Last Updated : 13 Sep, 2014 09:51 AM

 

Published : 13 Sep 2014 09:51 AM
Last Updated : 13 Sep 2014 09:51 AM

தனித்துவிடப்பட்ட திண்ணை தாத்தாவுக்கு உதவ நீதிமன்றம் உத்தரவு

மதுரையில் மகன்கள், உறவுகளால் கைவிடப்பட்டு, வீட்டு திண்ணையில் வாழ்நாளை கழித்துவரும் 74 வயது முதியவருக்கு, ஓய்வூதியம் வழங்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. தள்ளாத வயதில் நீதிபதி முன் கண்ணீர் மல்க தனது நிலையை அவர் விவரித்தது உருக்கமாக இருந்தது.

மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த என். வேணுநாதபிள்ளை (74) உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: எனது மனைவி வள்ளியம்மாள் 25 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். கூலி வேலைக்குச் செல்லும் எனது 3 மகன்களும் என்னைக் கவனிக்காமல் விட்டுவிட்டனர். எனக்கு சாப்பாடு தராததுடன், அவர்களுடன் தங்குவதற்கும் அனுமதிக்கவில்லை.

எனவே, தமிழக அரசின் முதியோர் ஓய்வூதியம் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் ஆகியோருக்கு மனு அனுப்பினேன். எனக்கு ஓய்வூதியம் வழங்க மறுத்ததால் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். எனது மனு மீது 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க கடந்த ஏப். 15-ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், எனக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்க மறுத்து ஜூன் 20-ல் வட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

அவரது உத்தரவில், வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளோர் பட்டியலில் எனது பெயர் இல்லை என்றும், நான் எனது மூத்த மகன் வீட்டில் வசிப்பதாகவும், அவர் என்னைக் கவனித்துக் கொள்வதாகவும், அவருக்கு மாதம் ரூ. 1,500 நான் வாடகை கொடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

கிராம நிர்வாக அலுவலரும், வருவாய் ஆய்வாளரும் முறையாக விசாரிக்காமல் என்னிடம் வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கிக் கொண்டு, வட்டாட்சியருக்கு பொய்யான அறிக்கை கொடுத்துள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்க மறுத்து வட்டாட்சியர் உத்தரவிட்டார்.

நான் திருப்பரங்குன்றம் சந்திரா பாளையம் 3-வது தெருவில் வீட்டின் திண்ணையில் வசிக்கி றேன். வட்டாட்சியர் உத்தரவை ரத்து செய்து, முதியோர் ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி டி.எஸ். சிவஞானம் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வேணுநாதபிள்ளை நேரில் ஆஜரானார். தளர்ந்த தேகம், சுருங்கிய முகம், கிழிந்த உடையுடன், கம்பு ஊன்றி தள்ளாடியபடி நீதிமன்றத்துக்கு வந்த அவர், நீதிபதியைப் பார்த்து ‘அய்யா, சாமி…’ என்று கையெடுத்து கும்பிட்டவாறு தனது பரிதாப நிலையை விவரித்தார். பெற்ற மகன்களாலேயே தான் தனித்துவிடப்பட்டு கவனிப்பாரின்றி இருப்பதை கூறும்போது கண் கலங்கினார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: முதியோர், பெற்றோர் நலச் சட்டத்தின்கீழ் பெற்றோர்களை கவனிக்க வேண் டியது வாரிசுகளின் கடமை. அந்தக் கடமையை நிறைவேற்றுவதில் தவறுவதால் ஏராளமான பெற்றோர் பராமரிப்புக்காக நீதிமன்றத்தை நாடுகின்றனர்.

மனுதாரரின் கோலத்தை பார்க்கும்போதே அவரை யாரும் கவனிக்கவில்லை என்பது தெரிகிறது. மனுதாரர் வீட்டின் திண்ணையில் வசிப்பதாகக் கூறியுள்ளார். 60 வயதான முதியவர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

மனுதாரர் அவரது மகன் வீட்டில் வசிக்கிறார் என்பதைத் தவிர, அவருக்கு வேறு வகையில் வருமானம் வருவதாகத் தெரியவில்லை.

முதியோர் ஓய்வூதியம் :

மனுதாரரின் பெயர் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ளோர் பட்டியலில் இல்லாதது மனுதாரரின் தவறு கிடையாது. அந்தப் பட்டியல் எந்த அடிப்படையில் தயார் செய்யப்படுகிறது என்பது தெரியவில்லை. மனுதாரரின் மகன்கள் கூலித் தொழிலாளிகளாக உள்ளனர். அவர்களுக்கு தனிக் குடும்பங்கள் உள்ளன. மனுதார ருக்கு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கு அனைத்துத் தகுதிகளும் உள்ளன. எனவே, வட்டாட்சியரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

உதவித் தொகை கோரி மனு செய்த 2013, ஏப். 24 முதல் அவருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஏற்கெனவே வழங்க வேண்டிய ஓய்வூதியத்தை 4 வாரத்திலும், அக்டோபர் முதல் தவறாமல் மனுதாரருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x