Published : 10 Apr 2019 12:00 AM
Last Updated : 10 Apr 2019 12:00 AM
தமிழகத்திலேயே அதிகபட்சமாக 42 பேர் போட்டியிடும் கரூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை, காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் தற்போதைய எம்.பி.யும், மக்களவை துணைத் தலைவருமான மு.தம்பிதுரை போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் செ.ஜோதிமணி போட்டியிடுகிறார். அமமுக சார்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் பிஎஸ்என் தங்கவேல், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் ரெ.கருப்பையா, மக்கள் நீதி மய்யம் சார்பில் டாக்டர்ரா.ஹரிஹரன், தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் நொய்யல் ராமசாமி, தேசிய உழவர் உழைப்பாளர் கழகம் சார்பில் ஜோதிகுமார் உள்ளிட்டோருடன் 30-க்கும் மேற்பட்ட சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர். தமிழகத்திலேயே அதிகபட்சமாக 42 வேட்பாளர்கள் இங்கு போட்டியிடுகின்றனர்.
தலைவர்கள் பிரச்சாரம்
அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன், நடிகர்கள் கஞ்சா கருப்பு, வையாபுரி, பபிதாஉள்ளிட்டோர் பிரச்சாரம் செய்துள்ளனர்.
இத்தொகுதியில் 4 முறை வெற்றி பெற்றுள்ள தம்பிதுரை 5-வது முறையாக வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்புடன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர். முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, வி.செந்தில்பாலாஜி, ம.சின்னசாமி, திமுக கொறடா சக்கரபாணி உள்ளிட்டோர் தற்போது தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
2011 சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னால் தோற்கடிக்கப்பட்ட ஜோதிமணியை இத்தேர்தலில் வெற்றிபெறச் செய்யும் முனைப்புடன் வி.செந்தில்பாலாஜி பணியாற்றிவருகிறார்.
குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூரில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட தம்பிதுரை பேசியபோது, ‘‘கடந்த முறை மக்களின்குறைகளைக் கேட்க அதிகாரிகளுடன் வந்தேன். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டுமனு அளித்தீர்கள். அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்ததும் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும். இப்பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில், மேலும் தேவையான பகுதிகளில் குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்’’ என்றார்.
புகார் மையம் அமைக்கப்படும்
கரூர் அடுத்த ஆண்டாங்கோவில் பெரியார் நகரில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஜோதிமணி பேசியபோது, ‘‘தொகுதியின் மிகப் பெரிய பிரச்சினையான குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்கள் தயக்கமின்றி புகார்தெரிவிக்க வசதியாக சட்டப்பேரவை தொகுதிவாரியாக புகார் மையம் அமைப்பேன். போட்டித் தேர்வுகளுக்கு இளம்பெண்கள், இளைஞர்கள் தங்களை தயார் செய்துகொள்ள உதவும் வகையில் சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
நான் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவள். அரசியலில் குறுக்குவழியில் பணம் சம்பாதிக்கமாட்டேன். என் சொத்து விவரத்தை தெரிவித்துள்ள நான், எம்.பி.யாகதேர்ந்தெடுக்கப்பட்டால், 5 ஆண்டுகள் கழித்தும் சொத்து விவரத்தை மக்களுக்கு தெரிவிப்பேன்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT