Published : 16 Apr 2019 06:31 PM
Last Updated : 16 Apr 2019 06:31 PM
அரசு என்பது வெறும் அமைச்சர்களால், உயர்மட்ட அதிகாரிகளால் மட்டுமே இயங்கிவிடாது. அரசு இயந்திரத்தை முழுவதுமாக இயக்குவது அவற்றின் அடிமட்ட நிலையில் உள்ள அரசு ஊழியர்களே.
இவ்வாறு ஒரு அரசாங்கத்தின் ஆணிவேராக இருந்து கஜா போன்ற இயற்கை பேரிடர் காலங்களிலும் இடைவிடாது உழைக்கும் அரசு ஊழியர்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகள் எப்படி இருந்தது என்று பார்த்தால் விளையாட்டு மைதானங்களில் சிறுவர்கள் விளையாடும் சீசாவின் ஏற்ற, இறக்க அனுப்பவங்களுடனே கடந்திருக்கிறார்கள் என்று கூறலாம்.
சிலர் அரசின் நடவடிக்கைகளாலும் விரக்தி நிலைப்பாட்டிலும் சிலர் அரசின் சலுகைகளால் தாங்கள் பலன் அடைந்திருப்பதாகவும் கலவையான விமர்சனங்களை வைக்கின்றனர்.
இந்த ஆண்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் (ஜாக்டோ- ஜியோ அமைப்பினர்) தங்கள் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி 22 முதல் 30-ம் தேதி வரை தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 1,900 ஆசிரியர்கள் பின்னர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டனர்.
மேலும், கடந்த ஜனவரி 29-ம் தேதி இரவு காலக்கெடுவுக்குப் பின் பணியில் சேர்ந்த ஆசிரியர்களில் 3,000 பேர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டனர். நீதிமன்றங்களில் தற்காலிகமாகப் பணிபுரிந்தவர்களையும் அரசு நீக்கியுள்ளது.
இந்த நிலையில் இவர்கள் நாடாளுமன்றத் தேர்தலை எந்த நிலைப்பாட்டில் எதிர்கொள்கிறார்கள் என்று 'இந்து தமிழ் திசை' இணையதளம் சார்பாக கேட்டேன்.
ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் மற்றும் செய்தித் தொடர்பாளர் தியாகராஜன்
அரசு ஊழியர்களை மதிக்கும் அரசுதான் எங்கள் தேர்வு
இந்திய ஜனநாயகத்தின்படியே ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் உரிமை வேண்டி நியாயமாகப் போராடினார்கள். ஆனால், எங்கள் உரிமைக்காகப் போராடியதற்காக நாங்கள் அவமதிக்கப்பட்டோம். ஒருமுறை கூட எங்களது கோரிக்கையை முதல்வர் நேரில் அழைத்துக் கேட்கவில்லை. வரலாற்றில் இது போன்று முன்னர் நடந்ததே இல்லை.
தேர்தலுக்கு ஒருமாதத்துக்கு முன்னர் கூட போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்தது. பலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். நாங்கள் காயப்பட்டிருக்கிறோம். கடந்த கால கசப்பான அனுபவங்கள் எங்கள் நினைவில் அப்படியே இருக்கிறது. நாங்கள் யாரையும் இவர்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தங்கள் நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளனர்.
எனவே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை மதிக்கும் அரசுதான் எங்களது தேர்வாக இருக்கும். எங்களது கோரிக்கைகளை எந்தக் கட்சி தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்டிருக்கிறதோ அவர்களுக்குத்தான் எங்கள் ஆதரவு என்று தெரிவித்தார்.
அதிமுக ஆதரவு தொழிற்சங்க நிர்வாகம் தரப்பு கூறியதாவது:
நிதி நெருக்கடியால் அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை. மத்திய, மாநில அரசுகள் அரசு ஊழியர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளது. அரசு ஊழியர்கள் யார் அவர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளார்கள் என்று நன்கு அறிவார்கள்.
இனிவரும் காலங்களில் அரசு ஊழியர்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள் நீக்கப்பட்டு அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நிச்சயம் வழிவகை செய்யப்படும்.
தபால் ஓட்டுகளின் எண்ணிக்கைகளின் முடிவில் யார் அரசு ஊழியர்களின் பக்கம் நிற்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT