Published : 20 Sep 2014 05:38 PM
Last Updated : 20 Sep 2014 05:38 PM
விவசாயக் கடன் ரூ.72 ஆயிரம் கோடியை ரத்து செய்ததுபோல் நிலுவையில் உள்ள 52 ஆயிரம் கோடிக்கான கல்விக் கடன்களையும் மத்திய அரசு உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என காங்கிரஸ் தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய ‘தி இந்து’வில், “காங்கிரஸ் அரசின் கல்விக் கடன் ரத்து கண் துடைப்பு நாடகமா?’ என்ற தலைப்பில் செய்தி வெளியாகி இருந்தது. அதைத் தொடர்ந்து நம்மை தொடர்புகொண்ட காஞ்சிபுரம் தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யும் பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை வட்டார முன்னாள் இயக்குநருமான விஸ்வநாதன் கூறியதாவது:
‘தி இந்து’ சரியான நேரத்தில் இந்த செய்தியை சொல்லி இருக்கிறது. மாணவர்களுக்கு கல்விக் கடன் கொடுப்பதில் வங்கி மேலாளர்கள் ஏனோ மெத்தனமாகவே உள்ளனர். 2009-ல் நான் எம்.பி.யானதும் நாடாளுமன்றத்தில் எனது கன்னிப் பேச்சிலேயே, கல்விக் கடன் வழங்குவதில் ஒவ்வொரு வங்கியும் இஷ்டம்போல் வட்டி வசூலிப்பதைப் பற்றித்தான் பேசினேன்.
அடுத்த ஒரு மாதத்தில், கல்விக் கடன்களுக்கான வட்டியை மாணவர்கள் படித்து முடித்து ஆறு மாத காலங்கள் வரைக்கும் அரசே செலுத்தும் என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு முதல் தவணையாக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடும் செய்யப்பட்டது.
ஆனால், அதன் பிறகும் கல்விக் கடன் விவகாரத்தில் வங்கிகள் முறையாக நடந்து கொள்ளவில்லை என புகார்கள் வந்தன. இதனால், கல்விக் கடன் வழங்குவதற்கான முன்னோடி வங்கியாக கனரா வங்கி தேர்வு செய்யப்பட்டு அவர்களிடம் முழுப் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டது. மாணவர்களின் கல்விக் கடனுக்கான வட்டியை மத்திய அரசு கனரா வங்கிக்கு அளிக்கும். அவர்கள் மற்ற வங்கிகளுக்கு அந்தத் தொகையை பிரித்துக் கொடுப்பார்கள். இதுதான் முறை.
கல்விக் கடன் மேளா
நான் எம்.பி.யாக இருந்த 5 ஆண்டுகளில் எனது தொகுதியில் கல்விக் கடன் மேளாக்களை நடத்தி 25 ஆயிரம் பேருக்கு கல்விக் கடன்களை வாங்கிக் கொடுத்தேன். ‘தி இந்து’ செய்தியை பார்த்துவிட்டு, கல்விக் கடன் பெற்ற மாணவர்கள் சிலரை அழைத்து விசாரித்தேன். அந்த மாணவர்கள், கடன் பெற்ற நாளிலிருந்தே வட்டி கணக்கிடப்பட்டு ஒவ்வொரு மாதமும் வட்டியும் அசலையும் சேர்த்துச் சேர்த்துக் கட்டி வந்திருக்கிறார்கள். ‘எதற்காக வட்டி கட்டினீர்கள்? என்று கேட்டதற்கு, ‘கட்டாவிட்டால் அடுத்த ஆண்டுக்கான கல்விக் கடன் தவணைத் தொகையை வங்கி மேலாளர் கொடுக்கமாட்டார்’ என்றார்கள்.
கல்விக் கடனை 15 ஆண்டுகளுக்குள் செலுத்தினால் போதுமானது என மத்திய அரசு சலுகை கொடுத்திருக்கிறது. ஆனால், அரசின் அருமையான நோக்கத்தை ஒருசில வங்கி அதிகாரிகள் நாசம் செய்துள்ளார்கள். வட்டி தள்ளுபடி விவகாரத்தில் மத்திய அரசு, வங்கிகளுக்கான உத்தரவுகளை கடுமையாக்காமல் விட்டதால் இப்படி நடந்திருக்கிறது. ‘தி இந்து’ இப்போது எங்களின் கண்களை திறந்திருக்கிறது.
கனரா வங்கி விளக்கம்
வட்டி தள்ளுபடி விவகாரத்தில் ஏன் இவ்வளவு குளறுபடி என்று கனரா வங்கி அதிகாரிகள் சிலரிடம் விசாரித்தேன். ‘தாங்கள் எவ்வளவு பேருக்குக் கல்விக் கடன் கொடுத்திருக்கிறோம். அவர்களுக்கான வட்டி மானியம் எவ்வளவு என்ற விவரங்களை மற்ற வங்கிகள் எங்களுக்கு அனுப்பினால்தான் நாங்கள் அவர்களுக்கான மானிய தொகையை தரமுடியும். ஆனால், இதுவரை அப்படி எந்த வங்கியும் முறையான அறிக்கையை எங்களுக்கு அனுப்பவில்லை’ என்கிறார்கள் கனரா வங்கி அதிகாரிகள்.
அதேசமயம், 25 லட்சம் பேருக்கு மத்திய அரசு கல்விக் கடன் வழங்கி இருக்கிறது. இதில் நான்கில் ஒரு பகுதி மாணவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், இத்தனை பேருக்கு கல்விக் கடன் கொடுத்திருந்தாலும் அவர்களுக்கான உரிய வேலைவாய்ப்புகள் இன்னும் உருவாக்கப்படவில்லை என்பதும் வருத்தப்பட வேண்டிய விஷயம்.
கல்விக் கடன் என்பது அறிவு உற்பத்திக்கான ஒரு முதலீடு. இதைக் கேட்டு வரும் இளைஞர்களை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்க வேண்டும்; அவர்களை சிரச் சேதம் செய்யக் கூடாது. படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும் என நான் நாடாளுமன்றத்தில் பேசி இருக்கிறேன். இப்போதுள்ள மத்திய அரசு அதைச் செய்யும் என்று நம்புகிறோம்; செய்ய வேண்டும் என விரும்புகிறோம். இல்லா விட்டால் இன்னும் இரண்டு மாதத்தில் மாணவ சமுதாயத்தைத் திரட்டி இதற்கென மாநிலம் தழுவிய அளவில் ஒரு இயக்கத்தை நானே தொடங்குவேன்’’ என்றார் விஸ்வநாதன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT