Published : 16 Apr 2019 12:00 AM
Last Updated : 16 Apr 2019 12:00 AM
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் வரும் 18-ம் தேதி நடைபெற இருப்பதால், அதற்கான பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். மேலும், அசாம், ஒடிசா, பிஹார், மேற்குவங்கம், சத்திஸ்கர் உட்பட பல்வேறு வடமாநிலங்களில் வரும் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால், கடந்த ஒரு வாரமாக திருப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ரயில் நிலையத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கம்ரூதின் (42) என்பவரிடம் பேசும்போது, ‘அசாமில் போதிய வருவாய் இல்லாததால், குடும்பத்துடன் வந்து உடுமலை அருகே தேங்காய் நார்த் தொழிற்சாலையில் வேலை செய்கிறேன். எனது தம்பி அங்கு வேலை செய்கிறார். அவரது மனைவி இங்கு வேலை செய்கிறார். அசாமில் பெண்களை பெரிதாக வேலைக்கு எடுத்துக்கொள்ளமாட் டார்கள். இருவர் வேலைக்கு சென் றால் மட்டுமே, குடும்பத்தை காக்க இயலும். குழந்தைகளை இங்கு படிக்க வைக்கவில்லை. அவர்கள் வீட்டில்தான் இருக்கிறார்கள். ஊருக்கு சென்றுவிட்டு, ஒரு மாதம் கழித்துதான் வருவோம். தேர்தல் வருவதால், முன்கூட்டியே செல்கிறோம்' என்றார்.
பின்னலாடை நிறுவனத்தில் பணி புரியும் பாபுசிங் (29) கூறும்போது, ‘மனைவியும், நானும் மங்கலம் சாலையில் தங்கி பணிக்கு சென்று வருகிறோம். மங்கலம் அருகே அரசுப் பள்ளியில்தான் குழந்தைகள் படிக்கின்றனர். தேர்தலுக்காகவும், உறவினர்களை பார்க்கவும் ஊருக்கு செல்கிறோம்' என்றார்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாரத் (40) கூறும்போது, ‘எங்கள் பகுதியில் தேர்தல் என்பது கிராமத்து திருவிழாபோல இருக்கும். அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்துவிடுவேன். செலவுத் தொகை அதிகரிக்கும் என்றாலும், தேர்தல் என்பதால் ஊருக்கு செல்கிறோம். ஒடிசாவில் அதிகபட்சமாக நாளொன்றுக்கு ரூ.250 வரை சம்பளம் கிடைக்கும். அனைத்து நாட்களிலும் வேலை இருக்காது. ஆனால், இங்கு தினமும் ரூ.400 முதல் ரூ.600 வரை சம்பாதிக்கலாம். தினமும் வேலை இருக்கும். அதனால்தான், குடும்பத்தை விட்டு இவ்வளவு தூரம் வந்துள்ளோம்' என்றார்.
தேர்தலில் வாக்களிக்க ஊர் செல்வதற்கு பெரும் தொகை செலவழிக்க வேண்டி உள்ளதாக, வெளிமாநிலத் தொழிலாளர்கள் கூறத் தொடங்கியுள்ளனர். பலரும் வாக்களிக்க செல்லாமல், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களிலும், சாய ஆலைகளிலும் தங்கி பணிபுரி யும் சூழல் ஏற்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் தங்கிப் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, தபால் வாக்குக்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென்ற கோரிக்கை யும் எழுந்துள்ளது.
தபால் வாக்கு கோரிக்கை
திருப்பூரில் அமைக்கப்பட்டுள்ள ஒடிசா அரசின் வெளிமாநிலத் தொழி லாளர்களின் ஆதரவு மைய அலு வலர் எம்.ராமசாமி கூறும்போது, ‘இங்கிருந்து அனைத்து தொழிலா ளர்களும், தேர்தலுக்கு செல்வது சாத்தியமில்லை. இதனால், வடமாநிலங்களில் முழுமையான வாக்குப்பதிவு சதவீதம் இருக்காது.
நன்மதிப்பைப் பெற்ற தொழிலா ளர்களை மட்டுமே ஊருக்கு அனுப்பி வைக்க நிறுவனங்கள் விரும்புகின் றன. மற்றவர்களை அனுப்ப முன்வருவதில்லை. 22 வயது 30 வயது வரை உள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகம் பேர் திருப்பூரில் உள்ளனர். அரசு ஊழியர்களுக்கு இருப்பதைபோல், வட மாநிலத் தொழிலாளர்களுக்கும் தபால் வாக்குகள் செலுத்த ஏற்பாடு செய்தால், பலரும் வாக்களிக்க இயலும். ஆனால், அதற்கு சட்டத்தில் இடம் இல்லை' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT