Published : 14 Apr 2019 04:55 PM
Last Updated : 14 Apr 2019 04:55 PM
தமிழகத்தில் வித்தியாசமான அரசியல் மோதல் நிலவும் மக்களவைத் தொகுதி கன்னியாகுமரி. கேரளாவில் இருந்து பிரிந்து வந்த மாவட்டம் என்பதால் கேரள தொடர்புகள் அதிகம். தமிழகத்தின் மற்ற அரசியல் சூழ்நிலையில் இருந்து மாறுபட்டு கேரளாவைப் போன்ற சூழல் கொண்ட தொகுதி. மாநிலக் கட்சிகளை விட தேசியக் கட்சிகள் அதிகம் கோலோச்சும் பகுதி.
காங்கிரஸ், பாஜக நேரடியாக மோதும் தொகுதியாக பல தேர்தல்களாக இருந்து வருகிறது. இது மட்டுமின்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் செல்வாக்கு உள்ள தொகுதி இது. கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் பாஜக வேட்பாளராக இங்கு களமிறங்கியுள்ளார். கடந்த முறை அவரிடம் தோல்வியுற்ற வசந்தகுமார் காங்கிரஸ் சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். இதனால் இங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த மக்களவைத் தொகுதியில், நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், விளவங்கோடு, பத்மநாபபுரம், கிள்ளியூர் என மொத்தம் 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.
2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பொன்.ராதாகிருஷ்ணன், இந்த 6 சட்டப்பேரவை தொகுதிகளில் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 73481 வாக்குகளை பெற்றுள்ளார். அடுத்ததாக நாகர்கோவிலில் 71876 வாக்குகள் பெற்றுள்ளார். குளச்சலில் - 62931, பத்மநாபபுரம்- 56239, விளவங்கோடு - 58806, கிள்ளியூர்- 49239 என மொத்தம் 3 லட்சத்து 72 ஆயிரத்து 906 வாக்குகள் பெற்றுள்ளார். கடந்த தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது. திமுக மற்றும் அதிமுகவும் தனியாக வேட்பாளர்களை களமிறக்கின.
பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளை காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட வசந்தகுமார் பெற்றார். அவர், கன்னியாகுமரியில் -25770, நாகர்கோவிலில் - 25402 வாக்குகள் மட்டுமே பெற்றார். குளச்சலில் - 39995, பத்மநாபபுரம் - 48880, விளவங்கோடு - 51957, கிள்ளியூர் - 52095 என மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 244 வாக்குகளை பெற்றார்.
ஆனால் 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் நிலைமை மாறியுள்ளது. ஆறு சட்டப்பேரவை தொகுதிகளையும் காங்கிரஸ்- திமுக கூட்டணியே வெற்றி பெற்றது. 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பொன்.ராதாகிருஷ்ணன் அதிக வாக்குகளைப் பெற்ற கன்னியாகுமரியில் 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. அங்கு பாஜக வெறும், 24454 வாக்குகள் மட்டுமே பெற்றது.
அதுபோலவே நாகர்கோவில் தொகுதியில் பாஜக 46023 வாக்குகள் பெற்றது. குளச்சலில் - 40903, பத்மநாபபுரம் - 31808, விளவங்கோடு - 35431, கிள்ளியூர் - 30929 வாக்குகளை மட்டுமே பாஜக பெற்றது,
2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், மற்ற நான்கு தொகுதிகளில் பெருமளவு வாக்கு சரிவு ஏற்படாத நிலையில் கன்னியாகுமரியிலும், நாகர்கோவிலிலும் பாஜகவுக்குப் பெரும் சரிவு ஏற்பட்டது. காங்கிரஸ் - திமுக கூட்டணி இணைந்து போட்டியிட்டதால் அங்கு பாஜக வாக்குகளை அந்தக் கூட்டணி தங்கள் பக்கம் வளைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த இரு சட்டப்பேரவை தொகுதிகளில் பொதுவாக பாஜகவுக்கு வலிமையான வாக்கு வங்கி இருப்பதாக கூறப்படுகிறது. 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பின்னடைவைச் சந்தித்தது.
இதனால் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலிலும் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதியின் வாக்குகளை யார் வெற்றி பெறப் போவது என்பதை தீர்மானிக்கும் நிலையில் உள்ளது. எனவே இந்த இரு பகுதிகளில் பொன்.ராதாகிருஷ்ணன் மட்டுமின்றி வசந்தகுமாரும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT