Published : 03 Apr 2019 05:28 PM
Last Updated : 03 Apr 2019 05:28 PM

பெரம்பலூரில் மீண்டும் தலைதூக்கும் கள்ளத் துப்பாக்கி கலாச்சாரம்

ஒரு காலத்தில் நக்சல்களின் புகலிடமாக விளங்கிய பெரம்பலூர் பகுதி, கடந்த சில ஆண்டுகளாக அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கள்ளத் துப்பாக்கிகள் வைத்திருந்ததாக சிலர் கைது செய்யப்பட்டு இருப்பதன் மூலம் பெரம்பலூரில் மீண்டும் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்குகிறதோ என அச்சம் எழுந்துள்ளது.

கள்ளத் துப்பாக்கி விவகாரம் குறித்து பெரம்பலூர் மாவட்ட காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்த தகவல் வருமாறு: அரியலூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான அய்யப்பன் என்பவர் மீது அம்மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளன. கோயில் உண்டியல் திருட்டு, வாகனங்கள் திருட்டு, கட்டப்பஞ்சாயத்து ஆகிய செயல்பாடுகள் மூலம் அரியலூர் காவல்துறை வட்டாரத்தில் பிரபலமானவர் அய்யப்பன்.

இவர் தனது பாதுகாப்புக்காக கைத்துப்பாக்கி வாங்க பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வத்தை அணுகியுள்ளார். பன்னீர்செல்வம் மீது பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் பல்வேறு வழக்குகள் உள்ளன. பன்னீர்செல்வம் அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (35), கண்ணதாசன் (32) ஆகியோர் மூலம் கள்ளத்துப்பாக்கி வாங்க உதவுகிறார். பெரம்பலூரில் உள்ள வணிகப் பிரமுகர் சாதிக் அலிக்கு சொந்தமான கடையில் அமர்ந்து கள்ளச் சந்தையில் துப்பாக்கி வாங்குவதற்கான திட்டம் தொடங்குகிறது.

இக்குழுவினர், பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த தர்மேந்திரகுமார் தாஸ் (34), தீபக் (24) ஆகியோரை தொடர்புகொண்டு 2 நவீன கைத்துப்பாக்கிகளை (9 எம்எம் ரிவால்வர்) தலா ரூ.40 ஆயிரத்துக்கு வாங்கியுள்ளனர். அவற்றை அய்யப்பனிடம் தலா ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளனர். ஒரு வழக்கு தொடர்பாக அய்யப்பனிடம் அண்மையில் விசாரித்த தஞ்சாவூர் ஓசிஐயூ போலீஸார் அவரிடம் கைத்துப்பாக்கி இருந்ததை அறிந்தனர். இதையடுத்து, கள்ளச்சந்தையில் துப்பாக்கி வாங்க உதவியவர்களை பிடித்து பெரம்பலூர் போலீஸாரிடம் மார்ச் 29-ம் தேதி ஒப்படைத்தனர்.

பெரம்பலூர் போலீஸார் செய்தியாளர்களுக்கு அளித்த தகவலில், வாகன சோதனையின்போது 2 இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் அவர்களிடம் தீவிர சோதனை நடத்தியதாகவும், வழிப்பறி செய்யும் குற்றவாளிகளான அந்த நபர்கள், மிரட்டி வழிப்பறி செய்வதற்காக வைத்திருந்த 2 கைத்துப்பாக்கிகள், 15 தோட்டாக்கள், 4 கத்திகளைப் பறிமுதல் செய்ததாகவும் கூறி வழக்கை முடித்துக் கொண்டனர்.

கள்ளத் துப்பாக்கி விவகாரத்தில் தொடர்புடைய நபர்கள் முக்கிய புள்ளி ஒருவரை கொலை செய்யும் நோக்கத்துடன் இந்த துப்பாக்கிகளை வாங்கியதாகவும், அதற்கான சமயம் பார்த்துக் காத்திருந்ததாகவும் ஒரு பேச்சு உலவுகிறது. தேர்தல் சமயத்தில் கள்ளத் துப்பாக்கி விவகாரம் பெரிதாக எழுந்தால் அது ஆட்சியாளர்களுக்கும், காவல் துறைக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதால் போலீஸார் கள்ளத் துப்பாக்கி விவகாரத்தில் தொடர்புடையவர்களின் வலைபின்னல் தொடர்பு குறித்து தீவிர விசாரணை நடத்தாமல் அய்யப்பன், ஜெயச்சந்திரன், கண்ணதாசன், தீபக், தர்மேந்திரகுமார் தாஸ் ஆகிய 5 பேரை நேரடி வழக்கிலும், சாதிக் அலி என்பவரை பண மோசடி வழக்கிலும் கைது செய்து பிரச்சினையை முடித்துவிட்டனர் என்று கூறினர்.

2 வாரத்துக்கு முன்பு அரும்பாவூரைச் சேர்ந்த வரதராஜன் என்பவர் 2 துப்பாக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x