Published : 24 Apr 2019 09:38 AM
Last Updated : 24 Apr 2019 09:38 AM

கோடையை சமாளிக்க தயாரா?

உஷ்... அப்பாடா... தாங்க முடியல.... இப்பவே கண்ணைக் கட்டுதே....தலை சுத்துதே... மயக்கம் வர்ற மாதிரி இருக்குதே...” என்றெல்லாம் நிறைய புலம்பல்களைக் கேட்க முடிகிறது. மே மாதம் தொடங்கும் முன்பே கோடை வெயிலின் தாக்கம், மக்களைப் பாடாய்ப்படுத்துகிறது. வெயில் குறைவு என்று வெளி மாவட்ட மக்கள் எல்லாம் பொறாமைப்படும் கோவை யிலேயே,  இந்த ஆண்டு பகல் நேரத்தில் தகிக்கிறது வெயில்.

வரும் மே மாதத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும். அதுமட்டுமல்ல, காத்திருக்கிறது அக்னி நட்சத்திரம். மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவின்போது, வெயில் கொடுமையால் இறந்தவர்கள் பலர். கோடையின் கொடுமை உச்சத்தில் இருக்கும்போது,  வெயிலின் தாக்கத்தால் உயிரிழப்புகள்கூட நேரிடும். எனவே, இப்போதே முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், பாதிப்புகளை பெருமளவு தடுக்க முடியும்.

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது, சிலருக்கு உடல் வெப்பம் 106 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டிவிடும். அப்போது,  உடல் தளர்ச்சி அடையும். களைப்பு உண்டாகும். நிறைய வியர்க்கும். தண்ணீர்த் தாகம் அதிகமாக இருக்கும். தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும். அளவுக்கு மீறிய வெப்பத்தின் காரணமாக,  உடலின் உப்புகள் வெளியேறிவிடுவதால் இந்த தளர்ச்சி ஏற்படுகிறது.

வெப்ப மயக்கம்!

நீண்ட நேரம் வெயிலில் நிற்பவர்கள், வேலை செய்பவர்கள், சாலையில் நடந்து செல்பவர்கள் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுவார்கள். இதை, வெப்ப மயக்கம் என்று அழைப்பார்கள். வெயிலின் உக்கிரத்தால் தோலில் உள்ள ரத்தக் குழாய்கள் அதீதமாக விரிவடைந்து, இடுப்புக்குக் கீழ் ரத்தம் தேங்குவதற்கு வழிசெய்துவிடுகிறது. இதனால், இதயத்துக்கு ரத்தம் வருவது குறைந்துவிடும். அப்போது, ரத்த அழுத்தம் கீழிறங்கி, மூளைக்குப் போதுமான ரத்தம் கிடைக்காது. உடனே, தலைச்சுற்றல், மயக்கம் உண்டாகும்.  சிலருக்கு மரணமும் ஏற்படுகிறது. வெப்ப மயக்கம் ஏற்பட்டவரைக் குளிர்ச்சியான இடத்துக்கு மாற்றி, ஆடைகளைத் தளர்த்தி, காற்று உடல் முழுவதும்படும்படி செய்ய வேண்டும்.  தண்ணீரில் நனைத்த துணியால் உடலைத் துடைத்து, மயக்கம் தெளிந்ததும்,  குளுக்கோஸ் தண்ணீர், பழச்சாறு அல்லது நீர்மோர் கொடுக்கலாம். இது மட்டும் போதாது. அவருக்கு மருத்துவ உதவியும் கிடைக்கச் செய்ய வேண்டும்.

இதுதவிர, கோடை வெயிலில் வெளிப்படுகின்ற புறஊதாக் கதிர்களாலும் உடல் பாதிக்கப்படும். காலை, மாலைப் பொழுதில் வெளிப்படும் கதிர்களால் பாதிப்பு இருக்காது.  காலை 10 மணிக்கு மேல்,  மாலை 4 மணி வரை  வெளியேறும் கதிர்கள், வெப்ப மயக்கம் முதல் சருமப் புற்றுநோய் வரை பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

ஆப்பிரிக்க கண்டமும் சரும பராமரிப்பும்!

இதுகுறித்து கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த சரும நோய் நிபுணர்  டாக்டர் எஸ்.ஹரிஹரசுதன் கூறும்போது, “ஆதி மனித வரலாறு, ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்தே தொடங்குகிறது. பூமத்திய ரேகை ஆப்பிரிக்காவுக்கு நடுவில் சென்று, அந்த கண்டத்தை இரண்டாகப் பிரிக்கிறது. பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ள நாடுகளை வெப்ப மண்டல நாடுகள் என்கிறோம். நம் இந்தியாவும் இந்த மண்டலத்தில்தான் இருக்கிறது.

சரி, இதற்கும் சரும பராமரிப்புக்கும் என்ன சம்பந்தம்? உண்மையில் தொடர்பு இருக்கிறது. நம் உடலில் `வைட்டமின் டி’ தயாரிக்க நமக்கு சூரிய ஒளி தேவைப்படுகிறது. `வைட்டமின் டி’  உடலில் அபரிமிதமாக இருந்தால், எலும்புருக்கி நோய், கணைய நோய், இதயம் மற்றும் ரத்த நாளங்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் மன அழுத்தம் போன்ற நோய்களைத் தடுக்கலாம்.

பூமத்திய ரேகையிலிருந்து வெகு தொலைவில் வாழும் மக்களது சருமத்தை ஆராய்ந்துப் பார்த்தால், அதிக சூரிய ஒளியை அனுமதிக்க வேண்டி,  அவர்கள் சருமம் வெளுப்பாக இருக்கிறது. இது, வெப்ப மண்டலத்தை விட்டு மனிதன் தூரமாகச் செல்லசெல்ல பரிணாம அழுத்தம் கொண்டு வந்த மாற்றம் என்கிறது அறிவியல். இதனாலேயே அவர்கள் நீச்சல் குளம், கடற்கரை போன்ற இடங்களுக்கு சென்று, சூரியக் குளியல் எடுக்கின்றனர்.

எனவே, வெயிலைப் பார்த்து நாம் அச்சப்படத் தேவையில்லை. வெயில் காலங்களில் சருமத்தைப் பராமரிக்க கீழ்க்கண்ட சில எளிய வழிகளைப் பின்பற்றினால் போதும். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது,  வெயிலில் அலைய வேண்டிய கட்டாயம் இருப்பவர்கள், வெயிலில் இருந்து காக்கும் `சன் ஸ்கிரீன் க்ரீம்’களைப் பயன்படுத்தலாம். எனினும், அடர்த்தியான, எஸ்.பி.எஃப். (சன் ப்ரொடக்சன் ஃபேக்டர்) அதிகம் கொண்ட சன் ஸ்கீரின் க்ரீமைத்  தவிர்க்க வேண்டும். முகத்தில் உள்ள துளைகளில் அடர்த்தியான சன் ஸ்கீரின் அடைப்பது,  பருவுக்கு வழிவகுக்கும். கோடை காலங்களில் முகத்தை சுத்தமாகவும், தூசு இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். நிறைய பேருக்கு கோடையில் முகத்தில் பருக்கள் தோன்றும். தினமும் 3 அல்லது 4 முறை முகத்தை தூய்மையான நீரால் கழுவினால் இதைத் தவிர்க்கலாம்.

வெயிலில் அதிக நேரம் அலையும்போது, தொண்டை வறட்சி ஏற்படும். நீர்ப்பற்றாக்குறையில் உடல் சோர்வு ஏற்படும். எனவே, குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 8 முதல் 10 டம்ளரை கட்டாயம் பருக வேண்டும். அதேபோல, சர்க்கரை கலக்காமல் பழச்சாறு பருகலாம். மேலும், கோடையில் தினமும் இரண்டு முறையாவது குளிப்பது நல்லது. வியர்வை அதிகரித்து, உடல் நாற்றத்தால் தவிப்பவர்களும், இதன் மூலம் பயனடையலாம்.

பருத்தி ஆடை அணியலாமே!

வெயிலின் தாக்கத்தைத் தவிர்க்க மென்மையான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. இறுக்கமான மற்றும் சிந்தடிக் ஆடைகளைத் தவிர்ப்பதன் மூலம், வியர்க்குரு, படர் தாமரையைத் தடுக்கலாம்.

அதேபோல, கோடையில் வயிறு முட்ட சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதிகமாக சாப்பிடுவது உடலில் எண்ணெய் வடியச் செய்யும். கோடைகாலத்தில் கிடைக்கும் தர்பூசணி, நுங்கு, இளநீர், வெள்ளரி ஆகியவற்றையும், நிறைய காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்” என்றார்.

இதுதவிர, உச்சி வெயிலில் வெளியே செல்வதை தவிர்ப்பது, குழந்தைகளை வெளியில் அனுப்புவதை தவிர்ப்பது நல்லது. எண்ணெயில் பொரித்த, வறுத்த, கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை தவிர்த்து, நீராகாரமாக அதிகம் எடுத்துக் கொள்வதும், காரம் இல்லாத, எண்ணெய், உப்பு குறைந்த உணவு சாப்பிடுவதும், குளிர்படுத்தப்பட்ட உணவு, பாட்டலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், ஆகியவற்றைத் தவிர்ப்பதும் நல்லது. அம்மை, கட்டிகள், வியர்க்குரு, நீர்க்கடுப்பைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சோப்பைக் குறைத்து, வேப்பிலை, மஞ்சள் தேய்த்துக் குளிப்பதும் உடலுக்கு நன்மை தரும். அதேபோல, குளிரூட்டப்பட்ட நீரைப் பருகுவதைக் காட்டிலும், மண் பானைத் தண்ணீர் பருகுவது உடலுக்கு கேடுவிளைவிக்காமல் இருக்கும். தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால், தலைக்குத் தொப்பி போட்டுக்கொள்ள வேண்டும். அல்லது குடை கொண்டு செல்ல வேண்டும். கண்களுக்குச் சூரியக் கண்ணாடி அணிந்து கொள்ளலாம்.

இதையெல்லாம் கடைப்பிடித்து, வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தயாராக இரு்க வேண்டும்.  ஒவ்வொரு வருடமும் அதிகரித்துவரும் வெயில் நமக்கு சவால்தான். எனினும், ஆபத்துகளை முழுமையாகப் புரிந்துகொண்டு, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் கோடை  பாதிப்புகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x