Published : 06 Sep 2014 09:57 AM
Last Updated : 06 Sep 2014 09:57 AM
தமிழகத்தில் இந்த ஆண்டு முதியோர் உதவித்தொகைக்காக விண்ணப்பித்த பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்துவருவதால், தகுதியுள்ள பயனாளிகள் பட்டியலை இறுதிசெய்ய இன்னும் 3 மாதங்கள் ஆகும் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தேசிய முதியோர் உதவித்தொகை திட்டத்தை மத்திய அரசு உதவியுடன் மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் மூலம் 65 வயதுக்கு மேல் உள்ள முதியவர்கள் பயனடைந்து வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் இத்திட்டம் மூலம் 35 லட்சத்து 38 ஆயிரம் பேர் பயன்பெற்று வருகின்றனர்.
முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கு அரசு பல விதிமுறைகளை வைத்துள்ளது. மிக நெருங்கிய உறவுகள், பிள்ளைகள் இருந்தும் அவர்களது ஆதரவு கிடைக்காமல் துன்பப்படும் முதியோர்களுக்கு தமிழக அரசு மாதம் ரூ.1000 வழங்குகிறது.
இந்த ஆண்டில் முதியோர் உதவித்தொகைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு 9 மாதங்கள் ஆன பின்பும் உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.சென்னையை சேர்ந்தவர் கிருஷ்ணன் (68). சிறுநீரகக் கோளாறால் அவதிப்படும் இவர், முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து 8 மாதங்கள் ஆகியும் உதவித்தொகை கிடைக்கவில்லை. ‘‘எங்கள் பகுதியில் கடந்த ஜனவரியில் அம்மா திட்ட முகாம் நடந்தது. அதில் முதியோர் உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் அனைத்தையும் சமர்ப்பித்தேன். உடம்பில் சிறுநீர்ப்பையை கட்டிக்கொண்டு தாலுகா அலுவலகத்துக்கு நடையாய் நடக்கிறேன். ஆனால், அதிகாரிகள் எந்த பதிலும் கூறுவதில்லை’’ என்றார்.
பெற்ற பிள்ளைகள் கைவிட்டதால் தற்போது வீட்டு வேலை செய்யும் ராதா (66) என்பவரும் முதியோர் உதவித்தொகைக்காக விண்ணப்பித்துள்ளார். அவர் கூறும்போது, ‘‘2 வீடுகளில் வேலை செய்கிறேன். உடல்நலம் முன்புபோல் இல்லை. முதியோர் உதவித்தொகை விரைவாக கிடைத்தால் ஒரு வீட்டில் வேலை செய்வதை நிறுத்திவிடுவேன்’’ என்கிறார்.
இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘தகுதி இல்லாத சிலர் முதியோர் உதவித்தொகை பெற்று வருகின்றனர். இதனால் உரியவர்களுக்கு அரசு வழங்கும் தொகை கிடைப்பதில்லை.
எனவே, இந்த ஆண்டு விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ்கள் முறையாக சரிபார்க்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் மற்றும் தாலுகா அலுவலகங்களில் இந்த பணி நடந்துவருகிறது. உதவித்தொகை பெறத் தகுதியான முதியவர்கள் பட்டியலை இறுதிசெய்ய இன்னும் 3 மாதங்கள் ஆகும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT