Published : 01 Apr 2019 09:20 AM
Last Updated : 01 Apr 2019 09:20 AM
திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெயிலின் தாக்கத்தால் அனல் காற்று வீசுகிறது. இதனால் பகல் நேரங்களில் பிரச்சாரம் செய்ய முடியாமல் வேட்பாளர்களும், கட்சியினரும் தவித்து வருகின்றனர்.
மக்களவைத் தேர்தல் ஏப்.18-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்களின் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் கடந்த மார்ச் 29-ம் தேதி வெளியிடப்பட்டது. வாக்குப்பதிவுக்கு மிகக் குறைந்த நாட்களே இருப்பதால் தங்களின் வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், நட்சத்திர பேச்சாளர்கள் உள்ளிட்டோர் ஊர் ஊராகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. குறிப்பாக திருச்சி, வேலூர், மதுரை, சேலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சராசரியாக 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு குறையாமல் வெயிலின் தாக்கம் காணப்படுகிறது. இதனால் ஏற்படக்கூடிய அனல்காற்றின் காரணமாக, பகல் நேரத்தில் பொதுமக்கள் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்வதற்கும், வெளியில் நடமாடுவதற்கும் சிரமப்படுகின்றனர்.
வெயிலின் தாக்கம், பொதுமக்களிடம் மட்டுமின்றி அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்துக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. நகரம் மற்றும் கிராமப்புறங்களில் பகல் நேரத்தில் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்யும்போது, வெயிலின் காரணமாக அதிகளவில் கூட்டம் சேர்வதில்லை. மேலும் நீண்ட நேரம் திறந்தவெளியில் நின்று கொண்டோ, நடந்து சென்றோ வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளால் வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட முடியவில்லை. எனவே சில வேட்பாளர்கள் காலை 7 முதல் 11 மணி வரையிலும், மாலை 5 முதல் 10 மணி வரையிலும் மட்டுமே பிரச்சாரத்துக்குச் சென்று வருகின்றனர்.
இதுகுறித்து அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘மார்ச் மாதத்தின் இறுதியிலேயே வெயிலின் தாக்கம் இந்தளவுக்கு கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே, கடும் அனல் காற்று வீசி வருகிறது. அடுத்த 7 நாட்களுக்கும் இதேநிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இறுதிக்கட்ட பிரச்சாரம் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உள்ளது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT