Published : 14 Apr 2019 12:00 AM
Last Updated : 14 Apr 2019 12:00 AM
சிவகங்கை மாவட்டம், மானா மதுரை சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, அமமுகவினர் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. தொடர்ந்து மூன்று முறை வென்ற அதிமுக நான்காவது முறையாக வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மண்பாண்ட தொழிலுக்கு பிரபலமான மானாமதுரை தொகுதி (தனி) 1952-ல் உருவாக்கப்பட்டது. இத்தொகுதி தொடக்க காலத்தில் பொது தொகுதியாக இருந்தது. 1977-ல் தொகுதி மறுவரையறையில் தனி தொகுதியாக மாற்றப்பட்டது. இத்தொகுதி, மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் ஆகிய பேரூராட்சிகள், மானா மதுரை, இளையான்குடி, திருப்பு வனம் ஆகிய ஊராட்சி ஒன்றியங் களை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்கள் 2,60,898 பேர். இதில், ஆண்கள் 1,29,385 பேர், பெண்கள் 1,31,510 பேர், மூன்றாம் பாலினத்தவர் 3 பேர். இத்தொகுதியில் 15 தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் அதிமுக 5 முறையும், காங்கிரஸ் 3 முறையும், சுதந்திரா கட்சி, திமுக தலா 2 முறையும், தமாகா, இந்திய கம்யூனிஸ்ட், சுயேச்சை ஒரு முறை யும் வென்றுள்ளன.
கடைசியாக நடைபெற்ற 2006, 2011, 2016 ஆகிய மூன்று தேர்தல்களிலும் அதிமுகவே வென்றுள்ளது. இத னால் இந்த தொகுதி அதிமுகவின் கோட்டையாக கருதப்படுகிறது. தற்போது நடைபெறும் இடைத் தேர்தலில் எஸ்.நாகராஜன் (அதிமுக), கரு.இலக்கிய தாசன் (திமுக), எஸ்.மாரியப்பன் கென்னடி (அமமுக), சண்முகப்பிரியா (நாம் தமிழர்) மற்றும் சுயேச்சைகள் உட்பட 13 பேர் போட்டியிடுகின்றனர்.
இத்தொகுதியில் விவசாயமே பிரதானமான தொழிலாக உள்ளது. மண் பாண்டப் பொருட்கள் தயா ரிப்பு, செங்கல் சூளை தொழில் களும் உள்ளன. போதிய வேலை வாய்ப்பு இல்லாததால் பலர் வெளி யூர், வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
மானாமதுரை சிப்காட்டில் புதிய தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும். காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளுக்கு விரிவு படுத்த வேண்டும். திருப்புவனம், இளையான்குடியில் புதியபேருந்து நிலையம் அமைக்க வேண்டும். மானாமதுரையில் கலைக் கல்லூரி தொடங்க வேண்டும் போன்றவை நீண்ட கால கோரிக்கைகளாக உள் ளன. இத்தொகுதியில் முக்குலத் தோர் அதிக அளவில் உள்ள னர். அதற்கு அடுத்தபடியாக பட்டிய லினத்தவர், யாதவர், வெள்ளாளர், முஸ்லிம்கள் கணிசமாக உள்ளனர்.
அதிமுகவுக்கு திருப்புவனம், மானாமதுரை பகுதியில் அதிக வாக்கு வங்கி இருப்பது, வாக்கு வங்கி குறைவாக இருக்கும் இளையான்குடியைச் சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்தியதன் மூலம் அப்பகுதியில் அதிக வாக்குகள் பெறுவதற்காக அமைத்த வியூகம், அமைச்சர் பாஸ்கரன், செந்தில்நாதன் எம்.பி. தொடர்ந்து முகாமிட்டு தேர்தல் பணி செய்வது ஆகியவை சாதகமான அம்சம். வைகை ஆற்றில் மணல் குவாரி அமைத்தது, தொடர்ந்து அதிமுக கையில் தொகுதி இருந்தும் தொழில் வளர்ச்சி ஏற்படுத்தாதது, அதிமுக வாக்குகளை அமமுக பிரிப்பது பாதகம். திமுகவுக்கு, ஆளும்கட்சியினர் மீதான எதிர்ப்பு வாக்குகள், கூட்டணி கட்சிகளின் வலிமை, முஸ்லிம் வாக்குகள் சாதகமான அம்சம். கோஷ்டி பூசல், கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைக்காதது பாதகம். அமமுகவுக்கு, தொகுதியில் நன்கு அறிமுகமான வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளது, அவர் எம்எல்ஏ பதவி இழப்பு செய்யப்பட்டதால் ஏற்பட்ட அனுதாபம் சாதமாக உள்ளது. கூட்டணி கட்சிகளின் பலம் இல்லாதது பாதகம்.
இத்தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. வெற்றியை பெற அதிமுக, திமுக, அமமுக தீவிரம் காட்டி வருகின்றன. தொடர்ந்து மூன்று முறை வென்ற அதிமுக நான்காவது முறையாக வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT