Published : 12 Apr 2019 04:28 PM
Last Updated : 12 Apr 2019 04:28 PM
திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே அதிமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக வேட்பாளர்கள் என்பதற்குப் பதிலாக, அதிமுக வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் எனக் கூறியதால் பொதுக்கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் சட்டப்பேரவை தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஆறுமுகம் மற்றும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆகிய வேட்பாளர்களை ஆதரித்து, திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று மாலை பொதுக்கூட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இதில், பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:
''அனைத்து தரப்பு மக்களின் ஆதரவைப் பெற்ற கூட்டணியாக நமது கூட்டணி விளங்குகிறது. கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றது. தற்போது, கூட்டணி அமைத்து அதிக பலத்துடன் தேர்தலைச் சந்திக்கிறது. இதன்மூலம், அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அதிக அளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
திமுக தலைவர் ஸ்டாலினின் செயல்பாடு அனைவருக்கும் தெரியும். ஸ்டாலின் ஆளுமைத் திறனற்றவர். திமுக தற்போது கார்ப்பரேட் நிறுவனமாக உள்ளது. வேறு கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்கள், அக்கட்சியின் ஆலோசகர்களாக உள்ளனர்.
அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்.
திருப்போரூர் தொகுதியில் மீனவ சமுதாய மக்களின் சார்பில் 30 ஆயிரம் வாக்குகள் உள்ளன. மீனவர்கள் அதிமுகவைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க மாட்டார்கள். அதனால், தேர்தல் சிறப்பாக பணியாற்றி அதிமுக வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் எனக்கூறினார். இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சில நிமிடங்களில் சுதாரித்த ராமதாஸ், திமுக வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்'' என ராமதாஸ் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ''திருப்போரூர் தொகுதியில் திமுக டெபாசிட் இழக்கும் வகையில், கூட்டணிக் கட்சியினர் பணியாற்றி அதிக அளவிலான வாக்குகளைப் பெற்றுத்தர வேண்டும். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு, ஈசிஆர் சாலையை ஒட்டி ரயில் பாதை மற்றும் ஈசிஆர் சாலை மேம்பாடு என அத்தனை திட்டங்களும் நிறைவேற்றப்படும். இவையெல்லாம், தேர்தல் வாக்குறுதிகள் அல்ல செயல்திட்டமாக நிறைவேற்றப்படும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT