Published : 15 Apr 2019 12:00 AM
Last Updated : 15 Apr 2019 12:00 AM
இந்தியாவுக்கு அதிக அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் பின்னலாடை ஏற்றுமதி நகரம் அடங்கிய திருப்பூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
திருப்பூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முன்னாள் எம்.பி. கே.சுப்பராயன், அமமுக சார்பில் எஸ்.ஆர்.செல்வம், நாம் தமிழர் கட்சி சார்பில் பி.ஜெகநாதன், மக்கள் நீதி மய்யம் சார்பில் வி.எஸ்.சந்திரகுமார் உட்பட 12 பேர் போட்டியிடுகின்றனர்.
அதிமுக சார்பில் போட்டியிடும் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு ஆதரவாக முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக பொருளாளர் பிரேம லதா விஜயகாந்த், தமாகா மாநில தலைவர் ஜி.கே.வாசன், அமைச்சர் கள் க.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, கே.ராதா கிருஷ்ணன் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
தொழில் நகரமான திருப்பூரில் ஜி.எஸ்.டி. பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், நாட்டுக்கு நிரந்தர பிரதமர் தேவை என்ற அடிப்படை யிலும், சாய ஆலை பிரச்சினைக்கு தீர்வு கண்டது, போக்குவரத்து பிரச்சினைக்கு மேம்பாலம் கட்டியது, புதிய ஆட்சியர் அலுவல கம் கட்டியது மற்றும் தமிழக அரசின் பல்வேறு சாதனைகளை கூறியும் எம்.எஸ்.எம். ஆனந்தன் பிரச்சாரம் செய்து வருகிறார். திருப்பூர் நகரம் மட்டுமின்றி பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பெருந் துறை உள்ளிட்ட இடங்களில் உள்ளூர் பிரச்சினைகள் தீர்க்கப் படும் எனவும் உறுதி அளித்து வருகிறார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயனை ஆதரித்து, அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தா.பாண்டியன், டி.ராஜா, மாநிலச் செயலாளர் முத்தரசன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தி.க.தலைவர் கி.வீரமணி ஆகியோர் பிரச்சாரம் செய்துள்ளனர்.
ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம், டியூட்டி டிராபேக் உள்ளிட்டவை பின்னலாடைத் தொழிலை எந்த அளவுக்கு நாசம் செய்தது, தொழில்துறை இல்லாத பகுதிகளில் பாஜக ஆட்சியால் விவசாயிகள் எப்படி பாதிக்கப்பட்டுள்ளனர்? பாஜக ஆட்சிக்கு முன்பு சிலிண்டர் விலை எவ்வளவு? என்பன உட்பட பல்வேறு கேள்விகளை எழுப்பி, கே.சுப்பராயன் பிரச்சாரம் செய்து வருகிறார்.
வாக்குகள் பிரியுமா?
அமமுக சார்பில் போட்டியிடும் எஸ்.ஆர். செல்வம், ஈரோடு புறநகர் மாவட்டச் செயலாளர். திருப்பூர் நகருக்கு அறிமுகம் இல்லாத நபர். ஆனால், முன்னாள் எம்.பி. சிவசாமியின் தயவில் நம்பிக்கையுடன் தேர்தலை எதிர்கொள்கிறார். இவருக்கு ஆதரவாக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
திருப்பூர் தொகுதிக்குட்பட்ட பவானி, அந்தியூர், கோபி செட்டிபாளையம், பெருந்துறை ஆகிய பகுதிகளில், அதிமுக ஆட்சி மற்றும் கட்சியின் அதிருப்தியாளர்கள் தங்களுக்கு சாதகமாக இருப்பார்கள் என எஸ்.ஆர். செல்வம் வலம் வருகிறார்.
திருப்பூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே முதலிடத்தை பிடிக்க நேரடி போட்டி இருந்தாலும், அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகள் பிரிக்கும் வாக்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே, இருவரது வெற்றியின் வாக்குகள் வித்தியாசம் இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT