Published : 01 Apr 2019 02:28 PM
Last Updated : 01 Apr 2019 02:28 PM
தொடர் வருமான வரித்துறை சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கி வருவதை அடுத்து வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா? என்கிற கேள்விக்கு தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என தேர்தல் அதிகாரி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் 2019-க்கான பிரச்சாரம் பரபரப்பாக நடந்து வருகிறது. பலமான கூட்டணி அமைத்துள்ள அதிமுக, திமுகவினர் ஒருவர்மீது ஒருவர் கடுமையாக தாக்கிப் பேசி வருகின்றனர். மு.க.ஸ்டாலின் பேச்சில் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
திமுகவில் அதிக அளவில் வாரிசுகள் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். இருவருக்குமிடையே போட்டி கடுமையாக உள்ளது.
இதனிடையே கடந்த மூன்று நாட்களுக்கு முன் துரைமுருகனின் காட்பாடி இல்லத்தில் புகுந்த தேர்தல் பார்வையாளர்கள், வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் ரூ.10 லட்சம் சிக்கியதாக வருமான வரித்துறை தெரிவித்தது.
இந்நிலையில் தாங்கள் அப்பழுக்கற்றவர்கள், மிசாவைக் கண்ட இயக்கம் திமுக என துரைமுருகன் தெரிவித்தார். ஃபாசிஸ்ட் பாய்ச்சல், அடக்குமுறையைக் கண்டு திமுக அஞ்சாது என ஸ்டாலின் கடுமையாக எச்சரித்தார்.
மோடி அரசு தனக்குக் கீழ் உள்ள வருமான வரித்துறையினரை எதிர்க்கட்சியினரை நோக்கி ஏவுகிறார். இவை தன்னாட்சி அமைப்புகளாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின்கீழ் இயங்கவேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இந்நிலையில் இன்று காலைமுதல் வேலூரில் பலகோடி ரூபாய் நோட்டுகளை கட்டுக்கட்டாக சாக்குப்பை, அட்டைப்பெட்டிகளில் இருந்ததை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்து கைப்பற்றியுள்ளனர். துரைமுருகன் மகனுக்கு சொந்தமான கல்லூரி, திமுக நிர்வாகிகள் இல்லங்களிலும் சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.
தேர்தல் நேரத்தில் இவ்வாறு பணம் கைப்பற்றப்பட்டால் அந்தத் தொகுதிக்கான தேர்தலை ஒத்திவைத்த வரலாறு அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் சட்டப்பேரவை தேர்தலில் முன்னுதாரணமாக உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலும் இவ்வாறே ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று தமிழகத் தேர்தல் அதிகாரியை சந்தித்த செய்தியாளர்கள் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்படுமா? என கேள்வி எழுப்பினர்.
இதற்கு நேரடியாகப் பதிலளிக்காத தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, ''வருமான வரித்துறை அறிக்கை அளிக்கும். அதை வைத்து இந்தியத் தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.
தேர்தல் செலவீனப் பார்வையாளர்கள் ஆய்வு அடிப்படையிலும் அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்'' எனத் தெரிவித்தார்.
நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ஒத்திவைக்கவே வாய்ப்பு அதிகம் உள்ளது என அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரே டம்ளரில் 5 சுவை: ‘லேயர் டீ’யில் அசத்தும் மாணிக்கம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT