Published : 30 Apr 2019 04:02 PM
Last Updated : 30 Apr 2019 04:02 PM
ஆளுநரின் அதிகாரம் ரத்து தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஜனநாயகம் வென்றுள்ளதாக முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார். நீதிமன்ற தீர்ப்பை ஆராய்ந்து வருவதாக கிரண்பேடி பதில் தந்துள்ளார்.
புதுச்சேரி மாநில அரசின் அன்றாட நடவடிக்கைகளை பரிசீலிக்கும் வகையில் துணைநிலை ஆளுநருக்கு கடந்த 2017-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்திருந்த சிறப்பு அதிகாரங்களை ரத்து செய்ய வேண்டும் என முதல்வரின் நாடாளுமன்ற செயலரான லட்சுமி நாராயணன் எம்எல்ஏ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதி மகாதேவன் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு அளித்தார்.
அதில், முதல்வரின் அதிகாரத்திலும், அரசின் அன்றாட அலுவல்களிலும் தலையிடவும், கோப்புகளை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவிடவும் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. மேலும், புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் நடவடிக்கைகளில் தலையிடும் வகையில் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்ற மத்திய அரசின் அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது என்றும் உத்தரவிட்டுள்ளார்.
இத்தீர்ப்பு குறித்து முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:
"உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஜனநாயகமும், நீதியும் வென்றுள்ளது. துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனக்கு அதிகாரம் இருப்பதாக கூறி செயல்பட்டதால் கடந்த மூன்று ஆண்டாக புதுச்சேரியில் மக்கள் நலத் திட்டங்கள் முடங்கி கிடக்கின்றது. மாநில வளர்ச்சி தடைப்பட்டுள்ளது.
துணைநிலை ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது. அவர் அமைச்சரவையின் முடிவை ஏற்றே செயல்பட வேண்டும். புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் அமைச்சரவையின் முடிவுதான் இறுதியானது என்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிரண்பேடி உயர் நீதிமன்ற தீர்ப்பை மீறினால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன். ஆளுநர் தன்னை திருத்தி கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
இத்தீர்ப்பு பற்றி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறுகையில், "நீதிமன்ற தீர்ப்பு பற்றி ஆராய்ந்து வருகிறோம். அதன் பின்னரே தெளிவான கருத்தை தெரிவிக்க முடியும். தேர்தல் நடத்தை விதிகள் அமலில்தான் தற்போதும் உள்ளோம். வழக்கம்போல் ஆளுநர் மாளிகைக்கு வரும் கோப்புகளை ஆய்வு செய்து அனுமதி தரப்படுகிறது. புதுச்சேரி நன்றாக இருக்க வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT