Published : 19 Apr 2019 12:00 AM
Last Updated : 19 Apr 2019 12:00 AM
மதுரை ஒத்தக்கடையில் பூத் சிலிப் வழங்கும் இடத்தில் நாம் தமிழர் கட்சியினர் கரும்புத் தோரணம் கட்டியிருந்தது, திமுகவினர் லேப்-டாப் மூலம் பூத் சிலிப் வழங்கியது வாக்காளர்களைப் பெரிதும் கவர்ந்தது.
உலகநேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாதிரி வாக்குச்சாவடி முன் பொம்மைகள், பலூன்களால் அலங்கரித்திருந்தனர். மதுரை ஒத்தக்கடை அரசு நடுநிலைப் பள்ளியில் 14 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டிருந்தன. வாக்குப்பதிவு தொடங்கும் முன் சோதனை ஓட்டுக்கள் பதிவு செய்தபோது வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகின. சுமார் 40 நிமிடங் களுக்குப் பிறகு வாக்குப்பதிவு தொடங்கியது. அங்கு ஒரு சில வாக்குச் சாவடி களைத் தவிர, மற்ற அனைத்திலும் மக்கள் கூட்டமின்றி வாக்களித்தனர். இந்த மையத்தில் பூத் சிலிப்களை கல்லூரி மாணவர்கள், எஸ்.பி. தனிப் பிரிவு போலீஸார் சரிபார்த்து வாக்காளர்களுக்கு வழி காட்டினர்.
இதேபோல் தொகுதி முழுவதும் 1,200 மாணவ, மாணவியர் தன்னார்வப் பணியில் ஈடுபட்டனர். இந்த வாக்குப்பதிவு மையத்தில் இருந்து 100 அடி தூரத்தில் நரசிங்கம் சாலையில் கட்சியினர் பூத் சிலிப் வழங்கினர். பூத் ‘ சிலிப் ’ களை திமுகவினர் காகிதப் பட்டியல்களைத் தவிர்த்து, லேப்-டாப், ஆன்ராய்டு மொபைல் போன் மூலம் ஆன்லைனில் வாக்காளர் பெயர் விவரம் அறிந்து ‘சிலிப்’ வழங்கினர். நாம் தமிழர் கட்சியினர் பூத் சிலிப் வழங்கும் இடத்தில் கரும்புகளைத் தோரணமாகக் கட்டி அழகுபடுத்தி இருந்தனர். அமமுகவினர் பரிசுப் பெட்டி சின்னத்துடன் 3 பேரை வரிசையாக நிற்க வைத்திருந்தனர். இது போன்ற நடவடிக்கைகள் வாக்கா ளர்களைக் கவர்ந்தது.
உலகநேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப் பட்டிருந்தது. வாக்காளர்களை வரவேற்கும் விதமாக இரு சிலைகளும், பலூன்களும் கட்டி அலங்கரித்திருந்தனர். இங்கும் வாக்குப்பதிவு நடந்தது. ஒத்தக் கடை வவ்வால் தோட்டம் வாக்குச் சாவடியில் பெண் பூத் ஏஜென்ட்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். கருப்பாயூரணி அப்பர் பள்ளி வாக்குப் பதிவு மையத்தில் 5-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் அமமுக பரிசுப் பெட்டி சின்னம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வரிசையாக இன்றி, வாக்காளர்களைக் குழப்பும் வகையில் இருந்ததாக அக்கட்சி நிர்வாகி கேஆர். சுந்தரபாண்டியன் புகார் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 27 வேட்பாளர்கள் அடங்கிய இரு இயந்திரங்கள் வைக்கப்பட்டன. முதல் இயந்திரத்தில் 13-வது சின்னமாகப் பரிசுப் பெட்டி இருந்தது. இங்கு மட்டும் பரிசுப் பெட்டி இயந்திரத்தை முதலில் வைக்காமல் இரண்டாவதாக வைத்திருந்தனர். தலை கீழாக இருந்ததால் வாக்காளர்களுக்கு குழப்பதை ஏற்படுத்தியது. அதி காரிகளிடம் புகார் செய்தும் சரி செய்யவில்லை என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT