Published : 19 Apr 2019 12:00 AM
Last Updated : 19 Apr 2019 12:00 AM
மதுரையில் வாக்குப்பதிவு நிலவரத்தை மிக ஆர்வத்துடன் கேட்டு வந்த வேட்பாளர்கள் நிமிடத்துக்கு, நிமிடம் மகிழ்ச்சி யிலும், தவிப்பிலும் மாறி, மாறி அனுபவித்த சூழல் காணப் பட்டது.
மதுரை மக்களவைத் தொகுதியில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் விவிஆர்.ராஜ்சத்யன்(அதிமுக), சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட்), டேவிட் அண்ணாதுரை (அமமுக), அழகர் (மநீம), பாண்டியம்மாள் (நாம் தமிழர்) உட்பட பலரும் தொகுதி முழுவதும் இரவு 8 மணி வரை சுற்றி வந்தனர். வாக்குச்சாவடி வாரியாக தங்கள் கட்சியினர் எப்படி பணி யாற்றுகின்றனர், எந்த கட்சிக்கு எப்படி வாக்குகள் பதிவாகிறது எனப் பல்வேறு வழிகளில் தகவல்களைத் திரட்டினர். வாக்குப்பதிவு குறித்து நகரின் முக்கிய பகுதி மற்றும் சட்டப் பேரவை தொகுதிகள் வாரியாக விவரங்களைப் பெற்றனர். மேலூர், மதுரை கிழக்கு தொகுதிகளின் வாக்குகள் பதிவு குறித்து அமமுக வேட்பாளருக்கு மகிழ்ச்சி அளித்த நிலையில், அதிமுக, மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் தவித்தனர். மேலூர் நகர் பகுதியில் பதிவான வாக்குகள் திமுக வேட்பாளருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொட்டாம்பட்டி பகுதியில் பதிவான வாக்குகள் அதிமுக வேட்பாளருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது.
இதேபோல் மதுரை நகரில் உள்ள ஒவ்வொரு சட்டப் பேரவை தொகுதியும் ஒரு வேட்பாளருக்கு சாதகமாகவும், மற்றொரு வேட்பாளருக்கு பாதகமாகவும் இருப்பதாகக் கணக்கிட்டுக் கொண்டு, அவர்களுக்கிடையே பெரும் குழப்பமடைந்தனர். இத்தகவல்கள் அவர்கள் சார்ந்த கட்சியினருக்கும் பெரும் விவாதப் பொருளானது.
மதுரையில் சுமார் 65.83 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் கிராமப் பகுதியைச் சேர்ந்த மேலூர், மதுரை கிழக்கில் மதுரை நகரைவிட 6 சதவீதம் கூடுதலாக வாக்குகள் பதிவாகின. மதுரை கிழக்குத் தொகுதியில் மட்டும் அதிகபட்சமாக 2.17 லட்சம் வாக்குகள் பதிவாகியிருக்கிறது. இது மற்ற தொகுதிகளைவிட சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகம். இதனால் கிழக்குத் தொகுதியில் தங்களுக்குத்தான் சாதகம் என ஒரு வேட்பாளர் மகிழ்ச்சியடைகிறார். மற்றொரு வேட்பாளர் தவிக்கிறார்.
மேலூரில் பெறும் வாக்குகளை மதுரை நகருக்குள் பெற முடியுமா எனத் தெரியாமல் அமமுக வேட்பாளர் தவிக்கிறார். மொத்தத்தில் 10.12 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளதால், இதில் 4 லட்சம் வாக்குகளுக்கு குறையாமல் பெறும் வேட்பாளரே வெற்றி பெற முடியும் என்ற நிலை உள்ளது. இவற்றைப் பெற முடியுமா என சட்டப் பேரவை தொகுதி வாரியாகப் பல்வேறு கணக்குகளைப் போட்டு வருகின்றனர். அதிக வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கும் வேட்பாளர்கூட, இந்த அளவுக்கு மொத்த வாக்குகளைப் பெற முடியுமா எனத் தவிக்கிறார். மக்கள் நீதி மய்யம் கட்சிக்குப் பரவலாக ஆங்காங்கே வாக்குகள் பதிவானதாக கிடைத்துள்ள தகவல் அக்கட்சி வேட்பாளருக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. அதேநேரம் இந்த வாக்குகளால் யாருக்கு நஷ்டம் என இதர கட்சி வேட்பாளர்கள் கணக்குப் போட்டு பரிதவித்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாண்டியம்மாவுக்கு தொகுதி முழுவதும் பரவலாக ஓட்டுக்கள் விழுந்ததாக தெரிவித்தனர். மொத்தத்தில் நேற்றைய வாக்குப்பதிவு முக்கிய கட்சி வேட்பாளர்கள் 3 பேரிடையே மாறி, மாறி மகிழ்ச்சி, தவிப்பு என்ற சூழலை ஏற்படுத்திவிட்டது. ஆளுக்கொரு கணக்கைக்கூறி தாங்கள்தான் வெற்றி பெறுவோம் என 3 முக்கிய கட்சி வேட்பாளர்கள் கூறிவருகின்றனர். இதற்காக விடிய,விடிய அதிகாரிகள், முகவர்கள், உளவுப் பிரிவினர், கட்சி நிர்வாகிகள் எனப் பல்வேறு தரப்பினரிடம் விவரங்களைக் கேட்டுள்ளனர். இவர்களுக்கு மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கையில் சரியான பதில் கிடைக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT