமல்லவா? எங்களிடம் தொடங்கிய மாற்றம் எல்லோரிடமும் ஏற்படவே நாங்கள் களத்தில் நிற்கிறோம்.
பெண் வாக்காளர்கள் எங்கள் கட்சிக்குப் பெரும் பலம். அது கமல்ஹாசனின் நடிகர் என்ற அடையாளத்தால் கிட்டியது அல்ல. அவரை மாற்றத்துக்கான அரசியல்வாதியாகவே மக்கள் பார்ப்பதால் கிடைத்தது. அவருக்கான ரசிகர் மன்றங்கள் எல்லாமே நற்பணி மன்றங்களாக பல ஆண்டுகள் செயல்பட்டிருக்கின்றன. அதனால் மக்களுடனான தொடர்பு கட்சி ஆரம்பித்த பிறகு கிடைத்தது அல்ல. எங்களை சமூக சேவகர்களாகப் பார்த்தனர். இப்போது சமூக மாற்றத்துக்கான அரசியல் கட்சியாகப் பார்க்கின்றனர். நாங்கள் கையில் எடுத்திருக்கும் அரசியல் அடுத்த தலைமுறையின் நலனுக்கானது.
மக்கள் நீதி மய்யம் எனக்கு மண்டலத் தலைவர் பதவியை வழங்கியிருக்கிறது. இதுவும் மிகவும் பொறுப்பான பதவி. பெண்களுக்குப் பொறுப்பும் முக்கியவத்துமும் நிறைந்த பதவிகளை வழங்குவதே எங்கள் கட்சியின் தனிச்சிறப்பு.
மத்திய சென்னை மக்கள் மாறி மாறி பழைய கட்சிகளுக்கு வாக்களித்தும் சாலை வசதி கிட்டவில்லை, சுகாதாரமான குடிதண்ணீர் கிடைக்கவில்லை. இத்தொகுதியின் பிரச்சினைகளை நிச்சயமாக தீர்த்துவைப்போம். எங்கள் அரசியலை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களும் சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்''.
இவ்வாறு கமீலா நாசர் கூறினார்.
மக்கள் நீதி மய்ய பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் ஆர்.மூகாம்பிகை ரத்னம்:
பொறியியல் பட்டதாரியான ஆர்.மூகாம்பிகை ரத்னம், மநீமவில் சேர்வதற்கு முன்னரே பொள்ளாச்சி மக்களுக்கு பரிச்சயமானவர். பொள்ளாச்சியிலிருந்து லண்டன் வரை காரிலேயே சென்ற மூன்று பெண்களில் ஒருவர். மகளிர் முன்னேற்றம், குழந்தைகளின் கல்வி ஆகியனவற்றை வலியுறுத்தி இந்த கார் பயணத்தை அவர் மேற்கொண்டார். மநீமவின் பெண் வேட்பாளர் என்ற முறையில் அவரிடம் எதற்காக கமலின் கட்சியில் இணைந்தீர்கள், கமல் அரசியல் பலம், மக்களின் மனநிலை, பொள்ளாச்சி சம்பவம் ஆகியன குறித்த கேள்விகளை முன்வைத்தோம்.
''கட்சி ஆரம்பித்த ஒரே வருடத்தில் எங்களை மக்கள் மாற்று சக்தியாக பார்க்கத் தொடங்கியிருப்பதே எங்களின் மிகப் பெரிய பலம். நாங்கள் மாற்றத்தை விரும்புகிறோம். அதற்காக மாறவும் தயாராக இருகிறோம். ஆனால், நீங்கள் எங்கள் கோரிக்கைகளுக்கு செவி கொடுப்பீர்களா? உங்களை எப்போதும் எளிதில் சந்தித்து எங்கள் குறைகளைக் கூறும் அளவுக்கு இருப்பீர்களா என்று கேட்கின்றனர். இங்கு மாறி மாறி ஆட்சியில் அமர்ந்தவர்கள் வாக்கு சேகரிப்பதற்கு மட்டுமே தொகுதிக்கு வந்து சென்றதன் விளைவு இது.
பொள்ளாச்சி சம்பவம் எங்கள் ஊருக்கு பெரிய அவமானத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. பொள்ளாச்சியை ஒரு பெரிய கிராமம் என்றுதான் நான் சொல்வேன். இங்குள்ள பெண் பிள்ளைகள் இன்னும் அறியாமையிலும் கபடமற்றவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு யதார்த்த நிலை குறித்து விழிப்புணர்வு பெரிய அளவில் தேவைப்படுகிறது. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதை எங்கள் தேர்தல் வாக்குறுதியாகவே கூறியிருக்கிறோம்.
சமூகச் செயற்பாட்டாளாராக இருந்த எனக்கு எப்போதுமே அரசியல் ஆர்வம் இருந்தது. ஆனால், பெண் அரசியலில் ஈடுபடுவதற்கான களமாக எந்தக் கட்சியும் எனக்குத் தெரியவில்லை. மக்கள் நீதி மய்யத்தின் கட்டுப்பாடும் ஒழுங்கும் என்னைக் கவர்ந்தது. அதனாலேயே இந்தக் கட்சியில் சேர்ந்தேன். வேட்பாளர் தேர்வே வித்தியாசமாக இருந்தது. கட்சியில் மார்ச் மாதம்தான் இணைந்தேன். ஒரு சில நாட்களிலேயே கட்சிக்குள் பெண்களுக்கு இருந்த அரசியல் சுதந்திரத்தையும் பெண்களிடம் காட்டப்படும் நாகரிகத்தையும் உணர்ந்து கொண்டேன்.
நான் இதுவரை பிரச்சாரக் களத்தில் மக்களை நேரில் பார்த்தவரையில் எங்கள் தலைவர் கமல்ஹாசனை மக்கள் அரசியல் தலைவராக அங்கீகரித்துக் கொண்டுள்ளனர் என்பதை அறியமுடிந்தது. பெண்கள் ஓட்டு எங்கள் கட்சிக்கே. நடிகராக பெண்களை ரசிகைகளாகக் கொண்டிருந்தவர் அரசியல் தலைவராக பெண்கள் மனங்களில் இடம்பிடித்திருக்கிறார்''.
இவ்வாறு மூகாம்பிகை கூறினார்.
பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் பிரியதர்ஷினி:
''என் தந்தை அரசியலில் இருந்தார். அதனால் அரசியலை நான் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். வழக்கறிஞராக ஆன பிறகு அரசியல் ஆர்வம் இருந்தது. மத்தியில் மோடி ஆட்சி அமைந்த பிறகு இந்த நாட்டில் இனியும் வாழ முடியுமா? என்ற அச்ச உணர்வு ஏற்பட்டது. உணவு தொடங்கி படிப்பு வரை எல்லாவற்றிலும் இருந்த தலையீடும் அதற்கு ஆளுங்கட்சி செய்த தலையாட்டும் வேறு நாட்டுக்குச் சென்றுவிடலாமா என்றளவுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.
அப்போதுதான் மைய அரசியல் கொள்கையுடன் கமல்ஹாசன் வந்தார். இந்தியாவுக்கு இப்போதுதேவை வலதுசாரி அரசியலும் இல்லை, இடதுசாரி அரசியலும் இல்லை. ஒரு மையமான அரசியலே தேவை. அந்த மையமான அரசியலை முன்னெடுத்த கமலை சாதாரண தொண்டராகப் பின் தொடர்ந்தேன். வளர்ந்த கட்சிகளில் பல ஆண்டுகளாக இருந்தும் ஒரு பெண் அரசியல்வாதி அடைய முடியாத மாவட்டச் செயலாளர் பதவியை எனது களப் பணியைக் கண்டு கமல் கொடுத்தார். தொண்டர்களை அடையாளம் காணும் அரசியல்வாதி அவர். அவரது சாதி ஒழிப்புக் கொள்கை என்னைப் போல் சாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் ஈர்ப்பைத் தந்தது.
மக்கள் நீதி மய்யத்துக்குள் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறது. இங்கே எங்கள் முதுகுக்குப் பின்னால் புறம் பேசுபவர்கள் யாரும் இல்லை. எங்களை அவதூறான வார்த்தைகளில் திட்டுபவர்கள் இல்லை. எங்களுக்கான சுதந்திரம் இருக்கிறது. மரியாதை இருக்கிறது. இதுவே எங்களுக்கு உற்சாகம் அளக்கிறது.
களத்தில் எங்கள் தலைவருக்கு மக்கள் அபிமானம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சில நேரங்களில் சில இடங்களில் ஆளுங்கட்சியினர் தரும் நெருக்கடிகள் எங்கள் வளர்ச்சிக்கான சாட்சி.
நாட்டுக்குத் தேவையான அரசியலை முன்னெடுத்திருக்கும் எங்கள் கட்சி தமிழக அரசியலில் தனித்துவ இடம் பிடிக்கும்''.
இவ்வாறு பிரியதர்ஷினி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT