Published : 13 Apr 2019 12:00 AM
Last Updated : 13 Apr 2019 12:00 AM
மலைக் கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு வரும் கல்வி ஆண்டுமுதல் இலவச போக்குவரத்து வசதி அளிக்கவும், அங்கு பயிலும் மாணவர்களுக்கு ரோபோ மூலம் கல்விப் பயிற்சி அளிக்கவும் பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் பின்தங்கிய கிராமப்புறங்களில் செயல்படும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து வசதியும், ரோபோ மூலம் கல்வி கற்றல் பயிற்சி அளிக்கவும் பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி 14 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தரமான இலவச கல்வியை வழங்கவேண்டியது அரசின் பொறுப்பாகும். பழங்குடியின மக்கள் வசிக்கும் இடங்கள், பின்தங்கிய பகுதிகள் மற்றும் மலைக்கிராமங்களில் வசிக்கும் குழந்தைகள் பள்ளிகளுக்கு சென்றுவர முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாமல் சிரமப்படுவது தெரியவந்தது. இதையடுத்து தர்மபுரி, வேலூர் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் கண்டறியப்பட்ட 26 ஆயிரம் மாணவர்கள் வரும் கல்விஆண்டு முதல் பள்ளிகளுக்கு சென்றுவர இலவச போக்குவரத்து வசதி அரசு சார்பில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
மாணவர்களை அந்தந்தப் பகுதியிலுள்ள அரசுப் பள்ளிகளுக்கு அழைத்து வர இலவச வேன் வசதி செய்து தர வேண்டுமென மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், கிராமப்புற அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் ரோபோ உதவியுடன் செயற்கை நுண்ணறிவு முறையில் கல்வி கற்கும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் முன்னோட்டம் கடந்த ஆண்டு சென்னை உட்பட சில நகர்ப்புற பள்ளிகளில் செயல்படுத்தப்பட்ட நிலையில், வரும் கல்வி ஆண்டில் முழுவீச்சில் ரோபோ கல்வி அமல்படுத்தப்படும்.
அதன்படி மாணவர்களின் பெயர், உருவப்படம் உட்பட விவரங்கள் முன்கூட்டியே ரோபோக்களில் பதிவு செய்யப்படும். இதையடுத்து வகுப்பறையில் மாணவர்களின் முகங்களை வைத்து யாரெல்லாம் வகுப்புக்கு வந்துள்ளனர் என்பதை ரோபோ பதிவு செய்து கொள்கிறது. அதன்பின்னர் பாடங்களில் ஏற்படும் சந்தேகங்கள் குறித்து மாணவர்கள் ஏதேனும் கேள்வி கேட்டால் அவர்கள் பெயரைக் கூறி பதில் அளிக்கும்.
மேலும், கேள்விக்குரிய பதிலை மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் உரிய படங்களுடன் ரோபோ விளக்கம் தருகிறது. உதாரணமாக, அறிவியல் பாடத்தில் விண்வெளி குறித்து மாணவர்கள் கேள்வி எழுப்பினால், அதுசார்ந்த குறும்படங்களை காண்பித்து ரோபோ விளக்கும் வகையில் தமிழில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஜப்பான் மற்றும்ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் மட்டுமே இந்த ரோபோ கல்விமுறை நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த தனியார் நிறுவனம் மூலம் ரோபோக்கள் தயார் செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. குறிப்பாக மலைப்பகுதிகளில் செயல்படும் பெரும்பாலான ஓராசிரியர் பள்ளிகளில் ரோபோ கல்வி முறை மிகவும் உதவியாக இருக்கும். சாதராண மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பம் குறித்த புரிதலும் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT