Last Updated : 12 Apr, 2019 07:09 PM

 

Published : 12 Apr 2019 07:09 PM
Last Updated : 12 Apr 2019 07:09 PM

ஸ்மிருதி இரானி கல்வித் தகுதி சர்ச்சை: ட்விட்டரில் குஷ்பு - காயத்ரி ரகுராம் கருத்து மோதல்

ஸ்மிருதி இரானி கல்வித் தகுதி சர்ச்சை தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் குஷ்பு மற்றும் காயத்ரி ரகுராம் இருவருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் அவரை எதிர்த்து பாஜக சார்பில் களம் இறங்குகிறார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி. சமீபத்தில் ஸ்மிருதி இரானி வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது, சமர்ப்பித்த ஆவணங்களில் பட்டப்படிப்பை முடிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். 4.71 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து இருப்பதாக கூறியுள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல் செய்தபோது, 1994ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். அவர் தவறான தகவல்களை தெரிவித்து இருந்ததாக காங்கிரஸ் புகார் கூறியது. ஆனால் தற்போது அவர் பட்டப்படிப்பு முடிக்கவில்லை என்று கூறியுள்ளார். இந்த விவகாரத்தை காங்கிரஸ் மீண்டும் எழுப்பியுள்ளது.

மேலும், இந்த விவாகரத்தில் சமூகவலைத்தளத்தில் ஸ்மிருதி இரானியை பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள். இதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜகவைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் “குஷ்புவும் கமலும் ( என்னுடைய அக்கா, மாமா போன்றவர்கள்) தங்கள் பட்டப்படிப்பை முடித்து விட்டனரா? கடமை, கண்ணியம், கட்டுப்பாடு முக்கியம். ராகுல் காந்தி அமேதி தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை, இவரை விட ஸ்மிருதி இரானி நிறைய செய்துள்ளார்.

தொடர் கேலி கிண்டல்கள் அடிப்படை ஆதாரமற்றது. காங்கிரஸ் முட்டாள்கள் ஊடகங்களில் பொய் கூறும் ஒரு பொய்யரை பின் தொடர்கிறீர்கள். வேட்புமனு விண்ணப்பத்தை பூர்த்தி செய்பவர்கள் அலுவலக உறுப்பினர்களாக இருப்பார்கள், இது காங்கிரஸிலும் நடப்பதுதான், ஸ்மிருதி பொய் சொல்ல வேண்டுமென்றால் இப்போதும் கூட பொய் சொல்லியிருக்க முடியும். உங்களுக்கு இது தெரியாதா? குறிப்பாக அனைத்து அதிகாரங்களையும் வைத்திருக்கும் போது. கோழி முட்டைங்க.” என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்தும் பல்வேறு ட்வீட்களை பதிவிட்டுள்ளார்.

காயத்ரி ரகுராமின் இந்த ட்வீட்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அவரது ட்வீட்டைக் குறிப்பிட்டு குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்பிற்குரிய காயு, உங்கள் மாமா (கமல்), அல்லது நான் பட்டப்படிப்பு முடித்து விட்டோம் என்று ஒரு போதும் கூறிக்கொண்டதில்லை. எங்களின் எளிமையான தொடக்கங்கள் குறித்தோ எங்கள் போராட்டம் குறித்தோ வெட்கப்பட்டதில்லை.  எங்களுக்கு போலிவாதங்கள் மீது நம்பிக்கையில்லை, தவறான காகிதத்துண்டின் குஞ்சங்கள் இல்லாமல் நாங்கள் மக்களுக்கு சேவையாற்றுவதை நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x