Last Updated : 16 Apr, 2019 12:00 AM

 

Published : 16 Apr 2019 12:00 AM
Last Updated : 16 Apr 2019 12:00 AM

தென்காசி தொகுதியில் மும்முனை போட்டி- புதிய தமிழகம், திமுக, அமமுக தீவிர பிரச்சாரம்

தென்காசி (தனி) மக்களவைத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, திமுக வேட்பாளர் தனுஷ்குமார், அமமுக வேட்பாளர் சு.பொன்னுத்தாய் ஆகிய மூவர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தென்காசி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். இதனால் இத்தொகுதி நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது. திமுக சார்பில் தனுஷ்குமாரும், அமமுக வேட்பாளராக சு.பொன்னுத்தாயும் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

டாக்டர் கிருஷ்ணசாமி 1998-ம் ஆண்டுமுதல் இத்தொகுதியில் போட்டியிட்டு ஒவ்வொரு முறையும் 1 லட்சத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெற்று தனக்கென இருக்கும் வாக்கு வங்கியை தொடர்ந்து நிரூபித்து வந்திருக்கிறார். இத்தொகுதியில் ஏற்கெனவே 5 முறை இவர் போட்டியிட்டுள்ளார்.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு, 2.61 லட்சம் வாக்குகள் பெற்றார். தற்போது அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இவருக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் பிரச்சாரம் செய்துள்ளனர். வி.எம்.ராஜலட்சுமி உள்ளிட்ட அமைச்சர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதிமுகவின் இரட்டை இலை சின் னத்தில் போட்டியிடுவது கிருஷ்ண சாமிக்கு பலமாக கருதப்படுகிறது.

தென்காசி தொகுதியில் திமுக 28 ஆண்டுகளுக்குப் பிறகு போட்டி யிடுகிறது. திமுக வேட்பாளராக ராஜ பாளையம் முன்னாள் எம்எல்ஏ தனுஷ் கோடியின் மகன் தனுஷ் எம்.குமார் களம் இறக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக திமுக தலைவர்ஸ்டாலின், கனிமொழி, மதிமுக பொதுச் செயலா ளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத் தரசன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட் டோர் பிரச்சாரம் செய்துள்ளனர்.

அமமுக வேட்பாளராக ராஜபாளை யத்தை சேர்ந்த பொன்னுத்தாய் போட்டியிடுகிறார். அதிமுக முக்கிய பிரமுகர் அழகாபுரியானின் மகளான இவர், அமமுகவில் விருதுநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளராக உள்ளார். ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவராக பொறுப்பு வகித்தவர். இவருக்கு ஆதரவாக அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்துள்ளார். அவர் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்த 3 வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இவர்கள் தவிர மக்கள் நீதி மய்யம் சார்பில் முனீஸ்வரன், நாம் தமிழர் கட்சி சார்பில் எஸ்.எஸ்.மதிவாணன் மற்றும் சுயேச்சைகள் உட்பட மொத்தம் 25 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பிரச்சாரம் இன்று நிறைவடையும் நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு வேட்டையில் இறங்கியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x