Published : 12 Apr 2019 08:58 PM
Last Updated : 12 Apr 2019 08:58 PM
மேகேதாது அணை கட்டப்படும், காவிரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் என்ற ராகுலுக்கா உங்கள் ஓட்டு? திமுக தலைவர் ஸ்டாலின் அடிக்கடி லண்டன் சென்று வருகிறார். அதன் மர்மத்தை நாட்டு மக்களிடம் விளக்குவாரா? என்று முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மேட்டூர் சட்டப்பேரவை தொகுதியில் நடந்த பிரச்சாரத்தில் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
ராகுலுக்கா உங்கள் ஓட்டு?
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கர்நாடகா மாநிலத்தில் பேசும் போது, மேகேதாது அணை கட்டப்படும் என்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் என்கிறார். அவரைத்தான் திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் வேட்பாளராக முன்மொழித்துள்ளார். அவர்களை நம்பி ஓட்டு போட்டால் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தமிழகத்துக்கு கிடைக்காது. அவர்களுக்கா உங்கள் ஓட்டு, அவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும் என்பதை பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அங்கே ஒரு பேச்சு, இங்கே ஒரு பேச்சு என்பது தான் இவர்களது பாணி.
மேகதாது அணை கட்டப்படும், காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்ட ராகுல் காந்தி, தமிழக மக்களை உதாசீனம் செய்துள்ளார். அவரை தான் திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்காலத்தில் பிரதமராக வேண்டும் என முன்மொழிந்துள்ளார்.
காங்கிரஸ் அமைத்துள்ள கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே கொள்கை, ஒற்றுமை கிடையாது. திமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமே ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்கிறார். மற்ற கூட்டணிக் கட்சியினர் ராகுல் காந்தியைப் பிரதமராக ஏற்றுக் கொள்ளவில்லை. ஒவ்வொரு மாநிலக் கட்சித் தலைவர்களும் பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கும் போது, எதிர்க்கட்சிகளால் எவ்வாறு நிலையான ஆட்சியை அளிக்க முடியும். வலிமையான, பாதுகாப்பான ஆட்சியை பிரதமர் மோடியால் மட்டுமே அளிக்க முடியும். இந்தியாவுக்கு தகுதி வாய்ந்த பிரதமராக மோடி உள்ளார். எனவே, பாஜக கூட்டணியே நாடு முழுவதும் அமோக வெற்றி பெறும்.
ஸ்டாலின் லண்டன் செல்லும் மர்மம் என்ன?
தமிழகத்தில் எண்ணற்ற போராட்டங்களை திமுக தலைவர் ஸ்டாலின் தூண்டிவிட்டுப் பார்த்தார். அத்தனை போராட்டங்களையும் சமாளித்து, அவர்களின் கோரிக்கையை ஏற்று, சக்தி வாய்ந்த ஆட்சியை தமிழகத்தில் அளித்துக் கொண்டு இருக்கிறோம். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேறு; அவரை எப்படி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், முதல்வர் பதவிக்கு மதிப்பளிக்காமல் திமுக தலைவர் ஸ்டாலின் கொச்சையாகப் பேசி வருகிறார். கிராமத்தில் இருந்து வந்தவர் தானே என்று என்னை ஏளனம் செய்து பார்க்கிறார். கிராமத்தில் இருந்து வந்தாலும், சக்தியுடன் வந்துள்ளேன் என்பதை அவர் அறிந்து கொள்ள வேண்டும். படிப்படியாக உழைத்து முன்னேறி, விசுவாசமாக, நியாயமாக முதல்வர் பதவிக்கு வந்துள்ளேன்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகனாக ஸ்டாலின் பதவிக்கு வந்தவர். அவர் இப்போது, கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு செய்து உதயநிதி ஸ்டாலினை தேர்தல் களத்தில் இறக்கி விட்டுள்ளார். மத்திய சென்னையில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை, உதயநிதி ஸ்டாலின் வேட்பாளராக அறிமுகம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக பெண் வேட்பாளரை, அழகான வேட்பாளர் என உதயநிதி ஸ்டாலின் கூறுவது, அவருக்கு போதுமான அனுபவமின்மையைக் காட்டுகிறது. அவருக்கான வயது அப்படி. இதுதான் திமுகவின் பரிதாபமான நிலை.
திமுக தலைவர் ஸ்டாலின் அடிக்கடி லண்டன் சென்று வருகிறார். அதன் மர்மத்தை நாட்டு மக்களிடம் விளக்குவாரா? உடல் நலத்துக்காக என்கின்றனர். இதுவரை நான் 210 சட்டப்பேரவை தொகுதிக்கு சென்று தேர்தல் பிரச்சாரம் இடைவிடாமல் செய்து வருகிறேன். காலை முதல் இரவு வரை பிரச்சாரம் செய்து வருகிறோம். திமுக தலைவர் ஸ்டாலின் எதற்காக லண்டன் சென்று வருகிறார் என்று எனக்கு தெரியும், டாக்டர் அன்புமணி ராமதாஸுக்குத் தெரியும். எங்களுக்கு மரியாதை தெரியும் என்பதால், இதைப் பற்றியெல்லாம் கூற விரும்பவில்லை''.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT