Published : 10 Apr 2019 12:00 AM
Last Updated : 10 Apr 2019 12:00 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் ஆடுகள் மேய்வதற்கான புற்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆடுகளின் வளர்ச்சி குறைந்துள்ளதால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும்பாலானோர், விவசாயம் மற்றும் கால்நடைகள் வளர்ப்பை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். இம்மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால், ஏரி, குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு காட்சியளிக்கின்றன. மேலும், கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணகிரி அணைப் பகுதியில் இருந்து சிலர் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ஆடுகளை, தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, பேரிகை பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம்.
கோடை காலத்தில், அப்பகுதியில் ஆடுகளுக்கு தேவையான புற்கள் கிடைக்கும் என்பதால் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள், ஆயிரக்கணக்கான ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வார்கள். இந்நிலையில் நிகழாண்டில் ஏற்பட்ட வறட்சியால் ஆடுகளுக்கு தேவையான தீவனம் கிடைக்காமல் மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பி உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் ஆடு வளர்ப்போர். இதுகுறித்து ஆடுகள் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள சிலர் கூறியதாவது: கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மேற்கு பகுதிக்கு மேய்ச்சலுக்கு ஆடுகளை ஓட்டிச் சென்றோம். அப்பகுதி மழையின்றி வறண்டு போயுள்ளதால், ஆடுகளுக்கு தேவையான தீவனம் கிடைக்கவில்லை. இதனால்,பேரிகை வரை சென்ற நாங்கள் ஆடுகளை மந்தை, மந்தையாக லாரிகளில் ஏற்றி மீண்டும் சொந்த ஊருக்கே திரும்ப வந்துவிட்டோம்.
லாரி வாடகைக்காக கூடுதலாக ரூ.25 ஆயிரம் வரை செலவானது. இங்கேயும் ஆடுகளுக்குத் தேவையான புற்கள் இல்லாததால், அணையின் பின்புறத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளோம். அணையின் பின்புறம் வறண்டு, மண்ணில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. சிறிதளவே வளர்ந்துள்ள புற்கள், வெயிலால் சுருங்கி உள்ளதால், ஆடுகளுக்குத் தேவையான புற்கள் குறைவாகவே கிடைக்கிறது. பகலில் ஆடுகளை மேய்க்கும் நாங்கள், அருகில் உள்ள வயல்களில் பட்டி அமைத்து ஆடுகளை அடைத்து வைக்கிறோம். வயலில் பட்டி போடுவதால் எங்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளை விவசாயிகள் செய்து கொடுப்பார்கள். ஆடுகளைக் கிடை போடுவதால் வயலுக்குத் தேவையான உரம் கிடைத்துவிடுகிறது. ஆடுகள் நன்கு வளர்ச்சி பெற்றவுடன், வியாபாரிகளே நேரடியாக வாகனங்களில் வந்து எடை போட்டு ஆடுகளை வாங்கிச் செல்வார்கள். ஆனால் இந்த ஆண்டு புல், பூண்டுகள் கிடைக்காததால் ஆடுகளின் வளர்ச்சி குறைந்துள்ளது. இதனால் எங்களுக்கு பெரிய அளவிலான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஆடு வளர்ப்போர் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT