Published : 03 Apr 2019 07:44 PM
Last Updated : 03 Apr 2019 07:44 PM
இது தேர்தல் காலம் என்பதால் வாக்குச் சேகரிப்பதற்காக கட்சித் தொண்டர்களின் இல்ல விழாக்களுக்கு அரசியல் தலைவர்கள் ‘அழையா விருந்தாளியாக’ தலையைக் காட்டுகின்றனர்.
அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு மட்டுமே தொகுதிக்குள் வந்து சென்ற அமைச்சர்களும், அவ்வப்போது தொகுதிக்குள் வந்து செல்லும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களும் தற்போது தேர்தலுக்காக கிராமப்புற மக்களை சந்திக்க அடிக்கடி வந்து செல்கின்றனர். அதிலும் தற்போது கிராமப்புறங்களில் நடைபெறும் ‘நல்லது, கெட்டது’ நிகழ்ச்சிகளிலும் போட்டி போட்டு பங்கேற்கத் தொடங்கி உள்ளனர்.
மேலும் இதுவரை தொண்டர்களின் இல்ல விழாக்கள் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்காத வர்கள், தற்போது வாக்குகளைப் பெற வேண்டிய காரணத்தால் திடீர் கரிசனத்தோடு வலிய வந்து இல்ல விழாக்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தலைகாட்டுகின்றனர். நிகழ்ச்சியில் தொண்டர்களை வலுவாக கவனித்து விட்டுச் செல்வதால் அவர்கள் திக்கு முக்காடிப் போகின்றனர். இதுவரை கட்சியின் மாவட்ட, ஒன்றிய, வட்ட நிர்வாகிகள் மீது அதிருப்தியில் இருந்தவர்கள் தற்போது ‘அழையா விருந்தாளியாக’ வந்து செல்வதை எண்ணி மகிழ்ச்சி அடைகின்றனர்.
அந்த ‘உற்சாகத்தோடு’ தேர்தல் வேலைகளிலும் மும்முரமாக ஈடுபடுகின்றனர். இதுதொடர்பாக, அதிமுகவினர் சிலர் கூறியதாவது: அமைச்சர்கள், எல்எல்ஏக்கள் மற்றும் மாவட்டம், ஒன்றியம், வட்டக் கிளை நிர்வாகிகளின் பெயர்களை அவர்களின் ஒப்புதலோடு பத்திரிகையில் அச்சிட்டு விழாக்களை நடத்தினோம். ஆனால், அவர்களது வசதிக்கேற்றவாறு வருகை தந்தனர். சில சமயங்களில் ஒரு வாரம் கழித்துக்கூட வந்து மணமக்களை வாழ்த்திச் சென்றனர்.
திருமணம் மற்றும் காதணி விழா, பூப்புனித நீராட்டுவிழாக்களிலும் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் அழையா விருந்தாளியாக வந்து பங்கேற்கின்றனர். மேலும் விழா நடத்துபவர்களையும் நன்கு கவனித்து விட்டுச் செல்கின்றனர். இதனால் கட்சியில் அதிருப்தியில் இருந்தவர்கள்கூட சமரசம் ஆகி உற்சாகமாக தேர்தல் வேலை செய்து வருகின்றனர்.
அரசியல் கட்சியினர் இதுபோன்ற விழாக்களை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தி தாராளமாக அன்பளிப்பு வழங்கி வருகின்றனர். இந்த உத்திகளை அனைத்து அரசியல் கட்சியினரும் பின்பற்றத் தொடங்கி விட்டனர் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT