Published : 02 Apr 2019 12:00 AM
Last Updated : 02 Apr 2019 12:00 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதியில் வெயிலின் உக்கிரம் அதிகரிப்பால் பசுமைக்குடிலில் ரோஜா செடிகள் கருகின.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, பேரிகை, சூளகிரி, கெலமங்கலம், தளி உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ணநிலை காரணமாக 475 ஹெக்டேர் பரப்பளவில் பசுமைக்குடில் அமைத்து விவசாயிகள் ரோஜா மலர் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு சாகுபடி செய்யப்படும் தரமான ரோஜா மலர்கள் அனைத்து மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நிகழாண்டில் சூளகிரி, ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை பகுதியில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால், பசுமைக்குடிலில் உள்ள ரோஜா மலர்கள் செடியிலேயே கருகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக மலர் விவசாயி பாலசிவபிரசாத் கூறும் போது, ரோஜா மலர்கள் உற்பத்தி மேற்கொள்ள தண்ணீர், மண்வளம் மற்றும் காற்றின் ஈரப்பதம் 80 சதவீதம் இருக்க வேண்டும். கடந்த ஆண்டு போதிய மழையின்மையால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பசுமைக்குடில் உள்ளே 100 டிகிரி பாரன்ஹீட் மேல் வெயிலின் தாக்கம் உள்ளது. இரவிலும் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தைவிட 40 டிகிரி பாரன்ஹீட் வரை உஷ்ணம் அதிகரித்துள்ளது. 70 சதவீதம் ரோஜா பண்ணைகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. புதியதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தாலும் ஆயிரம் முதல் 1200 அடிக்கு கீழ் தண்ணீர் கிடைக்கிறது. அந்த தண்ணீர் உப்பு தன்மை அதிகமாக இருக்கும் என்பதால் ரோஜா செடிகளுக்கு பயன்படுத்த முடியாது.
ரோஜா மலர் விற்பனையும் வெகுவாக சரிந்துள்ளது. ஒரு ரோஜா மலர் ரூ.1.50 முதல் நல்ல தரமான பூ ரூ.3 வரை விற்பனையாகிறது. இந்த ஆண்டு மழை பெய்யவில்லை எனில் ரோஜா மலர்கள் விவசாயம் முற்றிலும் முடங்கிவிடும். விவசாயிகளுக்கு மழைநீர் சேகரிக்கும் குட்டைகள் அமைக்க மானியங்கள் வழங்கப்படுகிறது. விவசாயிகள் குட்டையில் பிளாஸ்டிக் சீட் மூலம் தண்ணீர் தேக்கி மீண்டும் பயன்படுத்துகின்றனர். குட்டையில் தேக்கி வைக்கப்படும் மழைநீர் பூமிக்குள் செல்வதில்லை. ஏரிகளில் நீர் நிரப்பலாம்மழைநீர் சேகரிப்பு திட்டம் 10 சதவீதம் கூட முறையாக செயல்படுத்தவில்லை. மாநில எல்லையில் இருந்து பாகலூர், சூளகிரி வரை 27 பெரிய ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் பல ஆண்டுகள் நிரம்பவில்லை. ஏரிகள் தூர்வாரப்படவில்லை. தென்பெண்ணை ஆற்றில் மழைக்காலங்களில் வெளியேறும் உபரி நீரை, கால்வாய்கள் மூலம் 27 ஏரிகளுக்கு நிரப்பினால், இதுபோன்ற வறட்சி காலங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப வேண்டும். ஒகேனக்கல் குடிநீர் குழாய்கள் பெரும்பாலும் ஏரிகளின் வழியாக செல்கிறது. ஒகேனக்கல் தண்ணீர் கூட ஏரிகளில் நிரப்பலாம். நீர்பாசன திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காவிட்டால் மலர்கள், காய்கறிகள் சாகுபடி வெகுவாக பாதிக்கப்படுவதுடன், விலை பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளது, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT