Published : 28 Apr 2019 12:00 AM
Last Updated : 28 Apr 2019 12:00 AM

டெல்டா கடைமடைப் பகுதிகளை தண்ணீர் சென்றடைய கோடைகாலத்திலேயே ஆறுகள் தூர் வாரப்படுமா?- திருவாரூர் மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு

குறுவை சாகுபடிக்காக காவிரி யில் திறக்கப்படும் தண்ணீர், டெல்டா கடைமடைப் பகுதிகளை சென்றடையும் வகையில் கோடை காலத்திலேயே ஆறுகளும், கால்வாய்களும் தூர் வாரப்பட வேண்டும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர், நாகை மாவட்டங் கள், காவிரி டெல்டாவின் கடைமடை பகுதிகளாகும். ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் திறக்கப்படும் காவிரி தண்ணீர், இந்த கடைமடை பகுதிகளை வந்தடைந்து, பாசனத் துக்கு பயன்படுவது என்பது பெரும் சவாலாகவே உள்ளது. குறிப்பாக, இந்தப் பகுதிகளில் உள்ள ஆறுகளில் தலைப்பு முதல் கடைமடை வரை தூர் வாரப்படாததும், அவ்வாறு செய்யப்படும் பணிகள் உரிய காலத்தில் தொடங்கப்படாததுமே கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்றடையாததற்கு முக்கிய காரணமாக உள்ளது.

தற்போது, மேட்டூர் அணையில் 53 அடி தண்ணீர் உள்ள நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இதனால், குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையைத் திறக்க வாய்ப்பு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் வெண்ணாறு, கோரையாறு, பாமணி ஆறு, வெட்டாறு, ஓடம்போக்கி ஆறு, பாண்டவை ஆறு, வளவன்ஆறு, அரிச்சந்திரா நதி, திருமலைராஜன் ஆறு, சோழசூடாமணி ஆறு உட்பட 10-க்கும் மேற்பட்ட பெரிய ஆறுகளும், அவற்றிலிருந்து பிரியும் நூற்றுக்கணக்கான ஏ பிரிவு, பி பிரிவு வாய்க்கால்களும் உள்ளன. இதுவரை, அவை தூர் வாரப்படாமலும், பராமரிப்புப் பணி செய்யப்படாமலும் உள்ளதால், மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் விளைநிலங்களுக்குச் சென்றடைவதில் சிக்கல் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து இளவங்கார்குடி இளங்கோவன், காமராஜ், அரசவ னங்காடு ராமமூர்த்தி மற்றும் விவசாயிகள் கூறியதாவது:தற்போது, இந்தக் கோடை காலத்திலேயே தூர் வாருதல் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டால்தான், குறித்த காலத்தில் பணிகளை முழுமையாக முடிக்க முடியும். காவிரி இறுதித் தீர்ப்பு வரப்பெற்று, அதன்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு கர்நாடகத்திலிருந்து வரவேண்டிய தண்ணீர் வந்து சேரும் என்ற நம்பிக்கை உள்ளதால், தமிழக அரசு கடைமடைப் பகுதிகளில் தூர் வாருவதற்கு உரிய நிதியை விரைவாக ஒதுக்கீடு செய்து, பணிகளை கோடைகாலம் முடிவதற்குள்ளாகவே செய்து முடிக்க வேண்டும்.

மேலும், தண்ணீர் திறப்பு தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், பராமரிப்பு மற்றும் தூர் வாரும் பணிகளைத் தொடங்கி, தண்ணீர் வந்த நிலையில், பணிகளைச் செய்யாமலேயே செய்து முடித்து விட்டதாக கணக்கு எழுதும் போக்கு இனிவரும் காலங்களிலும் தொடர்ந்தால், எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x