Published : 26 Apr 2019 10:54 AM
Last Updated : 26 Apr 2019 10:54 AM
இந்திரா காந்தி தனக்கு விருந்து கொடுத்தது பற்றி பொய் தகவல்களே பரவியுள்ளன. தற்போதும் இத்தகவல்களே வெளியாவதால் 44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது பற்றி கிரண்பேடி உண்மையை விளக்கியுள்ளார்.
பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடியை காலை உணவுக்கு அழைத்து இருவரும் இணைந்து சாப்பிடும் படத்தை அனைவரும் பார்த்திருப்பீர்கள். தேர்தல் நேரமான தற்போது இப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்படுகிறது. இந்திரா காந்தியின் கார் 'நோ பார்க்கிங்'கில் இருந்த போது அதை அகற்றியதால் அவருக்கு விருந்து தருவதாக அப்புகைப்படத் தகவல்களும் நீண்ட காலமாய் உலவுகிறது. ஆனால் இது உண்மையல்ல.
இப்புகைப்படம் தொடர்பாக உண்மை நிலையை கிரண்பேடி தற்போது குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வாட்ஸ் அப்பில் தெரிவித்த தகவல்:
''இந்திரா காந்தியுடன் காலை உணவு சாப்பிடும் புகைப்படம் தற்போது இணையத்தில் பரவுகிறது. உண்மையில் இப்புகைப்படம் எடுத்த ஆண்டு 1975. முதல் ஐபிஎஸ் பெண் அதிகாரியான நான் குடியரசு தின அணிவகுப்பைத் தலைமையேற்று நடத்தினேன். சிறந்த செயல்பாட்டை பிரதமர் இந்திரா காந்தி பார்த்தார். அதைத்தொடர்ந்து பிரதமர் இல்லத்தில் காலை உணவை அவருடன் சாப்பிட அழைக்கப்பட்டேன். அப்போது தான் இப்புகைப்படம் எடுக்கப்பட்டது.
அதேநேரத்தில் 'நோ பார்க்கிங்'கில் இருந்த கார் அகற்றப்பட்ட சம்பவம் நடந்த ஆண்டு 1982. அதைத்தொடர்ந்து நான் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும் வெளியாகும் தகவல் தவறு. எனது குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் எனது வேண்டுகோளின்படிதான் பணியிட மாற்றம் தரப்பட்டது. இதுவே உண்மை. ஆனால் தவறான தகவல்கள் இப்புகைப்படங்களை சுற்றி இணையத்திலும், செய்திகளிலும் பரவி வருகின்றன''
இவ்வாறு கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் இந்திரா காந்தியுடன் கிரண்பேடி சந்திப்பு தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவல் மூலம் தற்போது உண்மை நிலவரம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT