Last Updated : 28 Apr, 2019 12:00 AM

 

Published : 28 Apr 2019 12:00 AM
Last Updated : 28 Apr 2019 12:00 AM

தமிழகத்தில் 1.70 லட்சம் ஹெக்டேரில் 15 லட்சம் டன் மாம்பழம் விளைச்சல்: ஏற்றுமதிக்கு பெருமளவு பயன்படுத்துவதால் விலை உயர்வு

தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 13 லட்சம் டன் மாம்பழம் விளையும்போதிலும், ஜூஸ் தயாரிப்பு, ஏற்றுமதிக்கு பெருமளவு பயன்படுத்தப்படுவதால் உள்ளூரில் அதன் விலை உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் மாம்பழ சாகுபடி பரப்பளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2016-17-ம் ஆண்டு 1 லட்சத்து 36 ஆயிரம் ஹெக்டேரிலும் (ஒரு ஹெக்டேர் என்பது இரண்டரை ஏக்கர்), 2017-18-ல் 1 லட்சத்து 52 ஆயிரம் ஹெக்டேரிலும் மாம்பழம் சாகுபடியானது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 32 ஆயிரத்து 107 ஹெக்டேரிலும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 166 ஹெக்டேரிலும் மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது.

தோத்தாபுரி (பெங்களூரா, கிளிமூக்கு), பங்கனப்பள்ளி, மல்கோவா, அல்போன்ஸா, ருமானி,சப்பட்டா, காலப்பாடு, நீலம் உட்பட 50 வகையான மாம்பழங்கள் தமிழகத்தில் விளைவிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள 61 தோட்டக்கலைப் பண்ணைகளில் மட்டும் 42 வகையான மாம்பழக்கன்றுகள் வளர்த்து விற்கப்படுகின்றன.

சதைப்பற்றும், சுவையும் அதிகமாக இருப்பதுடன், ஜூஸ் வகைகள் தயாரிப்ப தற்கும் ஏற்றதாக இருப்பதால் தோத்தாபுரி மாம்பழங்களுக்கு வட மாநிலங்களில் அதிக வரவேற்பு உள்ளது. மொத்த மாம்பழ வகைகளில் தோத்தாபுரி மட்டும் 70 சதவீதம் நிலப்பரப்பில் விளைவிக்கப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக மக்கள் விரும்பிச் சாப்பிடும் பங்கனப்பள்ளி விளைவிக்கப்படுகிறது. சேலம் மாவட்டம், கருமந்துறையில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பாரம்பரிய மாம்பழ வகைகளை பாதுகாக்கும் மையம் (Mangoes Genetic Bank) உள்ளது. இங்கு மாம்பழ வகைகளின் தாய்ச் செடி வளர்க்கப்பட்டு, அதன் சிறப்பம்சம் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்படுகிறது. இங்கு ஒருவருடம் முதல் ஒன்றரை வருடம்வரை ஆன ஒரு மாம்பழக்கன்று ரூ.60-க்கு விற்கப்படுகிறது. ஆண்டுக்கு 7 லட்சம் மாமரக்கன்றுகள் விற்கப்படுகின்றன.

ஜுஸ் தயாரிப்பு

மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மாம்பழம் விற்பனைக்கு வருகிறது. கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை பகுதிகளில் நீலம் ரக மாம்பழம் ஆண்டு முழுவதும் விளைகிறது. நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் விளையும் ருமானி மாம்பழம் அக்டோபர் மாதம் விற்பனைக்கு வருகிறது. இந்த மாம்பழம் பெரும்பாலும் கேரளாவுக்குச் செல்கிறது. தமிழ்நாட்டில் விளையும் மாம்பழங்கள் அதிக அளவில் ஜூஸ் தயாரிப்பதற்கும், ஏற்றுமதிக்கும் சென்றுவிடுகிறது.

அதனால் உள்ளூர் தேவைக்கு ஏற்ப போதிய வரத்து இல்லாத நிலையில் விலை உயர்வு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு கிலோ பங்கனப்பள்ளி முதல்தர மாம்பழம் ரூ.110 முதல் ரூ.130 வரை விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மரம் வளர்க்க நடவடிக்கைதற்போது ஒரு ஹெக்டேரில் 100 மாமரங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த நிலப்பரப்பில் நவீன முறையில் 400 மரங்களும், அதன்பிறகு 800 மரங்களும் வளர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது ஒரு ஹெக்டேரில் உள்ள 100 மாமரங்களில் இருந்து ஓராண்டில் 50 டன் (5 ஆயிரம் கிலோ) மாம்பழங்கள் கிடைக்கின்றன. அதன்படி, 2017-18-ம் ஆண்டில் 13 லட்சம் டன் மாம்பழங்கள் விளைந்தன. 2018-19-ம் ஆண்டில் 1 லட்சத்து 70 ஆயிரம் எக்டேரில் மாம்பழம் சாகுபடியாகும் என்றும், இவற்றில் இருந்து 15 லட்சம் டன் மாம்பழங்கள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மாம்பழத்துக்குள் வண்டு

வறட்சியால் மாம்பழ விளைச்சல் பாதிக்காது. புயல் காற்றில் பூக்கள் உதிர்ந்தாலோ, மாம்பழத்துக்குள் வண்டு வந்தாலோ மட்டுமே மாம்பழ விளைச்சல் பாதிக்கும். ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, சவுதி அரேபியா, கத்தார், அமெரிக்கா, குவைத், ஓமன், நேபாளம், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு மாம்பழம் ஏற்றுமதியாகிறது. 2015-16-ம் ஆண்டு 36,779 மெட்ரிக் டன், 2016-17-ம் ஆண்டு 52,760 மெட்ரிக் டன், 2017-18-ம் ஆண்டு 49,180 மெட்ரிக் டன் மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இயற்கை விவசாயத்தில் மாம்பழம் உற்பத்தி செய்ய கிருஷ்ணகிரியில் 200 விவசாயிகள் கொண்ட குழுவுடன் ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படவுள்ளது. புதிதாக மாமரங்கள் நட்டு விவசாயம் செய்ய முன்வருவோருக்கு மாமரக்கன்றுகள் 50 சதவீத மானியத்திலும், சொட்டுநீர் பாசனம் 100 சதவீத மானியத்திலும் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x