Published : 04 Apr 2019 08:41 AM
Last Updated : 04 Apr 2019 08:41 AM
வாக்கு கேட்டு வேட்பாளர்கள் வருகிறார்கள் என்றாலே பெரும்பாலான இடங்களில் பெண் கள் உற்சாகமாகிவிடுவார்கள். காரணம், ஆரத்தி எடுக்கலாம்.. வேட்பாளரின் நெற்றியில்திலமிட்டு வரவேற்கலாம்.. அதற்கு பிறகுதான் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் சம்பவம் நடக்கும். வேட்பாளர் தன் வசதிக்கேற்ப ரூபாய் நோட்டை ஆரத்தி தட்டில் போடுவார். இதற்காகவே, ‘நான்.. நீ..’ என்று பெண்கள் ஆரத்தி எடுக்க போட்டி போடுவார்கள்.
இதுவும் ஒரு வகையில், வாக்காளருக்கு தரும் லஞ்சம்தான் என்று கருதிய தேர்தல் ஆணையம், ‘ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு வேட்பாளர் பணம் அளிக்கக் கூடாது. அது தேர்தல் நடத்தை விதிமீறல்’ என அறிவித்தது.
இதனால், ‘வட போச்சே..’ என்று பெண்களும், ‘பணம் கொடுக்கும் வாய்ப்பு போய்விட்டதே..’ என்று வேட்பாளர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.
ஒரு கதவு அடைத்தால், இன்னொரு கதவு திறக்காமலா இருக்கும்..
தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியில் சிக்காமல் இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடித்துவிட்டன கட்சிகள். இப்போதெல்லாம், ஆரத்திக்கு ‘அட்வான்ஸ் புக்கிங்’தான்.
ஒரு கட்சி சார்பில் வேட்பாளர் வரப்போகிறார் என்றால், ஏரியாக்களில் யார் யார் ஆரத்தி எடுக்கப் போகிறார்கள் என்று முதலில் பட்டியல் தயாராகிறது. சம்பந்தப்பட்ட கிளைச் செயலாளர் மூலமாக முன்கூட்டியே ஒரு தொகை அவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு விடுகிறது. வேட்பாளர் வருவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு ஒரு எவர்சில்வர் தட்டும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து முடித்தவுடன், அந்த எவர்சில்வர் தட்டும் ஆரத்தி எடுத்த பெண்களுக்கே.
தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால், பரவலாக பல கட்சிகளும் தற்போது ‘அட்வான்ஸ் புக்கிங் ஆரத்தி’ ஃபார்முலாவையே பின்பற்றி வருகின்றன. இந்த சூழலில், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கவுதம சிகாமணி, சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தகரை கிராமத்தில் நேற்று வாக்கு திரட்டினார். இதையொட்டி, அந்த கிராமத்தை சேர்ந்த சில பெண்களுக்கு எவர்சில்வர் தட்டுகள் வழங்கப்பட்டன. அவர்களும் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தனர்.
இதைப் பார்த்து, ஏராளமான பெண்கள், ‘‘எங்களுக்கும் தட்டு கொடுங்க.. நாங்களும் ஆரத்தி எடுக்கிறோம்’’ என்று வரிசைகட்ட ஆரம்பித்துவிட்டனர். ‘அட்வான்ஸ் புக்கிங்’ விவரத்தை அவர்களுக்கு விளக்கி புரியவைப்பதற்குள் கட்சி நிர்வாகிகளுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.சின்னசேலம் அடுத்த தகரை கிராமத்தில் கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் கவுதம சிகாமணிக்கு ஆரத்தி எடுக்கும் பெண்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT