Last Updated : 16 Apr, 2019 09:26 PM

 

Published : 16 Apr 2019 09:26 PM
Last Updated : 16 Apr 2019 09:26 PM

சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து சூறையாடிய கட்சி திமுக:  இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி ஆவேசம்

''திமுக ஆட்சியில் பாலியல் பலாத்கார முயற்சி, பெண் நிர்வாகி மர்ம மரணம், சாதிக் பாட்சா மர்ம மரணம் சம்பவங்கள் நடந்துள்ளன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து சூறையாடிய கட்சியாக திமுக உள்ளது'' என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் பேசினார்.

சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கேஆர்எஸ் சரவணனை ஆதரித்து, சேலம் தாதகாப்பட்டி பகுதியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேன் பிரச்சாரத்தில்  ஈடுபட்டு பேசியதவாது:

''அதிமுக என்ன செய்தது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்புகிறார். தமிழகம் முழுவதும் சிறப்பான பல நலத்திட்டங்களை வழங்கியுள்ளோம். மக்களிடம் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரிக்கும் அளவுக்கு சிறப்பான ஆட்சியை வழங்கும் கட்சியாக அதிமுக உள்ளது. சேலம் வந்த மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, கோதாவரி - காவிரி நதி நீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்துச் சென்றுள்ளார். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், தமிழகம் சோலைவனமாக மாறிவிடும், தண்ணீர் பஞ்சம் என்பது எந்த மாவட்டத்திலும் இராது.

50 ஆண்டுகால காவரி நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. திமுக ஆட்சியில் காவிரி நதி நீர் பிரச்சினைக்காக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை. ஆனால், காவிரி நதி நீர் பிரச்சினைக்காக மக்களவையில் 23 நாட்கள் தொடர்ந்து அதிமுக, பாமக எம்.பி.க்கள் குரல் கொடுத்து, உச்ச நீதிமன்றம் மூலம் நல்ல தீர்வை தமிழகத்துக்கு பெற்றுத் தந்துள்ளோம்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகாவில் காவிரி நடுவர் மன்றத்தைக் கலைப்போம் என்று கூறி, தமிழகத்துக்குக் குழி பறிக்கிறார். திமுக தலைவர் ஸ்டாலின், இது சம்பந்தமாக ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பி, தமிழக மக்களுக்கு பதில் அளிப்பாரா, அவரின் பதிலை நாட்டு மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

திமுக சந்தர்ப்பவாத, சுயநலக்கூட்டணியை அமைத்துள்ளது. இதற்கு நல்ல உதாராணமாக வைகோவைக் கூறலாம். ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த திமுக-காங்கிரஸ் கட்சி என பகிரங்கமாக குற்றம் சாட்டிய வைகோ, தற்போது, அக்கட்சிகளுடனே கூட்டணி வைத்துள்ளார்.

தேர்தலில் வைகோ அவரது சொந்த சின்னத்தில் வேட்பாளரை நிறுத்தாமல், திமுக சின்னத்தில் போட்டியிடுகிறார். ஒரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டால், அக்கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்டெர்லைட் ஆலை என திமுகவுக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்த வைகோ, திமுகவுடன் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளார்.

மதுரையில் திமுக ஸ்டாலின் டி-ஷர்ட் அணிந்து கொண்டு நடை பயணம் செய்யும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்பதற்கு இதுவே நல்ல எடுத்துக்காட்டு. திமுக ஆட்சியில் அக்கட்சியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் பலாத்கார வழக்கில் சிக்கி, நீதிமன்றத்தால் பத்து ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ளார்.  கரூரைச் சேர்ந்த திமுக பெண் பிரமுகர், ஸ்டாலினுக்குப் பழக்கமானவர், மர்மமான முறையில் இறந்துள்ளார்.

திமுகவைச் சேர்ந்த ராஜேந்திரன், கபிலன் உள்ளிட்டவர்கள் பெண்ணை பாலியல் பலாத்கார முயற்சி, செய்து, கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளி வந்துள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா நெருங்கிய நண்பர்  சாதிக் பாட்சா மர்மமான முறையில் இறந்ததாகக் கூறி வழக்கை மூடி மறைக்க முயன்றனர். இவ்வாறாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர் குலைத்து சூறையாடிய கட்சியாக திமுக உள்ளது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு ஆறடி இடம் கொடுக்கவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்கிறார். சர்தார் வல்லபாய் பட்டேல் ரோட்டில், காந்தி நினைவு மண்டபம் அருகில் பத்து ஏக்கர் நிலம் அளிக்க ஆணை பிறப்பித்தேன். மெரினா கடற்கரையில் இறந்தவர்களைப் புதைக்கக்கூடாது என்று நீதிமன்றத்தில் பொது நல வழக்கு உள்ளது. அதை மீறி அந்த இடத்தை அரசு கொடுத்தால், நீதிமன்ற அவமதிப்பதாகும் என்று சட்ட வல்லுநர்கள் அறிவுறுத்தியதை, திமுக தலைவர் ஸ்டாலினிடம் எடுத்துக் கூறினேன். அதையெல்லாம் மறைத்து விட்டு, கருணாநிதிக்கு இடம் கொடுக்கவில்லை என்று பொய்  கூறி வருகிறார்.

இரவு பகல் பாராமல் உழைக்கும் கட்சியாக அதிமுக உள்ளது. மத்தியில் நிலையான ஆட்சி அமையவும், மாநிலத்தில் மக்களுக்கு நல்லாட்சி வழங்கும் கட்சியாக விளங்கும் அதிமுகவுக்கு தேர்தலில் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும்''.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x