Published : 29 Apr 2019 12:00 AM
Last Updated : 29 Apr 2019 12:00 AM
ஆத்தூர் அடுத்த ஆனைவாரி அருவி நீரின்றி வறண்டு உள்ளது. இங்குள்ள ஏரியிலும் நீர் குறைந்து, பரிசல் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ள தால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஆத்தூர் அடுத்த அம்மம் பாளையம் அருகே முட்டல் கிராமத் தில் முட்டல் ஏரியும், அதனை அடுத்த கல்வராயன் வனப்பகுதியில் ஆனைவாரி அருவியும் உள்ளன. மழைக்காலத்தில் கல்வராயன் மலை மற்றும் வனப்பகுதியில் பெய்யும் மழையானது, ஆனைவாரியில் அருவியாக கொட்டும். மேலும், அருவி மற்றும் வனப்பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் தண்ணீர் முட்டல் ஏரியை நிரப்புகிறது.
சுற்றுலா பயணிகள் ஆனைவாரி அருவியில் குளித்து மகிழவும், முட்டல் ஏரியில் படகு சவாரி செய்யவும் வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது சேலத்தின் குற்றாலம் என பயணிகளால் அழைக்கப் படுகிறது.
ஆத்தூரில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் உள்ள ஆனைவாரி அருவிக்கு சுற்று வட்டார மக்கள் ஏராளமானோர் வார விடுமுறை நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் வந்து செல்வது வழக்கம். சுற்றுலா பயணிகள் வசதிக்காக வனத்துறை சார்பில் சுற்றுலா வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முட்டல் ஏரி அருகே ஓய்வறைகளும் கட்டப்பட்டுள்ளன.
தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஆனைவாரி அருவி நீரின்றி வறண்டுள்ளது. இதேபோல், முட்டல் ஏரியிலும் தண்ணீர் குறைந்து, சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால், பரிசல்கள் இயக்கம் நிறுத்தப் பட்டுள்ளது. இதனால், ஆனைவாரி அருவி மற்றும் முட்டல் ஏரிக்கும் வரும் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல் கின்றனர்.இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறியதாவது:
சுற்றிலும் குன்றுகள், வனங்கள் அடர்ந்த இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் முட்டல் ஏரி மற்றும் ஆனைவாரி அருவி உள்ளது. இங்கு பசுமைப் பூங்கா அமைத்தால், ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல முடியும். முட்டல் ஏரியை ஆழப்படுத்தி ஆண்டு முழுவதும் தண்ணீர் தேக்கினால் பரிசல், மிதி படகு ஆகியவற்றை இயக்க முடியும். எனவே, முட்டல் ஏரி பகுதியை, சுற்றுலாத் துறையினரும், வனத்துறையும் இணைந்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT