Published : 07 Apr 2019 12:00 AM
Last Updated : 07 Apr 2019 12:00 AM
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாலும், தேர்தல் நேரத்தில் பிரியாணி வழங்க கூடுதல் இலைகள் தேவைப்படுவதாலும், சென்னையில் வாழை இலையின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
தமிழனின் கலாச்சாரம், பண்பாட்டோடு ஒருங்கிணைந்தது வாழைமரம். அனைத்து சுப காரியங்களிலும், கோயில் வழிபாட்டுக்கும், சடங்கு, சம்பிரதாயங்களிலும் வாழைத் தார், வாழை இலை பெரிதும் பயன்படுகிறது. வாழையின் அடிப்பகுதி முதல் நுனிப்பகுதி வரை, வாழைப்பூ, வாழைக்காய், வாழைப்பழம், வாழை இலை, வாழைத் தண்டு, வாழை மரப்பட்டை, வாழைத் நார் உட்பட15 வகைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
தமிழ்நாட்டில் பூவன், செவ்வாழை, கற்பூரவல்லி உள்ளிட்ட 12 வகையான வாழை மரங்கள்வளர்க்கப்படுகின்றன. தூத்துக்குடி, திருச்சி, தேனி, கடலூர், ஈரோடு, புதுக்கோட்டை, நாமக்கல்,கரூர், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் வாழை அதிக அளவில்சாகுபடி செய்யப்படுகிறது. இலைக்காகவும், தாருக்காகவும் என இரண்டு வகைகளில் வாழை சாகுபடி நடக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்ததால், வாழை இலையின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இப்போதுதேர்தல் நேரம் என்பதால் அரசியல் கட்சிகள், பிரச்சாரத்தில் ஈடுபடும் தங்கள் தொண்டர்களுக்கு தவறாமல் பிரியாணி வழங்குகின்றனர். பிரியாணியை வைத்துக் கொடுக்க வாழை இலை பெருமளவு பயன்படுத்தப்படுவதால் அதன்தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. இதன்காரணமாக வாழை இலையின் விலையும் உயர்ந்துவிட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஜெ.அஜித்தன் கூறியதாவது:தமிழ்நாடு முழுவதும் 3 லட்சம் ஏக்கரில் வாழை இலை சாகுபடி நடைபெறுகிறது. 50 பைசாவுக்கும், ஒரு ரூபாய்க்கும் விற்ற வாழை இலை தற்போது ரூ.4 முதல் ரூ.5 வரை விற்கப்படுகிறது. அதனால்,விவசாயிகளின் நிகர வருவாய் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்சி அருகே உள்ள திருகாட்டுப்பள்ளி பகுதிகளில் இலைக்காகவே வாழை சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் இருந்து முன்பெல்லாம் ஓர் ஏக்கர் நிலத்தை ஓராண்டுக்கு ரூ.40 ஆயிரத்துக்கு குத்தகை எடுத்தனர். இப்போது, ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கொடுத்து குத்தகை எடுக்கின்றனர்.
முன்பு இலைக்காக 10 சதவீதம் முதல் 12 சதவீதம் வரையிலான நிலப்பரப்பில் வாழை பயிரிடப்பட்டது. இப்போது இது 18 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஓர் ஏக்கரில் வாரம் ஒன்றுக்கு 800 வாழைக் கன்றுகள் மூலம் 3,200 இலைகள் வரை கிடைக்கும். அவற்றை தலைவாழை இலை, டிபன் இலை, சிறிய சாப்பாட்டு இலை என தரம்வாரியாக பிரித்து விற்கின்றனர். ஓர் இலைக்கு ஒரு ரூபாய் வீதம் ஏக்கருக்கு ரூ.3,200 கிடைக்கும். வாழைக் கன்று வைத்ததில் இருந்து 120 நாட்களுக்குப் பிறகு வாரந்தோறும் 14 மாதங்கள் வரை இலையை எடுக்கலாம். வாழைத் தாருக்காக சாகுபடி செய்பவர்கள் 90 நாட்கள் வரை இலையை எடுத்து விற்பார்கள்.
தமிழ்நாட்டு வாழைப்பழம் முதன்முறையாக கடந்த ஜனவரியில் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. பின்னர், சர்வதேச சந்தையில் போதிய விலை கிடைக்காததால் ஏற்றுமதி செய்யவில்லை. உற்பத்திச் செலவைக் குறைக்கவும், சர்வதேச சந்தையில் விற்பதற்கான மானியத்தையும் அரசு வழங்கினால் மீண்டும் ஏற்றுமதி செய்ய முடியும். சென்னைக்கு தினமும் தூத் துக்குடி, தஞ்சாவூர், திருவையாறு, படவேடு ஆகிய பகுதிகளில் இருந்து 85 லாரிகளில் 850 டன்வாழைத் தார்களும், 60 டன்வாழை இலைகளும் வருகின்றன.
தற்போது தேவை அதிகரித்திருப்பதால் ஆந்திராவில் இருந்தும் 40 முதல் 50 டன் வாழைத்தார், வாழை இலைகள் வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை மேத்தா நகரைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் ராஜேஷ் கூறும்போது: “டிபன் இலை (எவர்சில்வர் தட்டில் ரவுண்டாக வைக்கப்படும் இலை) பிளாஸ்டிக் தடைக்கு முன்பு 100 இலைரூ.25-க்கு வாங்கினோம். இப்போதுஓர் இலை ரூ.1.30-க்கு கிடைக்கிறது. 100 இலைக்கு ரூ.130 கொடுக்கிறோம். தலைவாழை இலை ரூ.5-க்கு கிடைக்கிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT